Thursday, 20 September 2012

நாடும் நடப்பும் இப்படி இருக்கு!

       ஒருவழியா  திரிணமுல் காங்கிரஸ் மதிய அரசுக்கு தந்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து  முடிவுக்கு வந்துவிட்டது தெரிகிறது!

          அசுர பலத்துடன் மேற்குவங்கத்தில் ஆட்சி செய்யும் மம்தாவுக்கு  உள்ள தைரியம் பாராட்டத் தக்கதுதான்! ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு வெளியானபோது  எதிர்ப்பு தெரிவித்து,ஆதரவை வாபஸ் பெற நினைத்தவர் மம்தா பானர்ஜி! இதனால்..  இனி, மம்தாவை நம்பினால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதை காங்கிரசும் உணர்ந்து உள்ளது!

     எனவே, அது.. பிற கூட்டணிக்கட்சிகளுடன் நெருக்கம் காட்டி,ஆட்சியை தக்க வைத்துகொள்ளும்  சூழ்ச்சியைக் கடைபிடித்து வருகிறது!  மம்தா அளித்துவரும்  ஆதரவை  விளக்கிக் கொண்டாலும் கூட  மதிய அரசு  கவில்துவிடாது என்பதும், காங்கிரஸ் ஆட்சிக்கு உடனடியாக ஆபத்து நேரிடாது என்றும் உறுதியாக நம்பலாம்!

    காங்கிரஸ் கட்சி  இதனை நன்கு அறிந்திருப்பதாலேயே, உயர்த்திய டீசல் விலையைக் குறைக்க மறுத்துவருகிறது. சிலிண்டர் மானிய கட்டுப்பாட்டை தளர்த்த மறுத்து வருகிறது! சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டு அனுமதியை திரும்ப பெற மறுத்து பிடிவாதமாக உள்ளது! காங்கிரசின் இத்தகைய போக்குக்கு  உதவியாக  அதன் கூட்டணிகட்சிகளின்  செயல்களும் இருந்துவருகின்றன .

     காங்கிரசின் கூட்டணியில் நீடித்துவரும்  தி.மு.க, சமாஜ்வாதி காங்கிரஸ் போன்ற கட்சிகளும், அநியாயத்துக்கு முட்டுகொடுக்க தயாராக உள்ள  முலாயம் சிங் யாதவ் ,லாலு பிரசாத் யாதவ் போன்றவர்களும்  தயாராக  உள்ளனர்!   காங்கிரசின் முடிவுகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும்  அதனை  பேருக்கு விமர்சனம் செய்துவிட்டு, பிறகு கண்டுகொள்ளாமல்  விட்டு விடுவதை,  காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சிகளும், கூட்டுறவுத் தலைவர்களும்  வாடிக்கையாக கொண்டுள்ளன!

     "நான் அடிப்பது போல நடிக்கிறேன், நீ அழுவதுபோல நடித்தால் போதும " என்று  செயல்பட்டு வருகின்றன!

   விலைவாசி உயர்வா? மத்திய அரசை கண்டித்து அறிக்கைவிட்டால் போதும்! பெட்ரோல் டீசல் உயர்வா? கண்டனம் தெரிவித்துஊடகங்கள் மூலம்  பேசினால் போதும். உர விலை ஏற்றமா? தண்ணீர் பிரச்சனையா? நெசவாளர்கள்  பிரச்னையா? விவசாயிகள் பிரச்னையா? எல்லாவற்றுக்கும் கண்டன ஆர்பாட்டம், இல்லையெனில் ஒருநாள் அடையாள அணிவகுப்பு, "பந்த்" என்று  ஏதாவது ஒருவகையில் மத்திய அரசுக்கு  நமது எதிர்ப்பைக் காட்டிவிட்டு,  அப்புறம் பிரச்னை தீர்ந்ததுபோல  நடந்து கொள்கின்றன!

     ஆதர்ஷ் ஊழல் விவகாரம் வெளியானபோதும், காமன் வெல்த் விளையாட்டு முறைகேடுகள்  வெளிவந்தபோதும், 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தேசமே  வெட்கி, தலைகுனிந்த போதும், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றபோதும்  இந்த கட்சிகள்  கண்டித்து,ஒப்பாரி இட்டன! பிறகு ஒதின்கிக்கொண்டு,வழக்கம்போல  காங்கிரசுக்கு ஆதரவு அளித்துவருகின்றன!

    நிலகரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டிலும் அவ்வாறுதான்  இருந்து வருகின்றன! இப்போது சில்லறை வாணிபத்தில் அந்நிய  நேரடி முதலீட்டு அனுமதியிலும் அவ்வாறே செயல்பட்டு வருகின்றன!

         இவைகளில் இருந்து நமக்கு தெரிவது என்னவென்றால்  எல்லா கட்சிகளும்  காமராஜர் சொன்னதுபோல,  "ஒரே குட்டையில்  ஊறிய மட்டைகள்" என்பதுதான்!

      மக்களின் நலனினோ,தேசத்தின் பாதுகாப்பு, முன்னேற்றம் குறித்து எந்த கட்சியும் இன்றைய  தலைவர்கள் எவரும்  பெரிதாக கவலைபடுவதில்லை என்பதுதான்!

      இதனை  நன்கு உணர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி,  "நித்திய கண்டம்  பூரண  ஆயுசு"  என்பதுபோல ஆட்சியை நடத்திவருகிறது! கிடைத்தவரை  லாபம்  என்ற எதிர்பார்ப்பில்  காங்கிரசுக்கு  மற்ற கட்சிகள் ஆதரவு அளித்து,ஆதாயம் அடைந்து வருகின்றன!

     இவர்களை நம்பியுள்ள மக்கள்தான் விழிபிதுங்கி,மனம் புழுங்கி தவித்து வரும்  நிலையில் உள்ளனர்!

ஈரோடு தமிழன்பன் ஒரு திரைபடத்திற்கு பாட்டு எழுதி இருந்தார்:

      
       கையில காசு,வாயில தோசை..
       குத்தினேன் முத்திரை,கொடுத்தாங்க சில்லறை!
       வாழ்க ஜனநாயகம்! வாழ்க ஜனநாயகம்!! 

        ஜனங்க என்ன ஆனா என்ன அண்ணாச்சி,         நமது ஜனநாயகம் வாழ்தால் போதும் அண்ணாச்சி !

    அவர் எழுதியபாட்டு போலத்தான்  நடக்குது, நம்ம.. இந்திய ராஜாங்கம் !?

Tuesday, 18 September 2012

தீக்குளிப்பு என்பது போராட்டமா?அல்லது சமூக அவலமா?


        சேலம் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் விஜயராஜ் என்பவர்,இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தீக்குளித்து உள்ளதாக நாளிதழ் செய்தி வேதனைத்தீ  மூட்டுகிறது!

          முன்பு செங்கொடி,முத்துகுமார் ஆகியோர்கள் இதுபோலவே  அரசியல் காரணத்துக்காக,அரசியல் போராட்டத்தின் அங்கமாக கருதி,தங்கள்  அங்கங்களில்  தீமூட்டி கொண்டு,இன்னுயிர் நீத்தார்கள்! இப்போது சேலம் விஜயராஜ் என்பவர் தீயிட்டுக் கொண்டுள்ளார்!

            தீக்குளிப்பு செயல்கள், அரசியல் போராட்டத்தின் ஒருபகுதியாக ஆக்கப் பட்டு விட்டதாக தோன்றுகிறது! இன்ன காரணத்துக்காக,  இவர் தீக்குளித்தார்  என்று நாளிதழ்களில்,ஊடகங்களில் இப்போதெல்லாம் செய்திகள் அதிகம் வருகிறது!

       தீக்குளிப்பு எனபது ஒரு போராட்டவகையா? போராட்ட வகை என்றாலும் அது நியாயமான போராட்டமா?  என்று நம்மில் பலரும்  எண்ணிப் பார்க்கவேண்டும்! சமூக ஆர்வலர்கள், அரசியல் அறிஞர்கள்,மனித நேய பண்பாளர்களும் தங்கள் கவனத்தை இந்த விசயத்தில் செலுத்த வேண்டும்!

     முன்பு ,வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்துகொள்பவர்கள்  பூச்சி மருந்து,விஷம்,போன்றவற்றை பயன்படுத்தியும்,தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டார்கள். இப்போது உடலில்  பெட்ரோலோ, மண்ணெண்ணையோ  ஊற்றி,தீயிட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து உள்ளது!

        சிறுசிறு காரணங்களுக்கும்,கோரிக்கைகளுக்கும் கூட.. இப்போதெல்லாம் சகிப்புத்தன்மை  இன்றி,   தீயிட்டுகொள்வது மக்களிடம்   சமீபத்தில் அதிகரித்துள்ளது..மக்களின்  இத்தகைய போக்கு சமூக சீரழிவைக் கட்டுவதுடன் கவலை  அளிப்பதாகவும் உள்ளது!

       தீக்குளிப்பு நிகழ்சிகள் தடுக்கப்பட வேண்டிய சமூக அவலம் எனபது எனது கருத்தாகும்!  தீக்குளிப்பு  போன்ற செயல்களை தடுத்து நிறுத்துவது நமது அவசிய கடமை என்று நினைக்கிறேன்! குறித்து யாருக்கும்  இதைப் பற்றி நாம் இன்னும் போதிய விழிப்புணர்ச்சி பெறவில்லை  என தோன்றுகிறது!நமக்கு தீக்குளிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பதிலாக,அதனை தடுக்கும் கடமையுள்ள,மக்களின் நலத்தை பேணவேண்டிய, அரசியலார்களும்,  ஆட்சியாளர்களும்  தீக்குளிப்பாளர்களை( இறந்தவர்களை) தியாகிகள் ஆக்கி,அவர்களின் குடுப்பதுக்கு நிவாரணம் வழங்குவதும்,நினைவுநாள் நிகழ்சிகள் நடத்துவதும்தீக்குளிப்பு போன்ற சமூக அவலங்களை  மறைமுகமாக   ஊக்குவித்து வருவதாக எண்ண  வைக்கிறது!

       இதுபோன்ற அரசின் செயல்கள் ஒருவகையில்  தீக்குளிப்பு சம்பவங்களை மேலும்  அதிகரிக்க வைக்கிறது எனபது உண்மையாகும்!

           மனித வாழ்வு எனபது  மகத்தான ஒன்று! நம்மை சுற்றியுள்ள சக மனிதர்களுக்கு, சமூகத்துக்கு  நல்லமுறையில் பயன்படுத்துவது  மிக சிறந்த வாழ்க்கை முறையாகும். அதனை விடுத்தது, உணர்ச்சிவசப்பட்டு, அற்ப காரணங்களுக்காக  உயிரைப் போக்கிக் கொள்வது  வீரமும் இல்லை,விவேகமும் இல்லை! கோழைத்தனம் ஆகும்!

        வாழ்வதற்காக பிறந்த யாரும்  இயற்கையாக ஏற்படும் மரணம் வரை வாழ்வதே,  வாழ்க்கையின் உண்மையான தத்துவமாகும்! அதை நினைக்காமல்  தற்கொலை செய்துகொள்வதும், அதுவும் தீக்குளிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு,உயிர் விடுவது தவறான செய்கையாகும்!

      தற்கொலை,தீக்குளிப்பு  போன்ற செயல்களை எந்த மதமும் ஆதரிப்பது இல்லை! ஏற்பதும் இல்லை.!!  மனித நேயம்,அன்பு,கருணை,சகோதரத்துவம் ஆகியவற்றை போதிக்கும் அனைத்து  மதங்களும்  மனிதர்களும் ஏற்கமுடியாத செயலை,    எக்காரணத்தைக் கொண்டும் செய்யாமல் இருக்க முன்வரவேண்டும்! தற்கொலை,தீக்குளிப்பு செயல்களை தடுக்க முற்பட வேண்டும்  அது குறித்து விழிப்புணர்வை  ஏற்படுத்த அரசும்,மற்றவர்களும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்!

உயிர், மனிதநேயம்,வேண்டுகோள்Saturday, 15 September 2012

முதலாளியே வருக,எங்களைக் காத்தருள்க!

      கிராமங்களில் அடுத்தவரின் இன்ப,துன்பங்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத,இரக்கம் அற்றவர்களை,சுயநல பேர்வழிகளைப் பற்றி சொல்வதற்கு என்றே,ஒரு பழமொழி இருக்கிறது! உங்களுக்கும் அது தெரிந்திருக்கும் என நினைக்கிறன். "பொண்ணு செத்தா என்ன மாப்பிள்ளை செத்தா என்ன? மலைக்கு பணத்தைத் கொடுக்கணும்!"என்பார்கள்!  இத்தகைய மன நிலையில் நமது மதிய அரசு இருந்துவருவதாக தெரிகிறது!

     அதாவது மக்களின் துயரங்களை,அவர்களது வேதனைகளை, வாழ்க்கையைப் பற்றிய அக்கறையின்றி, தான்தோன்றித் தனமாக செயல்பட்டு வருகிறது என்பதையே  மதிய அரசின் சமீப அறிவிப்பான  டீசல் விலையேற்றமும் ,ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் சமையல் எரிவாயுவுக்கு  மட்டுமே அரசு மானியம் என்று அறிவித்து உள்ளது !

        மக்களுக்கு மட்டும்தான் மானிய விலையில்)ஆறு சிலிண்டர் ! நமது  மக்கள் பிரதிநிதிகளுக்கு (எம்,பி,களுக்கு )ஆண்டுக்கு 300  சிலிண்டர்கள் வழங்கிறது,அதில் மாதரம் இல்லை,கட்டுப்பாடும் இல்லை!

         நேரடியாக மக்களை துன்புறுத்தும் டீசல்,பெட்ரோ, சமையல் எரிவாயு போன்றவை குறித்தும்,அதனால் சரக்கு கட்டண உயர்வு,விலைவாசி உயர்வு என்று அல்லாடும் மக்களைப் பற்றி கவலை கொள்ளாத மதிய அரசு, நிலக்கரி சுரங்கங்களை கட்டணம் இன்றி  தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்குவது பற்றி கவலை படுவதில்லை! தனியார்கள் அரசாங்கத்தின், தனித்த கவனத்தில் இருக்கும் செல்வச் சீமான்கள், செல்லப் பிள்ளைகள் அல்லவா? அதனால்தான் அவர்களுக்கு இந்தகைய சலுகைகள் வழங்கப் படுகிறது!  மூன்று ஆண்டில்    கார்பரேட் நிறுவனங்களுக்கு இந்திய அரசு வழங்கியுள்ள வரிச் சலுகை 13,00,000 கொடிகள்!  ஆனால் ,ஒட்டுமொத்த  இந்திய மக்களுக்கு எரிவாயு  சிலிண்டர் மணியம் 37,000 கோடி  மட்டும்தான்! அதனை வழங்க அரசு முன்வரவில்லை என்று அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகிறார்!

       இது வெல்லாம் போதாது என்று.., இன்னொரு மகத்தான திருப்பணியாகஇந்திய அரசு   அந்நிய முதலீட்டை சில்லறைவணிகத்தில்     51% சதவீதம் வரை அனுமதித்து,ஒப்புதல் வழங்கியுள்ளது!

     இரண்டு மதங்களுக்கு முன் அமெரிக்க அதிபரான," பராக் ஒபமா"  இந்தியா சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க முன்வரவேண்டும்"  என்று வலியுறுத்தி  இருந்ததை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!
 பராக் ஒபாமா வலியுறுத்தி  சொன்னதை நிறைவேற்றவே, சில்லறை வணிகத்தில்  வேகமாக  அந்நிய முதலீடு அனுமதிக்கும்  திட்டத்துக்கு மதிய அமைச்சரவை  ஒப்புதல் வழங்கியுள்ளது!

   ஆமாம்,வலியுறுத்துவது  இந்தியாவின் குப்பனோ,சுப்பனோ இல்லை! அவர்கள் வலியுறுத்தினால்  கிடப்பில் போட்டுவிடலாம்.!  சர்வ வல்லமையுள்ள அமெரிகாவின் அதிபரே  வலியுறுத்திய  பிறகு, சும்மா விட்டுவிட முடியுமா என்ன?  அந்நிய முதலீட்டை 51% வரை அனுமதித்து அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடனே இந்திய பங்கு  வர்த்தகம் ரெக்கைகட்டி பறக்கத்  தொடங்கிவிட்டது! எவ்வளவு வளர்ச்சி பாருங்கள்!!

     இந்தியாவின் சுய சார்புக் கொள்கைகள் என்னாவது?என்று நீங்கள் நினைக்கலாம்! காந்தி உப்பு காய்ச்சியது,ராட்டையில் நூல் நூற்றது, அந்நிய துணிகளை பகிஷ்கரித்தது  ஆகியவைகள்  எதற்காக? என்று நினைக்கலாம்! காந்திக்கு இந்தியாவின் மீது ,இந்திய மக்களின் மீது அக்கறை இருந்தது! அவர்களை அடிமைத் தளையில்  இருந்து விடுவிக்கவேண்டும்,சுதந்திர மனிதர்களாக்க வேண்டும்  என்ற ஆசை இருந்தது! ஆகவே,காந்தி அவைகளைச் செய்தார்!

   இன்றைய  ஆட்சியாளர்களுக்கு மகாத்மா காந்திக்கு இருந்த ஆசைபோல, இலட்சியங்கள் போல எதுவும் இல்லை! இந்திய மக்களின் எதிர்காலம், இந்தியாவின் சுய சார்ப்பு, இந்திய மக்களின் வாழ்க்கை நிலை, சுதந்திரப் போக்கு   என்று  எதன்மீதும்  ஆசை இல்லை! அக்கறையும் இல்லை!  அதுகுறித்த இலட்சியங்களும்  இல்லை!!

       ஆனால், அமெரிக்க மீது தீராத காதல் மோகம்  இருக்கிறது! அதன் சொல்லுக்கு  கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்ற அடிமை புத்தி  இருக்கிறது! ஆகவே...  இன்று,  காந்திய( வியாதிகள்) ஆட்சியாளர்கள்,  இந்தியாவின் நலன் குறித்தும்,மக்களின் வாழ்க்கை நிலைகுறித்தும் கவலைகொள்ளாமல்,  அலட்சியப்படுத்தி  வருகிறார்கள்!

   கள்ளமோகமும், கள்ள உறவும் உள்ள காமுகன்,  நியாய தர்மங்கள்,ஒழுக்க உணர்வின்றி   நடந்துகொள்வதைப் போல, இந்திய  ஆட்சியாளர்கள் இருந்து வருகிறார்கள்!

     மீண்டும் நாட்டை அடிமைப்படுத்தவும், மக்களை சீரழிக்கவும் எண்ணி இதுபோல  செயல்படுகிறார்களோ?  என்று நினைக்கத்  தோன்றுகிறது! அப்படி நாட்டை மீண்டும் அடிமைபடுதுவது கூட ஒருவகையில் நல்லது என்று நினைக்கவும் வைக்கிறது!

     ஏனெனில்,அப்படி இந்தியா  அடிமைபடுவதால்  அப்துல் களம் கண்ட,இந்திய    வல்லரசு கனவு விரைவிலேயே  நிஜமாகிவிடும் என்று உறுதியாக கூறலாம்! அமெரிகாவின் நேரடி ஆட்சியில் நமது இந்தியா வந்துவிட்டால்,  அப்போதும்  இந்தியா வல்லரசு நாடுதானே?!

"முதலைத் தொடர்ந்து, முடிவொன்று தோன்றும்;
முடிவைத் தொடர்ந்து, முதலொன்று தோன்றும்! "

  - கண்ணதாசனின் கவிதை வரிகளில் சொன்னால்......,

 முன்பு ,இந்தியா அடிமைத்தளையில் இருந்து சுதந்திர நாடானது! இப்போது சுதந்திர நாடு  என்பதில் இருந்து, அடிமைத்தளைக்கு மாறுகிறது, அவ்வளவுதான்!  எனக்கு என்ன வருத்தம் என்றால்,இப்போதுஅமெரிக்காவின்   இடைத்தரகர்கள்  ஆட்சியில்  இருக்கிறோம் என்பதுதான்!

இவர்களுக்குஇடைத்தரகர்கள் ஆட்சியில் இருப்பதைவிட, முதலாளியின் நேரடி நிர்வாகத்தில் இருப்பது  நல்லதலவா?!   ஆகவே,  முதலாளியே வருக! இடைதரகர்களிடம் இருந்து எங்களைக் காத்தருள்க!!
Friday, 14 September 2012

இன்றைய அரசியலின் மோசமான நிலை!

    இந்தியாவின் அரசியல் நிலை குறித்து சற்று கூர்ந்து கவனித்தால்  அரசியல் சுய லாபம்.இன்றி,அரசியல்வாதிகளும்,ஆட்சியாளர்களும் இன்று  செயல்படுவதில்லை என்ற உண்மை தெரிய வரும்!

   பொதுமக்களின் நல்வாழ்வுக்கு தேவையான திட்டங்களை  செயல்படுத்தும் பொது,ஏன் திட்டங்கள் குறித்து அறிவிப்பதில் இருந்தே அரசியல் ஆதாயம் என்ற கண்ணோட்டம்  ஆரம்பமாகிவிடுகிறது! ஒரு சுகாதார வளாகம் கட்டுவதாக இருந்தாலும்,சாலைகள்,மேம்பாலங்கள்,பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவதில் கூட அரசியல் ஆதாயம் இருக்கிறதா என்று பார்த்தே செய்யப்படுகிறது! அதனால்தான்  பிறகு வரும் ஆட்சியாளர்கள் முந்தைய ஆட்சியாளர்களால் தொடங்கப்பட்ட திட்டங்களை கைகழுவி விட்டு விடடு புதிதாக  திட்டங்களை தொடங்கும் நிலை ஏற்படுகிறது!

கர்மவீரர் காமராஜர்  முதலமைச்சராக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சியை சொல்லவேண்டும்!இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்பெண்ணை   ஆற்றின்  குறுக்கே, புதிய ஆணை கட்ட  திட்டமிட்டு,பணிகள்  தொடங்கப் பட்டது! நிருபர் ஒருவர், "காமராஜரிடம்,அய்யா தாங்கள் பிறந்த மாவட்டமான விருதுநகர் மக்களுக்கு பயன்படுமாறு அணைகட்ட தோன்றவில்லையா?" என்று கேட்டார்!

    காமராஜர், "எனக்கு இங்கே (கிருஷ்ணகிரி பகுதியில்)அணைகட்டுவது முக்கியம் என்று  தோன்றியதால்,அணைகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது! நான் பிறந்த விருதுநகர் பகுதியில் அணை கட்ட வேண்டும் என்று... பிறகு யாருக்காவது தோன்றினால், அவர்கள் அங்கே கட்டட்டும்" என்று பதிலளித்தார்!

 மக்களுக்கு தேவையான செயல்களை  அரசியல் கண்ணோட்டம் இன்றி பொதுநல நோக்கத்தோடு செயல்படுத்தியவர், காமராஜர்!

இன்றைய ஆளுவோர்களின் குறுகிய கண்ணோட்டத்தை,  நினைக்கும்போது  வேதனை மிகுகிறது!

  ஆட்சி மாறினால்  தொடங்கப்பட்ட திட்டங்கள்  கைவிடப்படுவதும், புதிய திட்டங்களை தீட்டி, திட்டப் பகுதிகளும்,பயனாளிகளும்,பயன்பாடும் மாறுதல் செய்யப்படும் நிலையையும் பார்க்கிறோம்! முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்டு முற்றுப் பெறாத திட்டங்களில்  முடங்கும் பணமும் மக்களின்அடிப்படை  தேவையும் கேள்விக்குறியாகி விடுகிறது!  அதைப் பற்றி ஆட்சியாளர்கள் கவலைப் படுவதும் இல்லை!

 இது ஒருபுறம் இருக்க,இப்போது  அடிப்படை தேவைகளுக்காக, நியாயமான  கோரிக்கைகளுக்கு அரசின் கவனத்தை ஈர்க்க  நடத்தப்படும் ஜனநாய  வழியிலான  போராட்டங்கள்,ஆர்பாட்டங்களும்  இன்று  அரசியல்  கண்ணோட்டத்துடன்  பார்க்கப்பட்டு,அவைகளை  முறியடிக்கும் வகையில்  எதிர்போரட்டங்கள்  நடக்கும் அளவுக்கு  அரசியல் சுயநலப் போக்குடன்   மாறிவிட்டது! தேசத்தின் எதிர்காலம்  குறித்த  கவலையை ஏற்படுத்துகிறது!

         தமிழகத்துக்கு தண்ணீர் விடக் கேட்டு  தமிழர்கள் போராடினால்,தண்ணீர் விடகூடாது  என்று கர்நாடகத்தில் எதிர்போராட்டம் நடக்கிறது! கூடங்குளம் அணு உலைகள்  ஆபத்தானது!,அது வேண்டாம்!! என்று போராடினால்,  அதற்கு எதிர் போராட்டம்  நடக்கிறது!  இவைகளுக்குப் பின்புலத்தில் ஆட்சியாளர்களின் சுயநலமும்,ஆதாயமும்   காரணங்களாக இருப்பதை காண முடிகிறது! பொது நலம், சேவை,சமுதாய மேம்பாடு,நாட்டு முன்னேற்றம் போன்ற உயர்ந்த பண்புகள் இந்திய அரசியலில் இருந்து விலக்கப்பட்டு,சுயநலமும் சுரண்டலும், ஆதாயம் பெறும்   குறுக்கு வழியாக இந்திய  அரசியல் மாற்றம் பெற்றுவிட்டது!

சரி, இப்படியே ... ஒவ்வொரு போராட்டத்துக்கும், ஒவ்வொரு செயலுக்கும், ஒவ்வொரு  திட்டத்துக்கும் நாம்   எதிர்வினை ஆற்றிகொண்டிருந்தால்  என்னவாகும்?

       எதுவும் உருப்படியாக நடக்காது! "ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு  கொண்டாட்டம் "என்பதுபோல  போராட்டத்துக்கு எதிர்போராட்டம் என்று  மக்கள் தங்களுக்குள் போராடிக்கொண்டு,இருக்கும்ஒற்றுமையை மேலும்  சிதைத்துக் கொண்டு,  இருப்பார்கள்! அரசியலை தங்களது ஆதாயம் மிக்க தொழிலாக நினைக்கும் அரசியல் வாதிகளுடன் சேர்ந்துகொண்டு,அதிகாரிகளும் சுரண்டல் பேர்வழிகளும் இந்தியாவை சீரழிப்பார்கள்!

      அது தேசத்தின் முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் நல்லதல்ல!  இதனை அனைவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்! புரிந்துகொண்டு,  நியாயமான போராட்டங்களை ஆதரிக்க முன்வரவேண்டும்!  குறைந்த பட்சம் ஜனநாயக வழியில் நடைபெறும் போராட்டங்களை எதிர்க்காமல், எதிர் போராட்டம் நடத்தாமல்  இருக்க மக்கள்  முன்வரவேண்டும்!

 சுயநல,சூழ்ச்சி  அரசியலை  புரிந்து,அதனை ஒதுக்கிவிட்டு, பொதுநல எண்ணத்துடன்  பிரச்சனைகளை  அணுக மக்கள்  சிந்திக்க வேண்டும்! அப்படி  மக்கள்  தங்களுக்குள் சுயமுனைப்பு  கொள்ளாதவரை,அரசியல் சூழ்ச்சியில் இருந்து  விடுவித்துக் கொள்ளாதவரை,மக்களுக்கு ஆட்சியாளர்களால் எந்தவித நன்மையையும் ஏற்பட போவதில்லை!  பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வுகளும் கிடைக்கப்போவதில்லை!

 "  எங்கும் பிலாக்கணங்கள்,எப்பாலும் பேய்க்கணங்கள்;
    தங்குமிடம் அத்தனையும்,சரஞ்சரமாய்  முட்கதிர்கள்!
    மங்கையர்க்கும்,மானிடர்க்கும்,மண்ணிலுள்ள யாவருக்கும்;
    ஒன்றல்ல உள்ளம்! உள்ளே இரண்டு மனம்! "

கண்ணதாசன் அன்று மனிதர்களுக்கு சொன்னது,இன்றைய அரசியல் சூழலுக்கும்  பொருந்துகிறது!

   திட்டங்கள்!

Sunday, 9 September 2012

பலிகளும், பட்டாசு தொழிலும்!

   சிவகாசி பட்டாசு விபத்து சமீபத்தில் நடந்த மிகப்பெரும் சோகம்!

      இந்த ஆண்டில் பத்துக்கு மேற்பட்ட விபத்துகள்  நடந்துள்ளன! ஒன்பது முறை பட்டாசு தொழிற்கூடங்களில் விபத்து நடந்தபோதும்  கண்டுகொள்ளாத, தடுப்பு முறைகளை கடை பிடிக்காத  பட்டாசு ஆலை முதலாளிகள்,பத்தாவது முறையாக...  பல அப்பாவி தொழிலாளர்களின்  உயிரைப் பறித்த பிறகு, இறந்த உயிர்களுக்கும்,நடந்த விபத்துக்கும்  துக்கம் அனுசரிக்க போவதாக அறிவிகிறார்கள்!

          பத்துக்கும் மேற்பட்ட விபத்து நடந்து  பல உயிர்கள் பலியானபிறகு, தவறு நடந்துவிட்ட பிறகு  எதிர் காலத்தில்  இதுபோன்ற தவறு நிகழக்கூடாது  என்று காட்டிகொள்வதற்கும்,அரசும் நிர்வாகமும் சரியாக இயங்குவதாக கட்டுவதற்கும்  பட்டாசு தொழிற்சாலைகளின்  பாதகாப்பு குறித்தும், விபத்துகளைத் தடுப்பது குறித்தும்  குழுக்கள் அமைத்து ஆய்வு செய்ய போவதாக அரசும் அரசு அதிகாரிகளும்  அறிவிக்கிறார்கள்!

        தும்பைவிட்டு வாலைப் பிடிப்பதே  அரசின் வேலையாக இருக்கிறது! விபத்து போன்ற விபரீதங்கள் நடந்த பிறகு,  அரசு அறிவிக்கும் இதுபோன்ற நடைமுறைகளால்  புதிதாக எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை ! சிறிது  காலத்துக்குப் பிறகு  புதிதாக நடைமுறைப் படுத்தபட்ட விதிமுறைகள் , சட்ட திட்டங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு, தங்கள்  விருப்பம்போல் நடந்துகொள்ளவதும், அரசு அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளாமல் போவதும் வாடிக்கையாகி விடுகிறது!  அவ்வாறு பிறகு நேர்ந்தாலும்  விபத்துகளில் தொழிலாளர்கள்  இறந்துவிட்டாலும் ,  ஒரு லட்சமோ,இரண்டு லட்சமோ நிவாரணம் கொடுப்பதோடு,அரசு  தனது கடமையை முடித்துக்  கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க போயவிடும்!

       பட்டாசு போன்ற பொருட்களால் இப்படி மனித உயிர்கள் பலியாவதும் அரசு அலட்சியமாக செயல்படுவதும் ஒருபுறம் இருக்கட்டும்! உண்மையிலேயே பட்டாசு நமக்கு தேவைதானா? மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றா?
முன்பெல்லாம் ஏதோ தீபாவளி பண்டிகை என்றால்,அன்றுமட்டும்  தேவைப்படும் பொருளாக இருந்த பட்டாசு இன்று  நுகர்வு கலாச்சாரத்தாலும், சிலரின் சுயநலத்துக்கு ஆகவும்  எப்போதும் பயன்படுத்தும் பொருளாக ஆக்கப்பட்டு உள்ளது!

      இந்தியாவில்  இப்போது  ஒருவிதமான  பட்டாசுபோதை ஏற்றப்பட்டு உள்ளது!  யாராவது இறந்துவிட்டாலும்  பட்டாசு வெடிக்கிறார்கள்.! தேர்தலில் நாமினேசன் போடப்  போனாலும், போட்டுவிட்டு(? ) வந்தாலும் வெடிக்கிறார்கள்!  ஜெயிச்சா  வெடிக்கிறார்கள்.! யாராவது தலைவர்கள் வந்தால், வரவேற்க வெடிக்கிறார்கள்.! தலைவர்கள் பிறந்த நாளுக்கு வெடி வைக்கிறான் ! ஊர்வலமா? அதற்கும்  பட்டாசு வெடிக்கிறார்கள். மாநாடா  அப்போதும் பட்டாசு சத்தம் கேட்கிறது! கிரிகெட்டுல ஜெயிச்சா... சொல்லவே வேண்டாம்,  ஊரே அமர்களமாகுது ! சமயங்களில்  ஏழைகளின் குடிசைகளும் பட்டசுக்களால் எரிகின்றன!

       முன்பெல்லாம் தீபாவளிக்கு  ஒருவாரமோ,பத்து நாட்களுக்கு முன்போ பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு, வியாபாரம் நடக்கும்! ஆனால், இப்போது ஆண்டுமுழுவதும் கடைகளில் வியாபாரம் செய்யபடுகிறது! நகரங்களில் முக்கிய சாலைகள்,மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடங்களிலும் பட்டாசு குடோன்கள்  எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றப்படாமல் ஸ்டாக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது!

       எந்த நேரத்தில் எந்த இடத்தில வெடிக்குமோ?,விபத்து ஏற்படுமோ!,மனித உயிர்கள்இழப்பும்  பொருளாதார பதிப்பும்  ஏற்படுமோ? என்று  நமக்கு கவலை ஏற்படுகிறது! ஆனால் இவைகளையெல்லாம்  கவனிக்கவேண்டிய,  தடுக்க வேண்டிய அரசும் அதிகாரிகளும் அதிகாரிகள்  கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார்கள்!


        பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தும் தேவையற்ற  உற்பத்திப் பொருளான  பட்டாசு  உற்பத்தியை,இத்தனை ஆபத்துக்களுக்கு பிறகும்  ஏன் தொடரவேண்டும்? தொடர்ந்து நடத்த அரசு அனுமதிக்கவேண்டும்?அரசும் சமூக நலத்தில்,சுற்று சூழலில் அக்கறையுள்ளவர்களும் சிந்திக்க வேண்டும்!

     மக்களின் காசையும் கரியாக்கி,நமது நாட்டையும் மாசுபடுத்தும்  பட்டாசுகளை,  ஏன் உற்பத்தி செய்ய வேண்டும்? அதனால் நாட்டுக்கு என்ன பெரிய வருவாய் கிடைத்துவிடப்போகிறது? அப்படியே கிடைத்தாலும் அந்த  வருவாய் நமக்கு தேவைதானா?  பட்டாசுகளால் ஏற்படும் பாதிப்புகள், இழப்புகளுக்கு அது ஈடாகுமா? யோசியுங்கள்!

      பட்டாசு தொழில் ஈடுபடும் அப்பாவி தொழிலாளர்களுக்கு, அவர்கள்  செத்தபிறகு கொடுக்கும் அரசு கொடுக்கும்  நிவாரணங்களை...தொழிலாளர்கள்  உயிருடன் இருக்கும்போதே,  அவர்களுக்கு  வட்டி இல்லாத கடனாகவோ, உதவித் தொகையாகவோ வழங்கி,அவர்களை  பாதுகாப்பான வேறு தொழில்களை செய்யவும்,வேறு தொழிலில் ஈடுபடுத்தவும் அரசுகள் முன்வரவேண்டும்! நிரந்தரமாக பட்டாசு போன்ற மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தொழில்களை தடை செய்யவேண்டும்! அப்படி செய்யாமல்  பேருக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளால் எந்தபிரயோசனமும் ஏற்படப்போவதில்லை!!

     அப்பாவிப் பொதுமக்களின்  உயிருக்கு  அப்போதுதான் அரசுகள்  மதிப்பளிப்பதாக  இருக்கும்! இல்லையென்றால்,சிவகாசி விபத்துகள்   தொடர்வதும்  மனித உயிர்கள் பலியாவதும் தடுக்கமுடியாது!

 நடவடிக்கை!

Thursday, 6 September 2012

சுரங்க ஊழலும், அதுசொல்லும் பாடமும்!

        நிலக்கரி சுரங்க ஒதுகீட்டில் முறைகேடு நடந்துள்ளது,முறையற்ற ஒதுக்கீட்டினால்  அரசுக்கு 1,86,000,00,00,000 கொடிகள் இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று தணிக்கைக் குழு கொழுத்திப் போட்ட அறிக்கையினால் காங்கிரஸ் கட்சி விழி பிதுங்கி வருகிறது! பி.ஜே.பி, விட்டேனா பார் என்று ஒதுக்கீடு உரிமங்களை ரத்து செய்,பிரதமர் பதவி விலகவேண்டும் என்று கூறி பாராளுமன்றத்தை நடத்த விடாமல் முழக்கம் இட்டு வருவதும் தான் இன்றைய சூடான விவாதப் பொருளாக இருந்து வருகிறது!

    இதற்குமுன்  2 ஜி.அலைகற்றை ஊழல் முறைகேடுகள் குறித்து எழுந்த புகாரின் பேரிலும் ஏறக்குறைய  இதுபோன்ற நிலைமையே நீடித்தது!

   இந்திய அரசியல்வாதிகளுக்கு  ஊழலும் முறைகேடுகளும் புதியதில்லை.! சொல்லபோனால் ஊழலுக்கு எதிராக போராடுவதாக இன்று  சொல்லும்  பி.ஜே.பி-க்கும்  ஊழலும் முறைகேடுகளும் புதிதல்ல.! அந்த கட்சியின் ஆட்சி காலத்தில் சவப்பெட்டி வாங்கியது முதல் ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்கியது வரை  ஊழல் குற்றச்சாட்டுகள்  எழுந்ததை மறந்துவிட முடியாது!  பின் எதற்கு  ஆளும் காங்கிரசும்,எதிக்கட்சியான பி.ஜே.பி-யும்  இப்படி முட்டி மோதிக் கொள்கின்றன?

      எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டே  இரண்டுகட்சிகளும்  ஒன்றை ஒன்று  சாடிக் குற்றம் சுமத்தி  வருகின்றன! இதன்மூலம் இரண்டு கட்சிகளுமே மக்களின் அடிப்படை பிரச்சனைகளில்  தங்களது பங்களிப்பைச் செய்யத் தவறி வருகின்றன! தங்களுக்கு இருக்கும் நெருக்கடிகளை திசைதிருப்ப  ஊழல்,முறைகேடுகளை பயன்படுத்தி வருகின்றன! இத்தகைய போக்கு ஜனநாயகத்துக்கு மிகவும் கேடானதாகும்! அப்பாவி மக்களின் எதிர்பார்ப்புகளைப் புறக்கணித்து விட்டு, ஊழால் செய்வதில் நான் முந்தியா? நீ யோக்கியமா  என்று கேட்டு  இக்கட்சிகள் போராடுவதும்,அதனை ஒட்டுமொத்த  நாடும் மவுனமாக பார்த்துக்கொண்டு,சகித்துக் கொண்டு இருப்பதும்  சரியா?  என்று சிந்திக்க வேண்டியுள்ளது!

       முறைகேடுகளால்  இந்திய அரசுக்கு ஏற்ப்பட்டுள்ள (இழப்பு)நிதியானது  , மக்களின் அடிப்படை  திட்டங்களை செயல்படுத்த  பயன்படடவேண்டிய  நிதியாகும்! அந்த நிதி  மக்களுக்கு சேராமல் தடுக்கப்பட்டு,கொள்ளையிடப்பட்டு உள்ளது!  சிலரின் சுரண்டல்,சுயலாபத்துக்காக  அரசு செயல்பட்டு,ஒட்டு மொத்த மக்களின் நலத்துக்கு தீங்கு இழைக்கப்பட்டு உள்ளது!

அரசின் தவறான கொள்கைகளால்,முறைகேடுகளால் ஏற்படும்  வருவாய் இழப்பை அரசு எப்படி சரிசெய்யும்  என்று பார்த்தால்  ஏற்கனவே,விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் மக்களிடம் மேலும் கூடுதலாக  வரிவிதிப்புகள் செய்து ஈடுகட்டவே வேண்டியது இருக்கும்! அந்தவகையில் அரசுக்கு ஏற்படும் ஒருரூபாய் இழப்பு எனபது மக்களைப் பொறுத்தவரை  இருமடங்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் எனபது எதார்த்தமாகும்!  

       இதில் வேதனை என்னவென்றால்போராடும் அம்மக்களின் போராட்டம் எவ்வளவு நியாமானது என்பதை  நியாய உணவுள்ளவர்கள் நினைத்துப் பார்க்கவேண்டிய தருணம் இது!

    நிலக்கரி,,இரும்புத் தாது உள்ளிட்ட கனிமவளங்களை,இயற்கை வளங்களை  சிலர் சுரண்டி கொள்ளை லாபம் அடைவதையும்,அவர்களால் தங்களது வசிப்பிடங்கள்,வாழ்வாதாரங்கள்  பறிபோவதையும்  எதிர்த்து போராடும் மக்களை,  ஒருபுறம் அழித்து  கொண்டே... மறுபுறம் இத்தகைய  முறைகேடுகளை  செய்துவருவதுதான்!

     தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருவதைத் தடுக்கவும்,முறைகேடுகளைக் களையவும் வழிவகைகளை ஆராய வேண்டும்! ஊழல் அரசியல்வாதிகளின்,அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய மக்கள் ஒன்று திரண்டு போராட முன்வரவேண்டும்! உடந்தையாக இருந்த அதிகாரிகள்  அனைவரையும் தண்டிக்கவும் பதவி நீக்கம் செய்யவும் கோரி போராட வேண்டும்!
 
      நிலக்கரிசுரங்க  ஒதுக்கீடு,முறைகேட்டில் இருந்தும்,அரசுக்கு ஏற்பட்டு உள்ள வருவாய் இழப்பில் இருந்தும்  நிலக்கரி சுரங்கங்களுக்காக  தங்களது வாழ்விடங்களை இழந்து, வெளியேற்றப்படும்  அம்மக்களின் போராட்டம் எவ்வளவு நியாமானது என்பதை   நியாய உணவுள்ளவர்கள் நினைத்துப் பார்க்கவேண்டிய தருணம் இது!

       உரிமை கோரி போராடும் அம்மக்களின் போராட்டத்தை அங்கீகரிப்பதுடன்  நாமும் ஊழல்,முறைகேடுகளை எதிர்த்து  குரல்கொடுக்க முன்வர வேண்டியது  காலத்தின் கட்டாயமாகும்!

     இந்த மெகா ஊழலில்,ரிலையன்ஸ் நிறுவனம் 30,000 கோடி பயன் அடைந்த விவகாரமும் அரசு விமான நிறுவனத்தின் நிலத்தை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ஏற்பட்டு உள்ள 4,500 கோடி இழப்பும் காணமல் போய் விட்டது !  தவிர  குஜராத் குற்றவாளிகள் பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெறுவதும் தடுக்கப்பட்டு விட்டது!

        ஒரு ஊழலை மறைக்க வேண்டுமா? அதைவிட பெரிய ஊழலை செய்தால் போதும்  என்றாகி விட்டது,இந்திய  திருநாட்டில்!

       என்ன தந்ததாம் இந்த சுதந்திரம் ?
       அப்பனின் திருவோட்டைப்  
       புதிரனுக்குப் புதுப்பித்து தந்தது 
       இந்த சுதந்திரம்! 

        அயல்நாட்டன் இட்ட..
        விலங்குகளை உருக்கி,
        உள்நாட்டு விலங்குகளை 
        உற்பத்தி செய்தது,சுதந்திரம்!

     -கவிஞர்  வைரமுத்து கவிதை இது! இந்திய உழைக்கும் மக்களின் நிலைக்கு இன்றும்  சரியான எடுத்துகாட்டு!

Tuesday, 4 September 2012

பாசிச இந்துத்துவ படைகளும் செயல்களும் !


    உலகமெங்கும் உரிமைகோரிப் போராடும் மக்களுக்கும் இந்தியாவில் போராடும் மக்களுக்கும் இடையில்  ஒரு வித்தியாசம் இருப்பதை பார்க்க முடிகிறது!

   ஒடுக்கப்படும் மக்கள் , தங்களை தொடர்ந்து ஒடுக்கிவரும் பாசிச சக்தியை  எதிர்க்கவும், தங்களது உரிமைகளை பெறவும்,தங்களை ஒடுக்கி வரும் பாசிச சக்திகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்  கொள்ளவும் ஒரு அமைப்பாக,ஒரு  அணியாக  ஒன்றிணைந்து போராடுவது உலகமெங்கும் இருந்து வரும் நடைமுறையாகும்!

   உலகில் நிலவிவரும் இத்தகைய  நடைமுறைக்கு,  வழக்கத்துக்கு மாறாக, இந்தியாவில்  பாசிச சக்திகள் ஒன்று சேர்ந்தும்,   அமைப்புகளாக  திரண்டும் ஒடுக்கப்படும் மக்களை  மேலும் ஒடுக்க முற்பட்டுவரும்  விபரீதத்தை  இந்தியாவில்தான் பார்க்க முடியும்!

 உழைக்கும் மக்களுக்கு எதிரான  இத்தகைய அமைப்புகள்  ஒடுக்கும் மக்களை  அழித்துவிட...  அணிதிரண்டு வருகிற பயங்கரமும் கொடூரமும் இந்தியாவில் தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லை என்றே கூறலாம்!

          ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராக  அணி திரண்டு,அமைப்பாக செயல்பட்டுவரும்  இந்துத்துவ பாசிச சக்திகள், இந்தியாவில் பல்வேறு அமைப்புகளின் பெயரில்  தொடர்ந்து இயங்கியும் வருகின்றன!  இத்தகைய பாசிச சக்திக்கு  இணையாக  வேறு எந்த நாட்டின் பாசிச சக்திகளையும்  இணையாக சொல்ல முடியாது!  எனவே,   இந்தியாவில் உள்ள இந்துத்துவ பாசிசத்தை,ஏனைய நாடுகளின்   பாசிச சக்திகளுக்கு  முன்னோடி என்றே சொல்லலாம்! பாசிசத்தின் ஆணிவேர் என்றும் இந்துத்துவ பாசிசதைச் சொல்லலாம்!

     பாசிச இந்துத்துவ சக்தியானது,  ஏனைய பாசிசத்துக்கு முன்னோடியாக உள்ளதுடன், அது, இந்தியாவில் தொடர்ந்து  உழைக்கும் மக்களை  சுரண்டி,ஒடுக்கி வருவதுடன், நின்றுவிடவில்லை!   அவைகள்  உழைக்கும் மக்களையே  தங்களது நோக்கத்தை  செயல் படுத்துவதற்கு   பயன்படுத்திக்கொள்ளும் உத்தியையும்,அதாவது தங்களது பாசிச அமைப்புகளுக்குஉறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு  இந்து மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தியும் வருகிறது!  மதத்தின் பெயரால் செய்து வரும்  பாசிசம் ,சமீப காலமாக  தனது நோக்கத்தில்  வெற்றியும்  அடைந்தும் வருகிறது!

         இந்துத்துவ பாசிசத்தின் இத்தகைய  வெற்றிக்கு காரணம்  அது,ஆர் எஸ்.எஸ்  மூலம் ஊடகம்,உளவுத் துறை  என்ற இரண்டு அசைக்க முடியாத{ஆயுதத்தை } சக்தியைப் பயன்படுத்தி, இந்தியா முழுவதும் குறுகிய காலத்தில் தன்னுடைய பாசிச சிந்தனையை பரப்பியதால்தான்.!

            இன்று நாடுமுழுவதும் 44000 கிளைகளை (ஷாகாஸ்)யும் 30000 நகரங்களிலும்,ஊர்களிலும் ஆர்.எஸ்.எஸ் இயங்கிவருவதாக ஒரு  புள்ளி விவரம் கூறுகிறது!

      22,டிசம்பர் 2008-யில் வெளிவந்த,"அவுட் லுக் " இதழில்  "அருந்ததி ராய் ",         "9 IS NOT 11 AND NAVEMBER ISN'T SEPTEMBER " என்ற கட்டுரையில்-ஆர்.எஸ்.எஸ்-க்கு  45000 கிளைகள் உண்டு,அதனுடைய அறக்கட்டளைகள்,மற்றும்ஏழு மில்லியன்  தன்னார்வ ஊழியர்கள்  மூலம் இந்தியா முழுவதும்( சிறுபான்மையினர் மீது )தன்னுடைய வெறுப்புக் கொள்கையை பரப்பி வருகிறது என்கிறார்! 

   பாசிச இந்துத்துவம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள,அதாவது உழைக்கும் மக்களை  தொடர்ந்து சுரண்டிவரவும்,அவர்களை தொடர்ந்து ஒடுக்கி வரவும்   பல்வேறு செயல் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறது ! இந்துத்துவ பாசிசத்தின்  இந்த செயல்திட்டங்களை நிறைவேற்ற  பாசிச சக்திகள்   அரசியல் பிரிவு,வன்முறைப் பிரிவு,மாணவர் பிரிவு, கல்விப் பிரிவு,சிந்தனைப் பிரிவு,எழுத்துத் துறை,மதப் பிரிவு,சமுக ஒருங்கிணைப்புப் பிரிவு தத்துவப் பிரிவு  என்று பல்வேறு பிரிவுகளாக அணிதிரண்டுள்ளன.

பச்சிச சக்திகளின் இத்தகைய  பிரிவுகள் அனைத்தும் இந்தியாவை  இந்து ( பாசிச )நாடாக்க வேண்டும் என்ற  பொது சிந்தனையைக் கொண்டு,செயலாற்றி வருபவைகளே!

      இந்தியாவை   இந்து நாடாக்க வேண்டும் என்றால்,  அனைவரையும் இந்துக்களாக  மாட்டவேண்டும்!  அது இந்த்யாவின் இறையாண்மைக்கு,சமய நல்லிணக்கத்துக்கு  எதியானது மட்டுமல்ல,எப்போதும் நடைபெற இயலாத ஒன்று  என்பதால்தான்,இந்தியாவில்   இந்துவாக இல்லாத மக்களை, அதாவது முஸ்லிம்கள்,கிருத்துவர்கள் போன்ற சிறுபான்மை மக்களை தொடர்ந்து எதிர்த்து வருகிறது! சிறுபான்மை மக்களை  தொடர்ந்து  ஒடுக்க முற்ப்பட்டு வருகிறது!

பாசிச இந்துத்துவத்தின்  இந்த  ஒடுக்குமுறைக்கு  ஆதரவாகவே இந்தியாவில்  மதகலவரங்கள் நடத்தப்படுகின்றன!மதக் கலவரங்களை  பெரிய அளவில் நடத்தவும், சிறுபான்மையினரை  ஒடுக்கி,அழிக்கவும் வேண்டியது   பாசிச  இந்துவத்தின் தேவை,மற்றும்  செயல் திட்டமாக  உள்ளபடியால்,  பாசிச  அணிகள் நாடொறும்  சிறுபான்மை இன மக்கள்  தேச துரோகிகள் என்றும், அவர்கள்  தீவிரவாதிகள்  என்றும்  சாமானிய மக்களிடம்  துவேசத்தை பரப்பியும்,வளர்த்தும்  வருகிறது!

சிறுபான்மை இனத்தவர்களை  நாட்டின்  பொது  பொது எதிரியாக காட்டி வருவதால் தங்களது   சுரண்டலை தொடர முடியும் என்று பாசிச இந்துத்துவம்  நம்பிவருவதுடன்  மூலம்  உழைக்கும் மக்களை  கொண்டே  சிறுபான்மை இனத்தவர்களை  அகற்றிவிடவும் முடியும் என்ற உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளது!  இத்தகைய நோக்கத்துக்கு பயன்படுவதே," நாமெல்லாம் இந்து"என்பதும்,"இந்துக்களே ஒன்று சேருங்கள்" என்பதுபோன்ற கோஷங்கள்  பாசிச சக்திகளால்  முன்வைக்கப் பட்டு வருகின்றன!

ஆகவே ,இந்து என்றபாசிச  உணர்வு   எப்போதும்  உழைக்கும் மக்களுக்கு எதிரானது! அது ஒரு குறிப்பிட்ட சாதியினரின் சுரண்டலுக்கும்,சுக போகத்துக்கும்  உருவாக்கப்பட்டது! இந்துத்துவம் என்ற பாசிச வெறி உள்ளவரை,அதன் ஆதிக்கம் இந்தியாவில் நீடிக்கும் வரை இந்தியா கல்வி,வேலை, பொருளாதாரம்,நாகரீகம், பண்பாடு உள்ளிட்ட எதிலும் தன்னிறைவு அடைய முடியாது! உண்மையான  சமத்துவமும், ஜனநாயகமும் ஏற்படாது .  ஏழ்மையும், அடிமைத்தனமும் நீடிக்கும் நாடாகவே அது இருந்துவரும்! எப்போதும் சமஆரிமையும்,சகோதரத்துவமும் அமைதியும்  இல்லாத  நாடாகவே இந்தியா இருந்து வரும்!


குறிப்பு :இணைய நண்பர்களுக்கு வணக்கம்! 

 (எனது பதிவுகளை பார்வையிட்டு, கருத்துக்களை,விமர்சனங்களை வழங்கிய அனைவருக்கும்  நன்றி!

         இப்பதிவுகளை "பாசிசத்தின் ஆணிவேர்- பிராமணீயம்" என்ற தலைப்பில் நூலாக வெளியிட உள்ளேன்! நூலாக வரும்போது,பதிவுகளில் விடுபட்டுள்ள   ஆதாரங்கள், தேவையான சேர்க்கைகள் ஆகியவைகளுடன் எனது  தீர்வாகவும் சிலவற்றை கூறுவேன்!

            இந்துத்துவம் குறித்த தொடர்பதிவுகளால் நடப்பு  அரசியல், பல்வேறு நிகழ்வுகள் குறித்து  எழுத முடியவில்லை! இனி தொடர்ந்து நடப்பு அரசியல் குறித்து எழுதுவேன்!

- அன்புடன், ஹோசூர் ராஜன்!