Thursday, 21 February 2013

பார்க்க மறந்த பக்கங்கள்!

     அன்புள்ள மனிதர்களின் குண இயல்பு  எப்போதும் அதிகார வர்க்கங்களுக்கு இருந்ததே இல்லை! இருப்பதாக நாம் எண்ணிக்கொண்டு உள்ளது நமது பேதைமையாகும்!

    இன்று சேனல் 4-யில்  பிரபாகரனின் 12-வயது மகனின் "பச்சைப் பாலகப் படுகொலைக் காட்சி " வெளிவந்து உலக மக்களின் நெஞ்சை ரணமாக்கி உள்ளது!

       நாடு,இனம்,மொழி,நிறம் என எந்த பேதமும் பாராட்டாமல்  ராஜபட்சேவின்  கொடூர செயல்களை கண்டித்து வருகின்றனர்  கண்ணீர் விட்டு கதறுகின்றனர்!   இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும்,போர் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்,சர்வதேச நீதிமன்றம்,ஐ.நா அமைப்பு ஈழத்தமிழர்களை பாதுகாக்க முன்வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றன.

     ஆனால், இந்தியாவின் குரல் மட்டும் இந்த கொடுமைகளுக்கு எதிராக ஓங்கி ஒலிக்கவில்லை! இந்தியா இன்றுவரை கள்ள மவுனம் காத்து வருகிறது! இதனை தமிழர்கள், தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழக தலைவர்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்!

          சமீபத்தில்  இந்தியாவந்த ராஜபக்செவை  எதிர்த்து தமிழ்  அமைப்புகள், கட்சிகள் கண்டனம் செய்தன. ஆர்ப்பாட்டம் செய்தன!  ம.தி.மு.க கட்சி,  திருப்பதிக்கு  பொய்,கருப்பு கோடி காட்டியது!  ஆனால் , திருப்பதி அர்ச்சகர்கள் ராஜபட்சேவுக்கு... சிவப்பு கம்பள வரவேற்ப்பு அளித்து, அவருக்கு  ஆண்டவனின் அனுகிரகம் கிடக்க.. அர்ச்சனை செய்து, ஆராதித்து வழி அனுப்பி வைத்தனர்!

          ராஜபட்சேவை எதிர்த்து ஆர்பாட்டம்,கருப்புக்கொடி போராட்டம் செய்யும்  தமிழர்கள்,திருப்பதி அர்சகர்களுக்கு எதிராக, அவர்களின் செயல் குறித்து  கண்டனம் தெரிவிக்கவில்லை! குறைந்த பட்சம் அவர்களது செயலைப்  பற்றி  வைக்கூட திறக்கவில்லை!

      அதுபோலவே,திருப்பதி அர்ச்சகர்களும் தமிழின படுகொலைக்கு காரணமான ராஜபட்சேவுக்கு கோயிலில் இடம் இல்லை,அவரை அனுமதிக்க மாட்டோம்,என்று ராஜபட்சேவுக்கு எதிராக நடந்து கொள்ளவில்லை!

   "பொண்ணு  செத்தா என்ன?,மாப்பிளை செத்தா என்ன? மாலைக்கு பணம் வந்தால் போதும்" என்று நினைப்பவர்களை  நாம்  இரக்கமற்றவன்,அரக்க மனம் கொண்டவன், அடுத்தவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவன் என்று நினைப்போம்! திருப்பதி அர்ச்சகர்கள்  அப்படிப்பட்டவர்கள்!

        இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், இந்தியாவில் உள்ள தமிழின துரோகிகளை முதலில்  நாம் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும்! .அடையாளம் கண்டு, அவர்களை எதிர்த்து  போராட வேண்டும்.  அவர்களது ஆதிக்கத்தை தகர்க்க வேண்டும் எனபது தான்!

      நமது இனத்துக்கு எதிரான துரோகிகளை  அகற்றாமல், இனநலம் காப்பது இயலாத காரியம் ஆகும்! நமது உடலில் உள்ள  நோயை அகற்றாமல் நமது நலத்தை பாதுகாப்பது கடினமாகும்! முதலில் தமிழர்கள் இதனை புரிந்து கொள்ளவேண்டும்!

       அர்த்தமுள்ள இந்துமதத்தை எழுதிய  அமர கவி,கண்ணதாசன், கவிதை இது!
   " திருடனும் 'அரகர, சிவசிவ' என்றுதான் 
             திருநீறு பூசுகின்றான் 
சீட்டாடும் மனிதனும் தெய்வத்தின் பேர்சொல்லி,
         சீட்டைப் புரட்டுகின்றான் 
முரடனும் அரிவாளில் காரியம் பார்த்தபின் 
        முதல்வனை வணங்குகின்றான்!
முச்சந்தி மங்கையும் முக்காடு நீக்கையில் 
       முருகனைக் கூவுகின்றாள்
வருடுவார் கைக்கெல்லாம் வளைகின்ற  தெய்வம் 
     என் வாழ்க்கையை காக்கவில்லையே! "  என்றார்!

    இன்று,.....  'வருடுவார்  கைக்கு எல்லாம் வளைவது தெய்வம் மட்டுமல்ல! திருப்பதி  கோயில் அர்ச்சகர்களும்தான்! "  எனவே தான்,  அனைத்து கொடுமைகளையும்  செய்த,  தமிழ் பெண்களை கற்பழித்த, விதவையாக்கிய, அனாதைகளாக; அகதிகளாக.... துடிக்கும் துயர்களுக்கு  காரணமான  ராஜபட்ச்செவுக்கும்  துணைபோகிறது திருப்பதி தெய்வம் !


Tuesday, 19 February 2013

இதோ வந்துட்டேன்...!

    அன்புள்ள இணைய பதிவர்களுக்கு, வணக்கம்!


   நீண்ட நாட்களாக இந்த பிளாக்கில் பதிவு செய்ய இயலவில்லை ! காரணம் எனக்கு நிகழ்ந்த சிறு விபத்தால்  சிகிச்சை மற்றும் ஓய்வில் இருக்க நேரிட்டதால்! தினசரி கட்டாயமாக செய்யவேண்டிய பணிகளும் இங்கு வருவதை தடை செய்து வந்தது!

     இடையில் நடந்த எத்தனையோ நிகழ்வுகளை பற்றிய எனது கருத்துகளை,விமர்சனங்களை,வேதனைகளை பகிர்ந்துகொள்ள இயலாமல் போனது வருதமளிகிறது! மோடி மீண்டும் முதல்வரர் ஆனார்!காங்கிரசின்  ராகுல்காந்தி துணை தலைவரானார்! அஜ்மல் கசாப் அதிரடியாக தூக்கில் போடப்பட்டார் அவரைத் தொடர்ந்து,அப்சல் குரு தூக்கில் போடப்பட்டார்;அவரது உடலைக்கூட உறவினர்களிடம் ஒப்படைக்கத் தயங்கும் பலவீனமான மத்திய அரசு, மக்களைப் பற்றி கவலைபடுவதை மறந்து தன்னிச்சையாக பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தி மேலும் தொல்லைக்கு ஆளாகுவதை மட்டும் தொடர்ந்து செய்து வருகிறது!

   காவிரி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க மறுத்து வரும் கர்நாடகத்தை கேட்ட மதிய அரசுக்கு சக்தியில்லை. உச்ச நீதிமன்றம்  கூறியும் தண்ணீர் விட மறுக்கும் அரசை கலைக்கவோ,தண்டிக்கவோ அதிகாரம் இல்லாத மைய அரசாக  உள்ளது! அரசிதழில் நதி நீர் நடுவத் தீர்ப்பைகூட வெளியிட தயங்கும்  அரசு,ஊழல் செய்வதில் தயங்குவதில்லை என்பதை  ஹெலிகாப்ட்டர் வாங்கப் பேசிய கமிசனில் இருந்து தெரிகிறது!

   2ஜி,ஊழலை ஜீரணித்து, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலை மறக்கச் செய்த  மதிய அரசுக்கு, ஹெலிகாப்ட்டர் ஊழல் எல்லாம் சுண்டைக்காய் போன்றது தான்!  மக்களை பாதிக்கும் பிரச்சனையில் இருந்து,மக்களை திசை திருப்ப  மக்களின் உணர்வுகளைத் தூண்டும் படியான செயலை செய்தால் போதுமானது  என்ற விதிப்படி ஆட்சி நடக்கிறது! நாமும் விதியே என்று நொந்துகொள்ள  வேண்டிய நிலையில் இருக்கிறோம்!
      விஸ்வரூபம் போல் நாம்  மாற வேண்டியுள்ளது!