Thursday, 9 February 2012

அரண்மனைச் சிறையும்,ராஜராஜனின் பெற்றோர் நிலையும்!

        குந்தவை நாச்சியாரும் ஆதித்த கரிகாலனும் இரட்டை குழந்தைகளாக பிறந்தவர்கள்  என்றும், நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு  இல்லாத  சுந்தரசோழன்  அப்போது இஸ்லாம் மார்க்கத்தைப்  பரப்ப  வந்து,  சோழநாட்டின்  திருச்சி பகுதியில்  சீடர்களுடன் தங்கி இருந்த இஸ்லாமிய  ஞானி, தப்லே ஆலம் பாதுஷா, நத்தார் வலியார்  என்பவரது  அருளாசியால் பிறந்தவர்கள் என்றும்  பெர்சிய, பாரசீக  மொழிகளில் ஏராளமான குறிப்புகள் உள்ளன.

        நத்தார்  வலியார், ( செஸ்தான் ) இன்றைய சிரியா,  பகுதி ஒன்றின் அரசர் என்றும், அவரது இயற்பெயர்,  "சையத் முத்தத்ருதீன்"  என்றும்  குறிப்பிடுகிறது.  அவர் அடக்கமான  தர்காவின் ஆயிரமாவது ஆண்டுமலர்,  { திருச்சி, மதுரைரோடில் அவரது  தர்கா  உள்ளது } குறிப்பிடுகிறது! . ஆந்திராவில்  அனந்தபூர் மாவட்டம்,பெனுகொண்டா  என்ற இடத்தில அடக்கம் ஆகியுள்ள அவரது சீடர், பாபா பக்ருதீனுடைய வாழ்க்கை வரலாறு நூலும்  இவைகளை உறுதிப் படுத்துகின்றன! (தாரீக் அவுலியா என்ற பாரசீக நூல்  அவரது பயணங்கள், அவருக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை  சொல்லுகிறது!)

       இவைகள் தவிர, இரட்டையராக பிறந்த ஆதித்த கரிகாலன் அவரது தந்தையான சுந்தர சோழனிடம் அரண்மனையில்   வளர்ந்து வந்தார். குந்தவை நாச்சியாரை,  நத்தர்வலி  அவர்கள் தனது பாதுகாப்பில் வைத்து,  வளர்த்து வந்ததுடன்   குந்தவைக்கு" ஹாலிமா"  என்று  பெயரிட்டும் அழைத்து  வந்தார்! என்றும் பல்வேறு  தகவல்கள்  கிடைக்கிறது.

        குந்தவையை  நத்தர் வளர்த்து  வந்ததற்கு காரணம்,  குந்தவை பிறந்தபோது, போதிய வளர்ச்சி இன்றி, சிறு ஊனத்துடன்இருந்ததும், நத்தர் வலி போன்ற ஞானிகள்,   ஆயுர்வேதம் முதலிய  வைத்திய முறைகள்  அறிந்து இருந்ததால் தான்  சுந்தர சோழன்  குந்தவைக்கு    விவரம்  தெரியும்வரை  நத்தரது வளர்ப்பில்  விட்டிருந்தான் என்றும் தெரிகிறது!

          இஸ்லாமிய  பெரியவர் ஒருவரது அருளாசி, வைத்திய முறைகளால் கவரப்பட்டு, பயனடைத்த  அரசன் சுந்தர சோழனும், அவன் மைந்தன்    ஆதித்ய  கரிகால சோழனும்   எப்படி  மனுதருமத்தை  ஏற்று  ஆட்சி நடத்துவார்கள் என்று  பார்ப்பனர்கள்   எதிர்பார்க்க முடியும்? பார்ப்பன அதிகாரிகள், பிரஹ்மாதிராயர்கள்  எப்படிஅவர்களை  நம்புவார்கள்?  ஆகவே, இளவரசு பட்டம் கட்டப் பட்டிருந்த, தொண்டை மண்டலத்து  பகுதிக்கு பொறுப்பு வகித்து, காஞ்சியை மையமாக கொண்டு  ஆட்சி செய்த, ஆதித்ய கரிகாலன்  பார்ப்பன அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டான்! 

       தொண்டை மண்டலப் பகுதியில்  "கடம்பூர்  "என்ற இடத்தில இப்படுகொலை நடந்ததாக  அறிகிறோம்!  பிறகு அரசனுக்கு  செய்தி தெரியாமல் போகுமா?   தெரிந்தவுடன் பதறி துடித்து, பட்டத்து இளவரசன்  படுகொலையானது கேட்டு, அவனது உடலைப் பார்க்க காஞ்சிக்கு போவாமல் அவனால்  இருந்துவிட முடியுமா?  அப்படியே போகாமல் தவிர்த்தாலும் கூட..  அவனை காஞ்சிக்கு அழைத்துவர   உத்தமனுக்கு ஆதரவு அளித்த  பார்ப்பனர்கள், படையாளிகள் ஆகியோரால் முடியாது போயிருக்குமா? யோசித்து உண்மையைச் சொல்லுங்கள்!  

          ஆதித்தனைக்  கொன்றவர்களுக்கு  அடுத்து என்ன செய்ய வேண்டும்?எப்படி செய்ய வேண்டும்? எனபது குறித்து,  "சதியாலோசனை "செய்யாமல் இருப்பார்களா?  செய்ததால் உத்தமசோழன்  தஞ்சையில்  அரசனாகி விட்டான்!
            தஞ்சையை ஆண்ட   தலைநகராகக் கொண்டு அரசாண்ட   ஆதித்தனின் தந்தையும்  அவன்  இறக்கும்வரை அரசனாக  இருந்தவனுமான   சுந்தர சோழன் காஞ்சிக்கு வந்து,அல்லது அழைத்துவரப்பட்டு   காஞ்சி அரண்மனையில்  முடங்கிவிட்டார்! ( திருத்தணிக்கு அருகில் உள்ள வேலஞ்சேரி என்னும் ஊரில் கண்டு எடுக்கப்பட்ட  செப்பேடு, காஞ்சியில் சோழர்களின் அரண்மனை இருந்ததை உறுதிப் படுத்துகிறது!) பிறகு சில காலத்திலேயே,    காஞ்சி அரண்மனையிலேயே   இருந்து, அவர்  உயிர் துறந்தார்!

     கணவனின் இறப்பை தாங்க முடியாத அவரது மனைவியும்  ஆதித்ய கரிகாலனுடைய  தாயும் ஆகிய  வானவன் மாதேவி என்பவர்  எரியும் நெருப்பில்  விழுந்து, "உடன்கட்டை" என்கிற "சதி செயலை"  ஏற்றுக்கொண்டு  உயிர் துறந்தார்!  அதுவும் எப்படிஎன்றால், பால்குடிமாறாத,குழந்தையாகிய  ராஜராஜனை  வளர்க்க விரும்பாமல், அவனது கதி, குந்தவையின் கதி, எதிர்காலம், வாழ்க்கை  எதைபற்றியும் கவலைப் படாமல்  கணவன் இறந்த பிரிவைத்  தாங்க முடியாமல்,  எரி மூழ்கினாள் என்கிறார்கள்!

       சுந்தர சோழன் இறந்ததற்கு,  கே. எ. நீலகண்ட சாஸ்திரி அவர்கள்  என்ன காரணம் கூறுகிறார் தெரியுமா?  (சோழர்கள் நூல் பகுதி ஒன்று, பக்கம்-211 ).
         " குடும்ப வாழ்க்கையில் ஏற்ப்பட்ட பேரிழப்பால் சுந்தர சோழன்  தனது இறுதிநாட்களில் மிகவும்  பாதிக்கப்பட்டான் என்று கூறுவதுடன், சுந்தர சோழன் தானே விரும்பி (காஞ்சிக்கு வந்து தங்கி ) வடபகுதியில் தங்கி,தனது நாட்டின் விவகாரங்களை அயராது கவனித்ததாக அனுமானிக்கலாம்" என்று கூறுகிறார்!

       ஏன் அப்படி அனுமானிக்க வேண்டும்? அரசனான  அவன் தஞ்சையிலேயே தங்கி  ஆட்சி செய்திருக்க முடியும்தானே? ஏன்  அப்படி செய்ய வில்லை? உத்தம சோழன் அரசனாகி   இருக்க முடியாதே?   காஞ்சிக்கு வந்து  அயராது நாட்டின் விவகாரங்களை கவனித்தான் எனபது நம்ப முடிகிறதா?

   போகட்டும்.!  சுந்தர சோழனுக்கு ஏற்பட்டது குடும்ப வாழ்க்கையின் பேரிழப்பா? அல்லது அரசியல் அதிகார இழப்பா?  ஆட்சி, அதிகாரம் எல்லாம்  போனபின்புதானே.. அதனை குலைத்துவிட்ட பின்புதானே?  குடும்ப வாழ்க்கை பேரிழப்பு எனபது உண்மையாகும்! மேலும் அதற்கு காரணமானவர்கள்  யார் என்று  சொல்லுகிறார்களா? அவர்களது நோக்கம் என்ன? எதற்காக சுந்தர சோழனுக்கு பேரிழப்பு ஏற்பட்டது? என்பதை எல்லாம் யாரும் சொல்ல முன்வரவில்லை! 

    எனவேதான் நான் சொல்லவேண்டிய  அவசியம் ஏற்பட்டு உள்ளது!             " சுந்தரச் சோழன் சிறைபிடிக்கப் பட்டு, காஞ்சி அரண்மனையின் ஒருபகுதியில் சிறைவைக்கப் பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு  கொல்லப்பட்டான்!  அவன் கொல்லப்பட்ட  உடன்,   அவனது மனைவி வானவன் மாதேவி  எரியும் நெருப்பில் தள்ளப்பட்டு, கொலையானார்! " என்பதே உண்மையாகும்!  ஏனெனில்,ஆட்சி, அதிகாரத்தை அடையத்துடித்த உத்தம சோழனும், உடந்தையாக இருந்த, பார்ப்பன பாசிசவாதிகளும்  அவ்வாறு செய்வதற்குதான் வாய்ப்புகள் அதிகம் இருந்துள்ளது!

       இதனை உறுதிப் படுத்தும்  சான்றாக, காஞ்சி அரண்மனைக்கு  உத்தமச் சோழன் வந்து, அவனது ஆட்சியில்  பார்ப்பனர்களுக்கு " பிரம்மதேய நிலதானம் " வழங்கிய வரலாற்று  சான்றுகள் உள்ளன!

     அது எல்லாம்  இருக்கட்டும்  எல்லா மதங்களையும்  சமமாக பாவித்து , சமயப் பொறையுடன் அரசாண்டவன்,  சுந்தரசோழன் என்று அறியவருகிறதே! வரலாறு ஆய்வாளர்களும் சொல்லுகிறார்களே, அவர்களுக்கு இந்தபார்ப்பனர்களின்  சதிச் செயலும், மன்னனுக்கும்,இளவரசனுக்கும்  ஏன் ஒட்டுமொத அவனது வாரிசுகளுக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளதே!  அதனை தெரிந்து கொண்டு  அமைதியாகவா இருந்தார்கள்?

       சாதாரணமாக அரசியலில் இருக்கும்  ஒரு வட்ட செயலாளரோ, மாவட்டமோ, ஏன்அரசியல்பின்புலம் உள்ள  ஒரு ரவுடி  கொல்லப்பட்டுவிட்டால் கூட  கடை அடைப்பு, ஆர்ப்பாட்டம், என்று நாட்டை  அமர்களப் படுத்தும் மக்களாயிற்றே! சர்வ  அதிகாரம் உள்ள சோழ அரச குடும்பத்திற்கு  ஏற்படுத்தப் பட்டுள்ள  கொடுமைகளைப் பார்த்துகொண்டு, சும்மாவா இருந்திருப்பார்கள்?

     அரச குடும்பத்து ஆதரவாளர்கள், பிற சமய மக்கள், அரச படையினர், நாட்டு குடிமக்கள் எல்லோரும்  எதுவும் நடக்காதது போல  அமைதியாகவா இருந்திருப்பார்கள்? மிகப் பெரிய போராட்டம்,கலவரம், புரட்சி ஏற்பட்டு இருக்காதா?நிச்சயம் ஏற்பட்டு இருக்கும்! ஏற்பட்டு இருந்தது! 

    அப்போது சோழ நாடே  இரண்டுபட்டு  நின்றது! தெருவெங்கும்  ரத்த களரியானது! அன்று தொடங்கிய போராட்டம்  வரலாற்றில்  900 - ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது!  ஏன் இன்றும் கூட அவற்றின் எச்சங்களாக  அங்கொன்றும்  இங்கொன்றுமாய்  தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது!  
 
      ஆனால் வரலாற்றில்  அதைப் பற்றி வரலாறு தெரிந்தவர்கள் வாய் திறக்கவில்லை! வரலாற்றில் அப்போது நடந்ததாக பதிவு செய்யவில்லை! 

  அதனை அடுத்து பார்ப்போம்!

  

9 comments:

 1. ஐயா, தாங்கள் எழுப்பும் நியாயமான கேள்விகளும், எழுதும் யூக வரலாறும், விறுவிறுப்பாக உள்ளது. (வரலாறு என்பதே யூகம் தானோ :) )
  அதேநேரத்தில் என் கேள்விக்கு நீங்கள் ஏன் பதில் சொல்ல மறுக்கிறீர்கள் என எனக்கு புரியவில்லையே.
  நீங்கள் என்னுடைய பின்னூட்டத்தை பார்க்கவில்லையா? நேரம் இல்லையா? அல்லது பதில் அளிக்க விருப்பம் இல்லையா?

  // குந்தவை நாச்சியாரும் ஆதித்த கரிகாலனும் இரட்டை குழந்தைகளாக பிறந்தவர்கள் என்றும், நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாத சுந்தரசோழன் அப்போது இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்து, சோழநாட்டின் திருச்சி பகுதியில் சீடர்களுடன் தங்கி இருந்த இஸ்லாமிய ஞானி, தப்லே ஆலம் பாதுஷா, நத்தார் வலியார் என்பவரது அருளாசியால் பிறந்தவர்கள் என்றும் பெர்சிய, பாரசீக மொழிகளில் ஏராளமான குறிப்புகள் உள்ளன....//


  ஐயா தாங்கள் கூறும் வரலாற்றில் பிழை உள்ளதாக அறிகிறேன்.
  ராஜ ராஜ சோழன் பிறந்தது 947 . அவரது அண்ணன் பிறந்தது குறைந்தது ஓராண்டு முன்பு இருக்க வேண்டும்.

  அது ஒரு புறம் இருக்க

  நீங்க கூறும் தப்லே ஆலம் பாதுஷா, நத்தார் வலியார் என்பவர் பிறந்ததோ 956 என்றும் 959 என்றும் கூறப்படுகிறது.
  எப்படி இருந்தாலும் அவர்கள் பிறந்து பத்து வருடம் கழித்து தான் இவர் பிறந்ததாக கூறப்படுகிறது. இவரது அருளால் ஆதித்தன் பிறந்தான் என்பதை ஏற்க்க முடியவில்லையே..

  வரலாற்றை பிழை இன்றி எழுத முயலுங்கள்...என்னுடைய கூற்றில் தவறு இருந்தாலும் சுட்டி காட்டுங்கள்.
  உங்களின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

  நன்றி

  ReplyDelete
 2. புரட்சி மணிக்கு,எனது மெயிலில் தமிழ் வராது! இந்த பதிவுகள் குறித்துஇவை முடியும் வரை யாருக்கும் விளக்கம் சொல்ல்வது இல்லை என்று இருக்கிறேன் காரணம் விளக்கம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கும்!


  ராஜ ராஜன் பிறந்தவருடம் 947 -என்று யார் உங்களுக்கு சொன்னது? போகட்டும் அவன் ஆட்சிக்கு வந்தபோது யன்ன வயது? ஆதித்தன் படுகொலையாகும்போது, நீங்கள் குறிப்பிட்டு இருக்கிற வயதில் பிறந்தவன் என்றால் 22 அல்லது 23 வது இருக்கவேண்டும். அவனும்சேவூர் போரில் கலந்து கொண்டு இருப்பான்! ஆதாரங்கள்உறுதி படுத்தி இருக்கும்! போகட்டும் உத்தம சோழனை அரியணையில் ஏற விட்டு இருப்பார்களா?

  இன்றைய பதிவில் அவன் பால்குடி மாறாத குழந்தை என்று குறிப்பிட்டு உள்ளதை கவனிக்க வில்லையா? நத்தார் பிறந்ததாக நீங்கள் குறிப்பிடும் வருடம் அவர் தென்னகம் வந்த வருடம். தவிர ஹிஜ்ரி ஆண்டு,ஆங்கில ஆண்டு வேறுபாடுகள் இருகின்றன.உங்கள் சந்தேகங்களை குறித்து வாருங்கள் முடிவில் உங்கள் சந்தேகங்கள் குறைந்து போயிருக்கும்! மீதம் உள்ளதற்கு, இறுதியில் விளக்கம் தருகிறேன்!

  ReplyDelete
 3. உத்தம சோழன் மொத்தம் 12 ஆண்டுகள் தான் ஆட்சி புரிந்தான் என்று வரலாறு கூறுகிறது நீங்கள் கூறியபடி உத்தம சோழன் பதவி ஏற்கும் போது ராஜா ராஜா சோழன் பால்குடி மாறாத குழந்தை என்றால் அவன் பதவி ஏற்கும் போது 13 அல்லது 14 வயது தான் இருக்க வேண்டும் உங்களின் கூற்று படி... ஆனால் வரலாற்று படி ஆதித்த சோழன் இறக்கும் போது ராஜா ராஜா சோழன் வாலிப வயதில் இருந்தான் என்றும் அரச பதவி வேண்டாம் என்று மறுத்தான் என்றும் வரலாறு கூறுகிறது.. இதை பற்றி தாங்கள் விளக்கமாக சொல்ல முடியுமா ?

  ReplyDelete
 4. இந்த வயது குழப்பம் தீர்ந்தால் நன்றாக இருக்கும்

  ReplyDelete
 5. சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவுவதாக....
  அன்பின் சகோ ஓசூர் ராஜன்,
  சில வரலாறுகளை நாம் படிக்க படிக்க நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும். நம்மையறியாமலே அதனோடு ஒன்றிப் போக செய்து விடும். வரலாற்றின் மறைக்கப்பட்ட பகுதிகளை தோண்டி எடுக்க தாங்கள் எடுக்கும் முயற்சி என்னை வியக்க வைக்கிறது. நீங்கள் கூறுகிற தகவல்கள் முற்றிலும் சரியான வரலாறு என்று வரலாற்றாய்வாளர்கள் தான் உறுதிப்படுத்த வேண்டும். இந்த தொடர் முடிந்த பிறகு இதை புத்தகமாக வெளிவர முயற்சி செய்யுங்கள் சகோதரரே. (கொஞ்சம் எழுத்து பிழைகளையும் கவனித்து கொள்ளுங்கள் ராஜன். எழுத்து பிழைகள் படிக்கும் சுவாரசியத்தை குறைக்கிறது.)

  ReplyDelete
 6. Best article Bro. I am waiting for your next post.

  ReplyDelete
 7. உத்தம சோழன் ஆட்சி செய்த ஆண்டு , பதினைந்து ஆண்டுகள் 970 -985 ,என்று பதிவிலேயே குறிப்பிடப் பட்டு உள்ளது. கவனிக்காமல், அவன் ஆட்சி செய்தது பனிரெண்டு ஆண்டுகள் என்று நினைத்து சந்தேகம் கேட்டால் எப்படி பதில் சொல்வது? தவிர ஆதித்ய கரிகாலன் கொலைக் குறித்து,அவனது தம்பி,ராஜராஜன் ஆட்சிக்கு வந்த பிறகு, பதினைந்து ஆண்டுகள் கடந்த பிறகு கண்டுபிடித்தான் என்று சொல்லப் பட்டுள்ளது ! சோழர்கால சமயம் நூலை எழுதிய டாக்டர் ,பதமாவதியும் அவ்வாறே குறித்துள்ளார்!  ராஜ ராஜன் பால் குடிமாறாத குழந்தை என்று குறித்தால், அவனுக்கு ஒரு வயதுதான் இருக்கும் என்று கற்பனை செய்வது தவறு! விவரம் அறியாத சிறுவனாக {பன்னிரண்டு வயது வரை பாலப் பருவம் }இருந்தான் என்பதே பொருளாகும். . சுந்தரச் சோழனும் வானவன் மாதேவியும் இறக்கும்போது ராஜராஜனுக்கு வயது ஏழு என்று குறிப்பு இருக்கிறது!

  இது போல சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துக் கொண்டு இருந்தால் எனது பதிவை, நான் சொல்லவரும் கருத்துகளை சொல்ல முடியாது,தேவையற்ற தாமதம் ஏற்படும் என்பதால் தயவு செய்து விளக்கங்களை கேட்பதை இறுதியில் வைத்து கொள்ளுங்கள் ! ப்ளீஸ்!

  ஆர்வமுடன் படிக்கும் உங்கள் அனைவருக்கும் எனது பணிவான நன்றி!

  ReplyDelete
 8. ஐயா,
  தவறு என்று தெரியவரும் பொழுது அவப்போழுது தீர்த்து கொள்வதே சரியாக இருக்கும். இருப்பினும் நீங்கள் இதில் தவறு ஏதும் இல்லை என உறுதியாக நம்புவதால் தொடார் முடிவடையும் பொழுது இந்த பிரச்சனை தீரலாம். பொறுத்திருந்து பார்ப்போம். நன்றி

  ReplyDelete
 9. வரலாறு படித்தேன், அத்தனையும் ஆய்ந்த உண்மைகள், ஓசூர் ராஜன் ஐயா அவர்களுக்கு பல அறிய நூற்களில் கிடைத்த இத்தனை தகவல்கள் எப்படி கிடைத்தன என்று எண்ணி வியக்கிறேன். வாழ்க உங்கள் சேவை.

  ReplyDelete