Friday, 28 June 2013

அம்பலம் ஆகும் காவி பயங்கரம்!

         சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பு உள்ளதாக  மத்திய அரசு அறிவித்து உள்ளதுடன் தீவிரவாதத்தில்  தொடர்புடைய 10 பேர்களின் பெயர்களையும் சமீபத்தில்   பகிரங்க படுத்தியது! ம‌த்‌திய அரசின் இந்த அறிவிப்பை, பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மறுக்க வில்லை  என்பதில் இருந்து  காவி பயங்கரவாதத்தை அவர்கள் செயல்படுத்தி வருவதை ஒப்புக் கொண்டுள்ளனர்!


      மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, முன்பு “தீவிரவாதம் தொடர்பாக குற்றங்களில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தொடர்புகள் உள்ளன” என்ற பொது கண்டித்த,வானத்துக்கும் பூமிக்கும் குதித்த வானர சேனைகள் வாயடைத்து அமைதி காப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்!

       மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் , “தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஷரீப்பில் நடந்த தீவிரவாத குண்டு வெடிப்பு தாக்குதல்களில், குறைந்த பட்சம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 10 பேர் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன’’ என்று தெரிவித்து அந்த 10 பேருடைய பெயர், விவரங்களை ஆர்.கே.சிங்  வெளியிட்டுள்ளார்:


         மறைந்த சுனில் ஜோஷி, ஆர்.எஸ்.எஸ்ஸின் தேவாஸ் மற்றும் முவா இயக்க‌த்‌தி‌ல் 1990 முத‌ல் 2003 வரை இ‌ரு‌ந்தவ‌ர். இவர் சம்ஜாவ்தா மற்றும் அஜ்மீர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்.

       தலைமறைவாக உள்ள சந்தீப் டாங்கே, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் இய‌க்க‌த்த‌ி‌ல் 1990 மு‌த‌ல் 2006 வரை இரு‌ந்தவ‌ர். இவ‌ர் இன்டோரை சேர்ந்தவர். சம்ஜாவ்தா, மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவ‌ர்.

        கைது செய்யப்பட்டு‌ள்ளவ‌ர்க‌ளி‌ல் லோகேஷ் சர்மா, ஆர்.எஸ்.எஸ்ஸின் கர்ய வஹாக் அமைப்பையு‌ம், சுவாமி அசேமானந்த் ஆர்.எஸ்.எஸ் வனவாசி கல்யாண்  இயக்க‌த்தையு‌ம், ராஜேந்தர் என்கிற சமுந்தர் ஆர்.எஸ்.எஸ்‌ஸின் வர்க் விசாரக் அமைப்பையு‌ம் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள்.

          குஜரா‌த்தை சே‌ர்‌ந்த முகேஷ் வசானி கோத்ரா ஆர்.எஸ்.எஸ். அமை‌ப்பையு‌ம்,  தேவேந்தர் குப்தா ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரக் அமைப்பையு‌ம்,  சந்திரசேகர் லெவே ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரக் 2007 இயக்க‌த்தையு‌ம்,  கமல் சௌகான் பிரச்சாரக்கின் கிளை இயக்க‌த்தையு‌ம், தலைமறைவாக உள்ள ராம்ஜி கல்சங்ரா ஆர்.எஸ்.எஸ் இயக்க‌த்தையு‌ம் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் ஆவ‌ர்.

    இந்த 10 பேரும் சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் மற்றும் அதன் கிளை உறுப்பினர்கள்.

        தேசபக்தி குறித்து வாய்கிழிய பேசும்    இந்த நாசகார, காவி கும்பலால்  கொல்லபட்ட  இந்திய குடிமக்கள் பல ஆயிரம்பேர்கள். இக்கும்பலால் நாசமான இந்திய உடமைகள் பல கொடிகள். ! உடமைகள் கொள்ளை அடிக்கப்பட்டு வாழ்விழந்த முஸ்லிம்கள் பல ஆயிரம் பேர்கள்.! முஸ்லிம்கள் மீது போடப்பட்டபொய்  வழக்குகள்  எண்ணற்றவை. காவி கும்பலிடம் நாட்டை ஒப்படைத்தால் சாமானிய மக்களின் நிலையை நினைத்து பார்க்க இயலவில்லை!

இது போதாது என்று  இல்லாத அமைப்புகளைஉருவாக்கி, புலனாய்வு துறை,ஊடகத்துறை மூலம்   பரப்பி,பொதுமக்களை பீதியுட்டியும் வரகின்றனர் இந்துத்துவ பயங்கரவாதிகள்  என்பது  உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் மார்கண்டேய கட்ஜு   அவகளது சமீபத்திய பெட்டியில் இருந்து தெரிய வருகிறது!      முஸ்லிம்களை தீவிர வாதிகளாக காட்டியும், இந்துக்களை ஏமாற்றி வரவும் ஆர் எஸ் எஸ் அமைப்பும் அதன் கிளை அமைப்புகளும் செய்யும் பயங்கரவாத செயல்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்!

Thursday, 27 June 2013

கலைஞருக்கு அண்ணாவின் கேள்விகள்!

        நான் அடிப்பையில் மாகா.. மெகா  சோம்பேறி.! இல்லையென்றால், கலைஞர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக  அண்ணா சமாதியில் உண்ணாநோன்பு(?) இருந்த போது கோபத்தில் எழுதிய கவிதை இது !

 கோபத்தில்  எதையும் செய்யகூடாது என்பதால்  இதனை உடன் பகிர யோசித்தேன்!  பொறுத்தது போதும் என்று பொங்கிவிட்டேன்!


  கலைஞருக்கு அண்ணாவின் கேள்விகள்!

எதையும் தாங்கும் இதயத்தை நீ,
எதற்கு கேட்டாய் தம்பி?
எனது கிளையின் முன்னேற்றத்திற்கு
இரவல் கேட்டேன் எமது அண்ணா !

ஈழத் தமிழர் இழிவு  கண்டும்
இறங்காததா? சொல் எமது இதயம்?
எல்லா தமிழர் இன்னல்களில்-உன்
 இதயத்தோடு நான்  இருக்கிறேன், அண்ணா !

இருப்பது நமக்கு ஓருயிர்-அதை
இழக்கும் தருணம் இது இல்லையா?
இருப்பதை காக்க, இன்னும் சேர்க்க;
உன் இதயம் தேவை எமதண்ணா !

பதவி நமக்கு தோள் துண்டு-என
பகர்வது தானே? நம் கொள்கை!
கொள்கை அது கோவணத்துக்கு ஆகும்;
கோடிக்கு ஆகுமா? சொல் அண்ணா!

மது மயக்கமும்,புகழ் மயக்கமும்;
தமிழர் தேவையா, சொல் தம்பி?
பதவியும் பணமும் என் உடனிருக்க,
உதவிடும் தேவைகள் அவை அண்ணா!

ஆரிய மாயைபோல் திராவிட மாயையும்
ஆகிவிட்டதோ,நம்  தமிழகத்தில்?
பதவி,பணத்தை வகுத்து தரும்,
புதிய மாயை அது  அண்ணா!

தமிழர்களின் எதிர்காலம் தடுமாறுதே, தம்பி?
தலை எழுத்தது,தவிக்கட்டுமே,  அண்ணா !
 ஏமாற்றியது என்னை மட்டுமா,சொல்தம்பி?
தமிழர் யாரும் விலக்கில்லை, என் அண்ணா!

என்னை விட கொள்கையை விட -எது
உனக்கு பெரியது,சொல் தம்பி?
கண்ணின் மணிகள் ஸ்டாலின்,அழகிரி:
கனிமொழி பெரிதாய் தெரியுது அண்ணா!

Wednesday, 26 June 2013

தி.மு.க-வுக்கு கைகொடுக்கும் ஆதரவு!

       கனிமொழி எம்.பி.ஆகிறார்.தி.மு.க-வுக்கு கைகொடுக்கும் ஆதரவால் கனிமொழி ராஜ்ய சபை தேர்தலில் வெற்றிபெறுவதும்   எம்.பி.ஆவதும் உறுதியாகி விட்டது! ஆளாய் பறந்து,  காலை பிடிக்காத குறையாக.. திமுக பிரமுகர்கள் யார் யாரையோ பார்த்து, ரகசிய  உறுதிமொழி கொடுத்து, புதிய தமிழகம்,மனித நேய மக்கள் கட்சியின் ஆதரவை பெற்றார்கள்!  பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவுக்கு ஸ்டாலின் அலைந்தும்  கூடாமல் போய்விட்டது! கனிமொழி தோற்று விடும் நிலை இருந்தது! ஆனால் காங்கிரஸ் ஆதரவு தருவதாக அறிவித்து உள்ளது!


       காங்கிரசின் கை  தி.முகவின் கனிமொழியைக் காப்பாற்றி இருக்கிறது! கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு தந்திருப்பதன் மூலம்   இனம் இனம் இனத்தோடு சேரும் என்பார்களே அதுபோல  ஊழல் ஊழலோடும்,துரோகம் துரோகத்தோடும்  சேர்க்கிறது என்பது தெரிகிறது.

         காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து வெளியேறியதும், காங்கிரசுக்கு தி.மு.க கொடுத்துவந்த ஆதரவையும் விலக்கி கொண்டதற்கு கருணாநிதி  கூறிய காரணம்,"  ஈழதமிழர்கள் விவகாரத்தில்  மதிய அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்து  வருகிறது" என்பதுதான்.! இலங்கையில் படுபயங்கரமான  போரை இந்திய அரசின் ஆதரவோடு, இலங்கை அரசுநடத்தி வரும்போது  தமிழர்கள் இலங்கையில் படும துயரத்தை பற்றி கவலை படாமல் இருந்தார். என்பதை நினைக்கும் போது,  கலைஞர் கூறியது  கடைந்தெடுத்த பொய் என்பது  இப்போது அம்பலமாகி உள்ளது!


        உண்மையில் கனிமொழி,ராஜா,தயாளுஅம்மாள்,தயாநிதி மாறன் ஆகியோர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் அரசு தி.மு.கவின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடந்து கொள்ளவில்லை என்பதாலேயே ஆதரவை விலக்கி இருகிறார்கள்!

          இப்போது தனது மகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருப்பதன் மூலம் மீண்டும் கையுடன் கைகோர்த்து,  எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருப்பது தெரிகிறது!


       காங்கிரஸ் தமிழர்களுக்கு இழைத்துள்ள துரோகத்தை நியாயபடுத்த,   "மதவாத சக்திகளால் இந்தியாவுக்கு ஆபத்து என்பதால்தான் காங்கிரசை தி.மு.க ஆதரிக்கிறது",கூட்டணி வைத்து இருக்கிறது என்று அப்போது கூசாமல் கூறுத் தயங்க மாட்டார்!

        உண்மையில் கனிமொழிக்கு காங்கிரஸ் இப்போது வழங்கி உள்ள ஆதரவுக்காக எதிர்வரும் நாடாளுமன்றத்தில் காங்கிரசுடன் கைகோர்த்து, தன்னலத்தை  தமிழர்கள்  நலமாக காட்டிவரும்    கலைஞர்  தமிழின தலைவர் இல்லை! 


Monday, 24 June 2013

அறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும்!

         திராவிட முன்னேற்ற  கழகத் தலைவர்களாக இருந்த அறிஞர் அண்ணாவையும்  கலைஞர் கருணாநிதியையும் ஒப்பிட்டு பார்த்தல் மலையளவு வேறுபாடுகள் இருப்பதை அறிந்து கொள்ளலாம்.

கடமை,கண்ணியம் கட்டுப்பாடு என்பது தி.மு.க-வின் தாரக மந்திரம்,கொள்கை முழக்கம். அண்ணாவின் காலத்தில் இருந்தது. கலைஞர் காலத்தில் இல்லாமல் போய்விட்டது.


தம்பி உடையான் படைக்கு அஞ்சான்  என்ற பழமொழிக்கு ஏற்ப தம்பிக்கு என்று தனது திராவிட நாட்டில்  அண்ணா கடித இலக்கியம் எழுதினார்.
உடன்பிறப்பே என்று முரசொலியில் சாடல்,சால்ஜாப்பு, மழுப்பல், குற்றச்சாட்டுகளை கலைஞர்  எழுதுகிறார்!


 அண்ணா கழகம் ஒரு குடும்பம் என்ற பாசத்தை தமிழர்களிடம் விதித்தார்,வளர்த்தார் !
கலைஞர் குடும்பத்தையே கழகமாக எண்ணினார்,வளர்த்தார்!


அண்ணாவின் அன்புத் தம்பியில் உண்மையான பாசமும் நேசமும் இருந்தது! கலைஞரின் உடன்பிறப்பில் வேஷமும்,நடிப்பும் இருக்கிறது.


 அண்ணா தனது அரசியல் வாரிசாக தனது குடும்பத்தில் யாரையும் முன்னிறுத்தவில்லை. தனக்கு அடுத்த தலைவராக தி.மு.கவிற்கு நாவலர் நெடுஞ்செழியனை அடையாள படுத்தினார்
கலைஞர் தனது வாரிசுகளை மட்டுமே  அரசியல் வாரிசாக,அடுத்த திமுகவின் அடுத்த தலைவர்களாக ஆளாக்கி,திணித்தார்!

அண்ணாவுக்கு தமிழர்கள் மீது அக்கறை இருந்தது,அவருடைய அரசியல் பொதுநலம் மிக்கது!
 கலைஞர் தமிழர்கள் மீது அக்கறை கொண்டவராக காட்டி கொள்ளுகிறார் இவருடைய அக்கறையும் அரசியலும் சுயநலத்தை சுற்றியது!

தமிழினம்,பண்பாடு, கலாச்சாரம் ஆகியவைகள் மீது பெருமதிப்பு கொண்டவராக அண்ணா இருந்தார்.
கலைஞரின் மதிப்பு  அவரது மானாட-மயிலாட மூலமே நாம் அரிய முடிகிறது!


அண்ணா மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு என்ற பரந்த மணம் கொண்டவர்! இளகிய இதயம் கொண்டவர்!
கலைஞர் தமிழர்களை கடலில் தூக்கி போட்டாலும் கலங்காதவர்,கட்டுமரம் போன்றவர். ( எவ்வளவு கேவலபட்டாலும் ) எதையும் தாங்கும் இதயம் பெற்றவர்!

வந்தாரை வாழவைக்கும் தமிழ் குணம் கொண்ட அண்ணாவால்  ஆளானவர்கள்,வாழ்ந்தவர்கள் ஏராளம்,!
நம்பியவர்களை,நாடி வந்தவர்களையும் ஏய்க்கும் குணமுள்ள கலைஞரால் அழிந்தவர்கள் வாழ்வு இழந்தவர்கள் ஏராளம்.

தளராத உள்ளமும் நல்லெண்ணமும் அண்ணாவின் சொத்து!
தளர்ந்த வயதிலும் வாரிசுகளின் வளமும் பதவி மோகமும் கலைஞரின் சொத்து!

 கொள்கை எனபது வேட்டி போன்றது பதவி என்பது தொழில் போடும் துண்டு போன்றது என்பதை உண்மையாக கடைபிடித்தவர் அறிஞர் அண்ணா!
வேட்டியை விட துண்டையே அதிகம் நேசித்து  வேட்டியை இழந்தும் வேதனை படாதவர் கலைஞர்!

அண்ணா வளர்த்த தி.மு.கழகம்  திராவிட எழுச்சி,சமூகநீதி, அரசியல் முழக்கம்  தமிழின அடையாளம்!
கலைஞர் வளைத்த தி.மு.கழகம். திராவிட வீழ்ச்சி,சமூக நோய்,சந்தர்ப்ப வாதம்,கார்பரேட் நிறுவனம்!

அண்ணா  தொடங்கிய தி.மு.க-  உதய சூரியன்
 கலைஞரின் தி.மு.க  ஊழல் முடைநாற்றம்!


Saturday, 22 June 2013

முஸ்லிம்களுக்கு கலைஞரின் துரோகங்கள்!

     முஸ்லிம்கள்   மற்ற கட்சிகளைவிட,  தி.மு.க-வுக்கு அதிமாக   ஆதரவு அளித்து வருகிறார்கள்!  தி.மு.க-வுக்கு முஸ்லிம்கள்  ஆதரவு தருவது தலைமுறையாக தொடர்ந்து வருகிறது!

     ஆனால், தி.மு.க-வின் தலைவரான கலைஞர் தொடர்ந்து முஸ்லிம்களைவஞ்சித்து வர தவறியதே இல்லை! இஸ்லாமிய மக்களின் ஜீவாதார உரிமைகளுக்காக அவர் செய்தது எதுவும் இல்லை!

       1989-91 இடையில் தி.மு.க-ஆட்சியில் இருந்த போது, தனது சுயநல அரசியலுக்கு  (முஸ்லிம்களை  பற்றி கவலைபடாமல்), ஜனதா தளம் பி.ஜே.பி-க்கு அதரவு அளித்தார்.  தனது மருமகன் முரசொலி மாறனுக்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் பதவி பெற்றுக்கொண்டு, பி.ஜே.பி-யின் இரத யாத் திரைகளுக்கு  ஆதரவு  அளித்தார்!  தமிழகத்தில் ராம்சீலாபூஜை, செங்கல் பூஜை யாத்திரைகள் நடத்த தனது அதிகாரத்தைப்  பயன்படுத்தி,ஆதரித்தார்!

கலைஞரின் ஆட்சியில்  வி-களத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய ஊர்களில்  முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன!  முஸ்லிம் பெண்கள் அவமரியாதை செய்யப்பட்டனர். கலைஞர் நடவடிக்கை எடுக்கவில்லை.! கலவரத்துக்கு காரணமான இராம கோபாலனை கைதுசெய்யவில்லை! ஆனால்,தேசிய பாதுகாப்பு சட்டம் உள்பட நூற்றுகணக்கான வழக்குகள் முஸ்லிம்கள் மீது போடப்பட்டன.  வழக்குகளால் பல ஆண்டுகள்  முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களின் குடும்பம் வறுமையில் வாடியது!


      கருணாநிதியே  இந்துத்துவ  சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால்,
 அடுத்து வந்த, ஜெயலலிதாவின் ஆட்சியில்  62-மதக் கலவரங்கள் நடந்தன! 
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவணம்,கைகாட்டி,போன்ற ஊர்களில் முஸ்லிம்களது 20-கோடி சொத்துக்கள் சூறையாடப்பட்டதை கலைஞர் கண்டுகொள்ள வில்லை!   முத்துப்பேட்டையில் பலலட்சம் முஸ்லிம்களின் சொத்தை  இந்து முன்னணியினர் சூறையாடியபோதும்  கண்டுகொள்ளாமல் நழுவினார்!

       நாகூர்,அத்திக்கடை,திருவல்லிக்கேணி,புதுப்பேட்டை,தேவிபட்டிணம்,
கீழக்கரை,கோவை ஆகிய ஊர்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்து முன்னணி வேட்டையாடியது! அதை தடுக்க கருணாநிதி முயலவில்லை, இராம கோபாலனை கைது செய்ய கூறவில்லை,கண்டித்து அறிக்கை விடவில்லை, இந்து முன்னணிக்கு எதிராக ஆர்பாட்டம் செய்யவில்லை,பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை, கலவரம் நடந்த எந்த ஊருக்கும் என்று கலைஞர் பார்வையிடவில்லை.!

       ஆனால், பதவி சுகத்தில் திளைத்துகொண்டு ,முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்தினார்.  "சிறுபான்மையின மக்களுக்கு சகிப்புணர்வு இல்லை" என்று திருவல்லிகேணி கலவரத்தின்போது திமிராக பேசினார்!  30-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தடா கைதிகளாகி சிறையில் வாடினார்கள்!

           பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து,மீண்டும் அவ்விடத்தில் பாபர் மசூதி கட்டவேண்டும் என்று நினைத்து  கலைஞர் செய்தது ஒன்றுமில்லை! ஆனால், காங்கிரசுடன் கூட்டணி வைக்க ஆளாய் பறந்தார்!

    சன் டி .வி-பிரச்னைக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட,தனது  சொந்த நிறுவனத்தை வளர்க்க நினைத்த கருணாநிதி, சிறுபான்மையின மக்களின் கல்விச் சலுகையை ஜெயலலிதா ரத்து செய்து சட்டம் இயற்றியபோது, கவலைப்படவில்லை!      (அப்துல் சமத்தும்,லத்திப்பும்) இரு அணிகள் ஒன்றாக சேர்ந்து இணைப்பு மாநாடு நடத்த எண்ணி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்தார்கள்.   முஸ்லிம்களின் ஒற்றுமையை வலியுறுத்தி,வழிநடத்த வேண்டிய கலைஞர்,   டாக்டர்.ராமதாஸ் வருவதால் நான் வரமாட்டேன் என்று முஸ்லிம் ஒற்றுமைக்கு உலை வைத்தார்!  பிறகு இணைந்தவர்களை (அப்துல் சமது,லத்திப் )   தனது சுயநல அரசியலுக்காக பிரித்து, முஸ்லிம் மக்களின்  நலனுக்கு துரோகம்  இழைத்தார்!

      இன்றுவரையிலும் கூட...  பி.ஜே.பி, இந்து முன்னணி போன்றவற்றின் மத துவேசம், இறையாண்மைக்கு எதிரான செயல்களைக் கண்டித்து  ஒரு ஆர்ப்பாட்டத்தையும்  செய்யாதவர்  கலைஞர் என்பது ஊரறிந்த உண்மையாகும்!

      முஸ்லிம்களை தனது சுயநல அரசியலுக்கு,ஊறுகாயாக பயன்படுத்தி வரும் கலைஞர் அவர்கள்,  இப்தார் விருந்து கூட, தனது கட்சி சார்பிலோ, தனிப்பட்ட முறையிலோ செய்தவர் இல்லை.!
           நோன்பு இருக்கும் முஸ்லிம்களிடம் காஞ்சி குடித்தும்,குல்லாய் போட்டும்,பசப்பும் வார்த்தைகளில் வாழ்த்து சொல்லியும் வருவதை மட்டும் தொடர்ந்து செய்து, முஸ்லிம்களுக்கு துரோகங்கள் செய்யவும் தவறுவதில்லை!

       சாதிக் பட்சாவை  விட ஒரு நல்ல தொண்டரை தி.மு.க-வில் பார்க்க முடியாது. அவருக்கு இழைத்த அநீதிகள்,  20-ஆண்டுகள் தி.மு.க-வுக்கு பட்டிதொட்டி எல்லாம் பம்பரமாக சுழன்று பாடுபட்ட பழனிபாபாவை,பெண் சிநேகத்தால் படுகொலை செய்யபட்டார் என்று சட்டமன்றத்தில் கூசாமல் பேசியது  எல்லாம், நெஞ்சுக்கு நீதியில் இடம்பெறாத உண்மைகள் என்பதை முஸ்லிம்கள் மறந்துவிட்டனர்!

     

Friday, 21 June 2013

அண்ணாவின் முஸ்லிம்கள் பாசம்.!

      பேறிஞர் அண்ணாவுக்கு பிறகு திராவிடக் கட்சிகள் எதுவும் முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை.! அண்ணா கூட ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முஸ்லிம்களிடம் மிகுந்த நேசமுடன் பழகிவந்தார். அதற்கு கண்ணியமிகு காயிதே மில்லத் போன்ற தலைவரின் நட்பும்,முஸ்லிம்களின் வாக்கு வங்கியும் காரணமாக இருந்தது!


     இதனால்  இஸ்லாம் மார்க்க சிறப்புகள்,முஸ்லிம் சமுதாயம்,முஸ்லிம் லீக் குறித்து பல்வேறு சமயங்களில் அண்ணா  பாராட்டி பேசினார்! அண்ணாவுக்கு அறிஞர் என்ற பட்டதை," செய்கு தம்பி பாவலர்" என்ற ஒரு முஸ்லிம்தான் வழங்கினார்!

     கடவுள் இல்லை என்று சாதித்த பெரியாரிடம் இருந்து  பிரிந்து வந்த அண்ணா," ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று  அறிவித்தார்."ஓர் இறைக் கொள்கையை ஏற்றுகொண்ட காரணத்தால் நானும் ஒரு முஸ்லிம்தான்"என்று  மிலாது நபி விழா பொதுக்கூட்டங்களிலும் ,பள்ளிவாசல் திறப்பு விழா கூட்டங்களிலும் பகிரங்கமாக பேசினார்! அண்ணாவின் இத்தகைய பேச்சுக்கள் முஸ்லிம்களை பெரிதும் கவர்ந்தது! தவிர,  முஸ்லிம்கள்  தங்களது கடவுள் கொள்கையை  ஒட்டி அண்ணாவின் பேச்சுக்களை  ஒப்பீடு  செய்ததால், மற்றவர்களைக் கட்டிலும் அண்ணாவின் மீது அதிக நம்பிக்கை வைத்தனர்!


       1967-யில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாவுக்கு, மூதறிஞர். இராஜாஜி அவர்கள் ஆதரவு  அளித்தார். பிராமணர்  எதிர்ப்பு,ஆரிய மாயை பற்றி பேசிவந்த, தி.மு.க-வுக்கு பிராமணர்களை வாக்களிக்குமாறு  இராஜாஜி சொன்னபோது, பிராமணர்கள் சிலர் அதிருப்தி அடைந்து, இராஜாஜியிடம் நம்மை கடுமையாக எதிர்த்து,பேசிவரும் அண்ணாவுக்கு வாக்களிக்க சொல்கிறீர்களே? என்று கேட்டனர். 'ஒருகையில் பூணுலைப் பிடித்துகொண்டு, மறு கையில் அண்ணாவுக்கு வாக்களியுங்கள்' என்று இராஜாஜி சொன்னபடி, அறிஞர் அண்ணாவுக்கு ஆதரவாக  பிராமணர்களும்  இராஜாஜியின் சுதந்திரா கட்சியும்  செயல்பட்டனர்! 
 
     அன்று அண்ணாவை விரும்பாவிட்டாலும் ராஜாஜியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு பிராமணர்கள் அண்ணாவுக்கு வாக்களித்தார்கள்,முஸ்லிம்களும் அண்ணா முதலவராக உதவினார்கள்!  அதன் பிறகு பிராமணர்களின் அரசியல் ஆதிக்கம்  அதிகரித்தது,  முஸ்லிம்களின் அரசியல் ஆதிக்கம் குறைய ஆரம்பித்தது.!

        இன்றுவரை... அண்ணாவின் அரசியல்   வாரிசாக கட்டிக் கொள்ளும் கலைஞர்.கருணாநிதி அவர்கள் தனது சுயநலத்திற்கு, அரசியல் ஆதாயத்துக்கு முஸ்லிம்களை   பயன்படுத்திக் கொள்ள தவறுவதே இல்லை! .முஸ்லிம்களும் இதனை உணர்ந்து கொள்ள தயாராக இல்லை!

( கலைஞர் முஸ்லிம்களுக்கு செய்த துரோகம் - அடுத்த பதிவு )

Thursday, 20 June 2013

முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் அரசியல்!

    கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்கு பிறகு முஸ்லிம்களின் அரசியல் திராவிட கட்சிகளுக்கு முட்டுக்கொடுக்கும் அரசியலாக மாறிவிட்டது!

   1947-யில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 29 சட்டமன்ற உறுபினர்கள் முஸ்லிம் லீக்கை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். காயிதே மில்லத் அவர்கள் சட்டமன்ற எதிர் கட்சித் தலைவராக இருந்தார் .அதற்கு பிறகு, முஸ்லிம்களின் மக்கள் பிரதிநித்துவம்," கழுதை தேய்ந்து கட்டெறும்பான" கதைதான்!


        அல்லாஹ் ஒருவரை தவிர ஆண்டவன் இல்லை என்பது முஸ்லிம்களின் நம்பிக்கையாக இருப்பது போலவே,  அரசியலில் முஸ்லிம்கள் கருணாநிதியை தவிர  ஒருவர் முஸ்லிம்களின் நலனை பாதுகாக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார்கள்!

      இது சமீபத்தில் ராஜ்ய சபை தேர்தலில் தி.மு.கவுக்கு ஆதரவாக, கனிமொழிக்கு  வாக்களிப்பதாக மனித நேய மக்களை கட்சி செய்துள்ள அறிவிப்பில் இருந்து தெரிகிறது!


       மிகவும் பிற்படுத்தப்பட்ட வாக்காளர்கள்,தலித் வாகாளர்கள் அடுத்து,அதிக அளவு வாக்காளர்கள் முஸ்லிம்கள்தான்! இருந்தும் கூடஒவ்வொரு தேர்தலிலும்  தங்களது வாக்கு வங்கியின் மீது நம்பிக்கை வைக்காமல், தனித்து நிற்கும் முயற்சிகளை செய்யாமல்,குறைந்த பட்சம் நடிகர் விஜயகாந்த் கூறியது போல,  "ஆண்டவனுடனும் மக்களுடனும் கூட்டணி" என்று சொல்லாமல்,  திராவிடக் கட்சிகளிடம் சரணாகதி அடைவதிலேயே முஸ்லிம் தலைவர்கள் இன்பம் காணுகிறார்கள்!

     அல்லாவின் அருமறையான,  "ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றிக் கொள்ளாமல் இன்றுவரை முஸ்லிம் தலைவர்கள் இருந்து வருகிறார்கள்! அதன் விளைவு,   இன்று முஸ்லிம்களுக்கு 25-க்கு  மேற்பட்ட   அமைப்புகள்!

     'தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரர்' என்பதுபோல, முஸ்லிம்களின் அமைப்புகள் பலவாகி...  பல தலைமையின் கீழ்  பிரிந்து கிடக்கிறது!   முஸ்லிம்களின் அரசியல் அமைப்புகள் இடையில் ஏகப்பட்ட பிரிவுகளும் பேதங்களும் இருந்துவருகின்றன!


        நீ.. ஆதிமுக-வை ஆதரிக்கிறாயா? முட்டு கொடுக்கிறாயா?  நான் தி.முக-வுக்கு முட்டுகொடுக்கிறேன் என்ற நிலையில் தலைவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்!   முஸ்லிம்களின் பலம்   மற்ற கட்சிகளுக்கு தெரியவில்லை !
முஸ்லிம்களின் வாக்கு வங்கியை ஆளுக்கு கொஞ்சமாக பிரித்து,  பிளவு படுத்தி,  பிறகட்சிகள் ஆதாயம்  அடைந்து வருகின்றன!

முஸ்லிம்களை  பிற கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்துவிட்டு, முஸ்லிம் மக்களின் வாழ்வாதாரம், அடிப்படை உரிமைகளை நிறைவேற்ற தாங்கள் வெற்றியடைய செய்த அரசியல் கட்சிகளிடமும் அதன் தலைவர்களிடமும் "பிச்சைகாரர்களிடம்  கை ஏந்துவதைபோல", காலம் முழுவதும் முஸ்லிம் மக்களை பிச்சை எடுக்கும் படியான நிலையில், முஸ்லிம்  தலைவர்கள் செய்துவருகிறார்கள்!

     எல்லாம் முட்டுக்கொடுக்கும் அரசியலால்  வருகிறது என்பதை முஸ்லிம் கட்சித் தலைவர்கள் உணருவதில்லை! உணர்ந்தாலும் இந்த நிலையை மாற்ற நினைப்பதும் இல்லை!

    அல்லாஹ்வை  நம்பாமல்.. இன்று ஆள்பவர்களின் தலைமையின் மீது நம்பிக்கை வைத்து செயல்படுகிறார்கள்!  இந்த நிலை என்று மாறுகிறதோ, முட்டு கொடுக்கும் நிலையை விட்டு,  முஸ்லிம்கள் எப்போது தங்களது வாக்குகள் மீதும்,  அல்லாஹ்  மீதும் நம்பிக்கை கொள்கிறார்களோ, "ஒற்றுமை என்னும் கையிற்றை பற்றி பிடிகிறார்களோ" அப்போதுதான் முஸ்லிம்களுக்கு அரசியலில் விடிவு பிறக்கும்.!


Monday, 17 June 2013

நாட்டையும் கொஞ்சம் பாருங்களேன்!

வட இந்திய மாநிலங்களில் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டு அங்குள்ளவர்கள்  பதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழப்பும் நடந்து உள்ளது. கங்கையிலும், யமுனையிலும் வெள்ளம் பெருகி ஓடுகிறது,  தங்களது வாழ்விடங்களை இழந்தும், உணவுக்கு வழியின்றி கடும் குளிரில் அவதிப்பட்டு வருகின்றனர்!

    இயற்கையின்  கோரதாண்டவம் இது என்றாலும், மக்களை காக்கும் அரசுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு  புகலிடம் அளிப்பதிலும், அவகளது அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதிலும் முனைப்பு காட்டவில்லை என்று தோன்றுகிறது!


       எதிர்வரும் மாநில தேர்தல்கள்,நாடாளுமன்ற தேர்தல் குறித்து கொள்ளும் கவலையை , அக்கறையை   மக்களின் நலத்தில்,அவர்களின் பாதிப்பை நிவர்த்தி செய்வதில் காட்டாமல் இருக்கின்றன!

     மனிதநேயமும்,சக மனிதனின் உணர்வுகளைக் கூட மதிக்காத  நிலையை அரசியல்வாதிகள்  ஏற்படுத்தி விட்டார்கள்!  மக்களை மறந்துவிட்டு  எல்லாம் அரசியல், பதவி வெறி, அதிகார போதை  என்று  அலைகிறார்கள்!

        கங்கையையும் காவிரியும் இணைக்கவேண்டும் முன்பு பேசினார்கள். இன்று மறந்தும் கூட அதைப்பற்றி பேசுவதில்லை.! பேச நாதி இல்லை! நதிகளை இணைத்து இருந்தால், வட இந்திய மாநிலங்கள் இன்று வெள்ளக்காடாக மாறும்  அவலம் ஏற்பட்டு இருக்காது.  வடக்கில் நீரால் மக்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது!   தெற்கில் தமிழகம் போன்ற மாநிலங்கள் தண்ணீர் இன்றி,தவிக்கின்றன!  எதைபற்றியும் கவலைப் படாதவர்களாக  அரசியல் வாதிகளும், நாட்டை ஆள்வோரும் ஆகிவிட்டனர்!
 நாட்டையும் கொஞ்சம் பாருங்களேன் உங்களுக்கு புண்ணியமாக போகும் என்று ஆள்வோரைப்    பார்த்து   கதறவேண்டி உள்ளது!


          "ஒரு புறம் வெள்ளம், மற்றொரு பகுதியில்  வறட்சி.!  இரண்டையும் ஆண்டவன் படைத்து  உள்ளான்  எதற்கு தெரியுமா?  ஐயோ கடவுளே இவ்வளவு வெள்ளம் வந்து நாங்கள் அவதிபடுகிறோம்  என்று நினைத்து ஆண்டவனை நினைக்க வேண்டும்,  வறட்சியில்   உள்ள மக்களும்  "கடவுளே எங்களை காப்பாற்று "என்று  ஆண்டவனை நினைக்க  வேண்டும்" என்பது .கண்ணதாசன்  கண்டுபிடிப்பு.!

      ஆண்டவனை மட்டுமல்ல, ஆள்பவர்களையும் பார்த்து மக்கள் காலமெல்லாம்  இப்படி கதறவேண்டி இருக்கிறது, கண்ணீர் வெள்ளத்தை சிந்த வேண்டியும் இருக்கிறது!

ராஜ்யசபை தேர்தலும், அரசியல் கணக்குகளும்!

          தமிழகத்தில் தேர்வு செய்யப்பட வேண்டிய 6  ராஜ்யசபை எம்.பி.-களின் தேர்தல் எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பை, எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது!  கட்சிகளுக்கு இடையில் முன்பு இருந்த செல்வாக்கும், புரிந்துணர்வும்  இப்போது இல்லை ! ஆகையால்,போட்டியிடும் உறுபினர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.  எனவே, ,தேர்தல் நடைபெறுவது  தவிர்க்க இயலாததாக மாறி உள்ளது!  முன் எப்போதும் இதுபோன்ற கடும்போட்டியும், தேர்தலும் தமிழகத்தில் நடைபெறவில்லை என்றே சொல்லலாம்!


      அரசியல் கட்சிகளின் பலம்,போட்டியிடும் நபரின் பொது சேவை, தகுதிகளை வைத்து   தேர்வு செய்யப்படுவதும், அவருக்கு  இதர கட்சிகளும்   மனமுவந்து ஆதரவு அளிப்பதும் நடைமுறையாக இருந்த தமிழகத்தில்,  இப்போது வேறு வழியின்றி தேர்தல் நடைபெறும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

      இத்தகைய சூழ்நிலைக்கு,அரசியல் கட்சிகளில் ஆ.தி.மு.க-வை தவிர எந்த கட்சிக்கும் உறுபினராகும் அளவுக்கு  ஓட்டுகளும்,எண்ணிக்கை பலமும் இல்லாததும் காரணமாகும்!.

        தி.மு.க-வுக்கு, கட்சித்தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ராஜ்யசபை எம்பியாவது மிக முக்கியம் என்று கருதுகிறது! .இது அக்கட்சியின் மீதும்,கனிமொழி மீதும் சுமத்தப்பட்டு இருக்கும் 2 ஜி-ஸ்பெக்ட்ரம் வழக்குகளில் இருந்து மீள உதவும். மேலும்  தலைநகர் டெல்லி-யில்  அக்கட்சியின் செல்வாக்கையும்,கனிமொழியின் செல்வாக்கையும்  நிலைநிறுத்த முடியும் என்பது அவர்களின் கணக்காக  உள்ளது!

       கம்யுனிஸ்ட் கட்சிகளுக்கு தங்கள் சார்பாக ஒரு உறுப்பினரை அனுப்பும் எண்ணம்  இருக்கிறது,  அது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்களது இருப்பையும்,முக்கியத்துவத்தையும், கூட்டணி அமைக்கவும் இரு கம்யுனிஸ்ட் கட்சிகளுக்கு இடையில் உள்ள ஒற்றுமையை வலுப்படுத்த உதவும் என்பது கணக்காக உள்ளது!

       கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் நிறுத்தப்படும்  உறப்பினர் ராஜாவுக்கு ஆதரவு அளிப்பதாக ஜெயலலிதா அறிவித்து உள்ளது,அக்கட்சிக்கு நம்பிக்கை அளித்து உள்ளது! 

       தமிழக எதிர்கட்சியாக இருந்துவரும் தி.மு.தி.க-வுக்கு  இத்தேர்தல் கவுரவ பிரசனையாக இருக்கிறது,  அக்கட்சியின்  சட்டமன்ற உறுபினர்கள் ஆளுக்கு ஒரு காரணம் சொல்லி கட்சிக்கு எதிராக,  அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக செயல்படுவதால்  கட்சி சார்பாக   ஒருவரை நிறுத்த குழம்பி வந்தது,
        அ .தி.மு.க-வின் கூட்டணியில் இருந்து வென்ற, சட்டமன்ற உறுபினர்களை வைத்து, தி.மு.கவுக்கு வாக்களிக்க சொல்ல முடியவில்லை. தி.மு.கவிடம் ஆதரவு கேட்டாலும் அது கிடைக்குமா? என்ற குழப்பத்தில் இருந்து வந்தது
.மேலும்.தி.மு.க-வுக்கு ஆதரவு அளித்தால், அது தனது எதிர்கால அரசியலுக்கு நல்லதல்ல என்றும், பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அதன் காரணமாகவும், இப்போது கட்சியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் சிலரை இழந்து விடும் ஆபத்து  உள்ளதையும், கருத்தில் கொண்டு குழம்பி வந்தது, வேறு வழியில்லை  என்று தெரிந்து  வேட்பாளரை  நிறுத்தியுள்ளது. !

      கலைஞரைப்போல குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயலும் விதமாக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான  இளங்கோவனும்  ராஜ்யசபை வேட்பாளராக களத்தில் இறங்கியிருக்கிறார். 5 சட்டமன்ற உறுபினர்களின் ஆதரவை வைத்து கொண்டு,  வெற்றிபெறுவது இயலாது என்பது  தெரிந்தும் இவர் போட்டியிடுவதற்கு,  காங்கிரசின் வாக்குகள் கனிமொழிக்கு போககூடாது என்பதும், தி.மு.கவுக்கு  இதன்மூலம் நெருக்கடியை ஏற்படுத்துவதும் காரணமாக இருக்கலாம்!

      ராஜ்யசபை  உறுப்பினர் தேர்தலுக்கு இவ்வளவு ஆர்பாட்டங்களும் அமலி துமளிகளும் நடப்பதற்கு காரணம் அந்த பதவியை வைத்து தமிழக மக்களுக்கோ,  நாட்டுக்கோ  இவர்கள்  சேவைசெய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காரணம் இல்லை!  எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டணிக்கும், சீட்டுக்கும்,வோட்டுக்கும்  இந்த தேர்தல் ஒரு வெள்ளோட்டமாககருதியே, வாய்ப்பாகஎண்ணியே இந்த கூத்துக்கள்   நடைபெறுகின்றன!

யார் இத்தேர்தலில் வென்றாலும்,தோற்றாலும்,அதனால் மக்களுக்கு பெரிதாக நன்மை ஏதும் ஏற்பட்டுவிட போவதில்லை! அவர்களுக்கு கிடைப்பது எப்போதும் போல, ஏமாற்றம்தான் என்பதே  அவர்களின்   ஜனநாயக கணக்காக உள்ளது!


Saturday, 15 June 2013

சாதிய,மதக் கலவரங்களை தடுப்பது எப்படி?

       எந்த ஒரு செயலுக்கும் எதிர் விளைவு உண்டு என்பது நியுட்டனின் கோட்பாடு.அதைப்போலவே ( intention meets us  at every steps) என்பது ,ஆஸ்டின் என்பவரின் தத்துவம் "ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு உள்நோக்கம் இருக்கிறது" என்கிறது. .போலீசார்  இதனை மோடிவ் என்று குறிபிடுகிறார்கள்! குற்றங்கள் உணர்ச்சிவேகத்தில் செய்யபடுபவை ஆயினும்,குற்ற நிகழ்வுக்கு பின்னணியில் உள்ள காரணமே  குற்றம் நிகழ்த்தப்பட காரணமாக உள்ளது என்பதாகும்.

      மேற்சொன்ன தத்துவமானது, நமது நாட்டில் இதுவரை நடந்துள்ள சாதீய, மதக்  கலவரங்களுக்கும்,அதன் வழியே நடைபெற்ற குற்றங்களுக்கும் பொருந்தும்.!  ஒரு சாதியினரை,,மதத்தினரை, தொடர்ந்து ஒதுக்கிவைத்து, அவர்களிடம்  வேற்றுமைகளை ஏற்படுத்தி, தொடர்ந்து வெறுத்தும்,இழித்தும் பழித்தும் வருகின்ற கொடுமை நடந்துவருகிறது!


          தொடர்ந்து இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகும் சாதியை சேர்ந்தவர்கள், மதத்தை சேர்ந்தவர்கள்  தங்களை வெறுத்து ஒதிக்கி,கேலிபேசி,ஒடுக்கி வருபவர்கள் மீது கோபம் கொண்டு  எதையாவது பேசும்போதும், எதிர்வினை ஆற்றும் போதும், மோதல் ஏற்படுகிறது,மோதல் கலவரமாக மாறுகிறது!
       
           அடிப்படை தேவைகளுக்கே அன்றாடும் போராடவேண்டிய நிலையில் உள்ள உழைக்கும் மக்களால்  தங்களது உணர்வுகளைகட்டுக்குள் வைப்பதில் தோல்வி அடைகிறார்கள்.விளைவு? வெடிக்கும் மோதல்களாக உருமாறி விடுகின்றன. மோதல்கள் மூலம் அவர்கள் மேலும் பதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது!   தங்களது வாழ்வை,பொருளாதரத்தை கேள்விக்குறி ஆக்கும் உணர்சிகளை விடுத்தது  அறிவுப் பூர்வமாக சிந்திக்க மறுப்பதன் விளைவால்,தங்களது வாழ்வை,பொருளாதரத்தை இழக்கும் நிலையை ஏற்படுத்திக் கொள்ளுகிறார்கள்!


       உழைக்கும் மக்களை,உணர்ச்சியுட்டி,ஆதாயம் பெறுவதற்கு என்றே இன்று பல்வேறு சாதி சங்கங்கள்,மத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. போதாகுறைக்கு,  சாதியின் பெயரால்,மதத்தின் பெயரால் இன்று பல கட்சிகள் தொடங்கப்பட்டு உள்ளன. அவைகள் மதசார்பற்ற இந்தியாவில் இன்று , பகிரங்கமாக  செயல்பட்டும் வருகின்றன!


      இதுபோன்ற அமைப்புகள்,கட்சிகளை பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வரவேண்டும். சமூக ஆர்வலர்கள்,நாட்டின் நலம் நாடுபவர்கள் மக்களிடம் விழிப்பை ஏற்படுத்த முன்வரவேண்டும்.

     அரசும் நாட்டின் நன்மை, எதிர்காலம், முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு,  சாதீய,மதவாத  அமைப்புகள், கட்சிகளை கட்டுப்படுத்தவும், தடை செய்யவும் சட்டம்  கொண்டுவர வேண்டும்!  அவ்வாறு செய்யாதவரை  சாதீய,மதக்  கலவரங்கள் ஏற்படுவது,  தொடரும் என்பதே உண்மையாகும்!

Thursday, 13 June 2013

ஆர்.எஸ்.எஸ்-யின் போலி தேசப்பற்று!

    ஆர்.எஸ்.எஸ். ஒரு தேசபற்று உள்ள இயக்கம் அதன் வழிகாட்டுதலில் எந்த தீமையும் இல்லை என்று சென்ற பதிவுக்கு கருத்து தெரிவித்து உள்ளார்கள். அவ்வாறு  சொல்பவர்கள், ஒன்று  கடந்த கால ஆர்.எஸ்.எஸ்-யின் வரலாறும் செயல்களையும் அறியாதவர்கள் ஆக இருக்கலாம்  அல்லது அறிந்தும் அதனை மறைக்க நினைத்து செயல் படுகிறார்கள் என்று கருதலாம்!

   ஆர்.எஸ்.எஸ்-யின் அபாயம் என்று 'கங்கைகொண்டான்' என்ற புனைபெயரில் "விடுதலை ராஜேந்திரன்"  40 தொடர் கட்டுரைகள் எழுதி,அது நூலாகவும் வெளியானது! ஆர்.எஸ்.எஸ் ஒரு  தேசப் பற்றுள்ள இயக்கம் என்று நினைப்பவர்கள்,அந்த நூலை படிப்பது நலம்.! 


     தேசதந்தை  மகாத்மா காந்தியை  ஒருமுறை ஆர்.எஸ்.எஸ்-நடத்தும் வார்தா பயிற்சி முகாமுக்கு   அழைத்தார்கள்.  அங்கு சென்று ஆர்.எஸ்.எஸ்-இன் நடவடிக்கைகளைக்  கவனித்த காந்தி,   "'இட்லரின் நாசிப்படையும்,முசோலினியின் பாசிஸ்ட் படையும் இதுபோல்தான் சேவை செய்தது என்பதை மறந்துவிட வேண்டாம்'"  என்று கருத்துரைத்தார்.இன்றுவரை காந்தியடிகளின் கணிப்பை மெய்யாக்கி,தாங்கள் பாசிசவாதிகள் என்பதை    ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நிரூபித்து வருகிறது!

       தேசத்தந்தை  மகாத்மா காந்தியை கொன்றவர்களின் கூடாரம் ஆர்.எஸ்.எஸ் கூடாரம்.! அவர்களுக்கு தேசப்பற்று இருப்பதாக இப்போது சொல்வது புனைத்து கூறும் பொய்யாகும்!

       தேசப்பற்று உள்ளதாக இப்போது கூறும் இவர்கள் அன்று,முஸ்லிம்கள் மீது கொலை பழி விழவேண்டும் நாட்டில் ரத்த ஆறு ஓட வேண்டும் என்று நினைத்து, " இஸ்மாயில்" என்று கையில் பச்சை குத்திக்கொண்டு காந்தியை படுகொலை செய்தார்கள்!  நாட்டில் மதமோதலை ஏற்படுத்தி, குளிர்காய  முயன்றார்கள் என்பது வரலாறு.!

        நாத்திகரான பகத்சிங்கை போஸ்டரில்  போட்டு,  இன்று "தேசபக்தி" என்ற போலி நாடகத்தை,வேடத்தை ஏற்று   நடித்துவரும்  குள்ளநரிக் கூட்டமே ஆர்.எஸ்.எஸ்-என்ற அமைப்பாகும்! போலி தேசபக்தி நாடகம் போடும் இவர்கள் போலி மதசார்பின்மை என்று அடுத்தவர்களை குறை கூறுவதை இப்போது வாடிக்கையாக  கொண்டுள்ளனர்.

     போலி இந்துத்துவ வேஷம் போட்டவர்களும் இவர்கள்தான் என்பதை    பசுவை பாதுகாப்பது இருக்கட்டும், முதலில் "மனிதர்கள் மீது  அன்பு வையுங்கள்,கருணை காட்டுங்கள்" என்று விவேகானந்தர் கூறியதை வசதியாக மறந்துவிட்டு,போலி இந்துத்துவ வேஷம் போட்டவர்களும் இவர்கள்தான்! இப்போது விவேகானந்தரை வைத்தும்   நடிக்கிறார்கள்!

    ஆர்.எஸ்.எஸ்-என்ற அமைப்பு பொய்யையே மூலதனமாக வைத்து அப்பாவி மக்களை "இந்து" என்ற போர்வையை போர்த்தி,ஏமாற்றி இந்தியாவை சுரண்டும் பாசிச அமைப்பு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்!


Wednesday, 12 June 2013

பி.ஜே.பி-யின் குடுமி..

          பாரதிய ஜனதா கட்சியில் யார் எந்த பொறுப்பில் இருக்கவேண்டும்,யார் பிரதமர் ஆக வேண்டும், யார் தலைவராக வேண்டும், இப்போது யாரை  ஓரங்கட்ட வேண்டும் என்பது  எல்லாம்  ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தலைமையின் உத்திரவுப்படி,விருப்பத்தின்படி, செயல்திட்டத்தின் படி நடந்து வருவது அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரிந்த செய்திதான்!

      மோடியை நாடாளுமன்ற பிரசாரக் குழு தலைவராக பி.ஜே.பி.கட்சியின் செயற்குழு அறிவிக்க இருப்பதை முன்கூட்டியே அறிந்து கொண்ட  அத்வானி, செயற்குழுவை புறக்கணித்தார். தனது பதவிகளை ராஜினாமா செய்து தனது அதிருப்தியை பகிரங்கமாக தெரிவித்து இருந்தார், பி.ஜே.பி.யின்  தலைவர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலரும் அவரது ராஜினாமாவை வாபஸ் பெற வற்புறுத்தியும் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

        நடப்பவைகளை கவனித்து வந்த பி.ஜே.பியின் தலைமையகமான ஆர்.எஸ்.எஸ்-ன் தலைவர்  மோகன் பாகவத் தலையிட்டு அத்வானியின் முடிவை மறுபரிசீழனி செய்யுமாறும்,ராஜினாமாவை வாபஸ் வாங்குமாறும் சொன்னதற்கு பிறகு அத்வானியின் ராஜினாமா முடிவுக்கு வந்துள்ளது! இதன் மூலம் அத்வானி ஆர்.எஸ்.எஸ்-சுக்கும்,அதன் தலைமைக்கும் அத்வானி கட்டுப்பட்டவர் என்பது தெரிகிறது!

          அத்வானியாகட்டும்,வாஜ்பாய் ஆகட்டும்,மோடியே ஆனாலும் ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிபணிந்து,கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்பதுதான் உண்மை நிலையாகும் ! பாரதிய ஜனதா கட்சி  இப்போது என்றில்லை எப்போதுமே  ஆர்.எஸ்.எஸ்-க்கு கட்டுப்பட்டு,அதன் ஆலோசனைகளைப் பெற்று,அதன் விருப்பபடியே அரசியல் செய்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.!

         பாரதிய ஜனதா கட்சி  சுயமாக முடிவு எடுப்பது இல்லை .! ,இந்துத்துவ சிந்தனையை, செயல்படுத்தவே ஆர்.எஸ்.எஸ்-யின் கரமாக  செயல்படுகிறது. அத்வானியின் ராஜினாமா விவகாரத்தால் இந்த உண்மை பாமரர்களுக்கு தெரிந்து விட்டதே என்பதால் தான்  ஆர்.எஸ்.எஸ்-அமைப்பு  பி.ஜே.பி-ஐ கட்டுபடுத்துவதில்லை என்று அதன் தலைவர் அவசரமாக மறுப்பு தெரிவிக்கிறார்!

      பி.ஜே.பி-யின் குடுமி  இப்போது என்றில்லை,  எப்போதுமே ஆர்.எஸ்.எஸ் -யின்  கையில்தான்  இருந்துவருகிறது!

  பி.ஜே.பி.கட்சியானது ,ஆர்.எஸ்.எஸ்-அமைப்பால் இயக்கப்படும் அரசியல் ரோபாட் தான்!குற்றங்களும் நீதித்துறையும்...

     கிரிக்கெட் மேச் பிக்சிங்  குற்றசாட்டில் கைதான பலருக்கும் ஜாமீன் கிடைத்து உள்ளது!  ராஜஸ்தான் ராயல் அணியின் கிரிக்கெட் வீரர், ஸ்ரீ சாந்த் நான் குற்றம் செய்யவில்லை,எனக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது  என்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.!


        தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தும் மிக பெரிய முறைகேடுகளில் பலரும் கைது செய்யப்படுகிறார்கள்! கைதான பிரமுகர்கள் சிறையில் அடைக்கப்படுவதும்,நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி, விசாரணை நடத்துவதும்  அண்மைகால நிகழ்வுகளாக உள்ளன.

           குற்றங்களின் பேரில் வழக்குபதிவு செய்து, நீதிமன்றங்களில் வழக்கு நடந்துவரும் நிலையில் குற்றவாளிகள் ஜாமீன் பெற்று வெளி வருவதும், பேட்டி அளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

       அவ்வாறு பேட்டி அளிக்கும் பிரபலங்கள்  வழக்கமாக கூறும் பதில்,' நான் எந்த தப்பும் செய்யவில்லை,' 'வழக்கில் என்னை மாட்டிவிட்டார்கள்.,நான் அப்பாவி,' எனக்கு நீதி மன்றத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது, நிரபராதி என்று நிருபிப்பேன்  என்பதுதான்.ஸ்ரீ சாந்தும் இதைதான் செய்து இருக்கிறார்.!

       மிகபெரிய முறைகேடுகளில், குற்றசாட்டுகளில் தொடர்புடைய பலருக்கும் இந்திய நீதிமன்றங்கள் பேரில் நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கை இந்திய குடிமகன்களுக்கு  இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது! நீதிமன்றங்கள் !
         அடித்தட்டு மக்களின் வாழ்வுரிமைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்னையில்  நீதி மன்றங்கள் குடிமக்களுக்கு  நம்பிக்கை ஏற்படுத்தும்  விதமாக செயல்படுகிறதா? என்று எண்ணிப்பார்க்க வேண்டி இருக்கிறது!

     நீதிமன்றங்கள் அரசியல் நிர்பந்தம் காரணமாக, குற்றம் சாட்டபட்டு உள்ளவரின் செல்வாக்கு,பொருளாதாரபின்னணி,மதம்,இனநலம் என்ற அனைத்து பாகுபாடுகளையும் கருத்தில் கொண்டு,நீதி வழங்குகிறதோ என்று நினைக்க தோன்றுகிறது!

       பல்லாயிரம் கோடி ஆண்டுகள்  பொதுவில் இருந்தது  நீர்வளம்,தண்ணீரை  உணவு என்று உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்புக்கு பின்னால் கங்கையும், காவிரியும் ஏகபோக முதலாளிகளுக்கு சொந்தமாகிறது!

      நிலத்தடி நீருக்கு கூட இனி,சொந்தம் கொண்டாட குடிமக்களால் முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது! நீதி மன்றங்களின் மீது குற்றவாளிகள் நம்பிக்கை வைப்பதில் தவறு இல்லை!

Tuesday, 11 June 2013

அத்வானியின் அம்புப் படுக்கை..

        தனது டுவிட்டர் பக்கத்தில் ராஜினாமா செய்தது குறித்து  பீஷ்மரைப் போல தான்  அம்புப் படுக்கையில் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்

          85-வதாகும் அத்வானி இனிமேல் பாரதிய ஜனதாவில் பெரிதாக எதுவும் சாதிக்க போவதில்லை. என்றாலும், பவர்புல் அரசியல்வாதியாக இந்திய அரசியலில் வலம் வந்தவர், கட்சியின் ஆரம்பகாலம் முதல் இன்றுவரை கட்சியை வளர்த்தவர்.  பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைக்க இவரே காரணம் என்று சொல்லும் அளவுக்கு செயல்பட்டவர் அத்வானி என்பதுமிகையில்லை!

         இன்று  எதிர்க்கும் மோடி போட்டியாக வருவதற்கு வழியேற்படுத்தி தந்தவர், அத்வானிதான்.!  குஜராத்தில் நடந்த கலவரம் காரணமாக மோடி  முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது மோடியை  பாதுகாத்தவர்.

         அத்வானி அன்று செய்த தவறுக்கு இன்று வருந்துவது தெரிகிறது."வினை விதைத்தவன்"  அதனை அறுப்பதுதானே முறை?   இதனை உணர்ந்தே,  பீஷ்மரைப் போல அம்புபடுக்கையில் தான் இருப்பதாக அத்வானி குறிபிடுகிறார்!

          அத்வானி இதனை விரக்தியில்குறிப்பிட்டு இருந்தாலும் கூட இந்த நிலை அவருக்கு ஏற்பட்டு உள்ளது சரியென்றே படுகிறது!

       மகாபாரதத்தில் பீஷ்மர்  நியாயத்தை உணர்ந்தும் கேட்டவர்களான  துரியோதன கூட்டத்துக்கு நியாயத்தை வலியுறுத்தி,நீதியை ,தருமத்தை நிலைநாட்ட முன்வரவில்லை.!  தீமைகளை தடுக்க முன்வராமல், தீயவர்களுடன் சேர்ந்து அநீதிக்கு ஆதரவாக இருந்தார்.செயல்பட்டார்.!  

        அத்வானியும் தனது கடந்தகால அரசியலில் பீஷ்மரைப் போலவே செயல்பட்டார்.!   நீதிமான்களிடம் அநீதிக்கு  தண்டனை பெற்று  பீஷ்மர்அம்புப் படுக்கையில் வீழ்ந்தார்.  அத்வானி துரோகத்திற்காக, துரோகத்தால்,துரோகிகளால்  இன்று அம்புப் படுக்கைக்கு ஆளாகி இருக்கிறார் என்பதுதான் வேறுபாடு.!

     அத்வானியின்  ராஜினாமா ஏற்கப்படவில்லை. ராஜினாமா முடிவில் அவர் உறுதியாக இருந்தால், அவருக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்கு பதிலடி தர வாய்ப்பு இருக்கிறது. மோடியின் துரோகத்துக்கு பதிலடியாக,   பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருவதை,மோடி பிரதமர் ஆவதை அத்வானி நினைத்தால் தடுக்க முடியும் !

அத்வானியின் அம்புப் படுக்கை  என்ன ஆகிறது என்பதை பார்க்கலாம்!

Monday, 10 June 2013

மோடி பிரதமரானால் என்ன நடக்கும்?

       " பாரத மாதாக்கி ஜே,'",  "ஓம்.. ஓம்..  காளி' " "'ஜெய் ஜெய் காளி'"  என்று  ஓங்காரமிடும் இந்துத்துவ பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் முதல்வர் திருமண உதவித் திட்டத்தில் திருமணம் செய்ய முன்வந்த 350 பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை நடத்தி,தனது கொடூர வக்கிரத்தை காட்டி,பெண்களை பி.ஜே.பி-மதிக்கும் லட்சணத்தை பறை சாற்றியுள்ளது!

        இந்துத்துவ  சிந்தனை கொண்ட எந்த அமைப்புகளும்,நபர்களும்  ஆண்களுக்கு  நிகராக பெண்களை மதிப்பதில்லை,  என்பது நிதரிசனம்!   இந்துத்துவ சிந்தனையை  அடித்தளமாக கொண்ட அதன் சாத்திரங்கள், புராணங்கள், மனுஸ்மிருதி ஆகியவைகள்  தொன்றுதொட்டு பெண்களை கேவலப்படுத்தி வருகின்றன! . அவற்றை கேள்வி இன்றி ஏற்றுக்கொள்ளும் இந்துமனுதர்ம வாதிகளிடம்  பெண்ணுரிமை கேட்பதும், எதிர்பார்ப்பதும்  இயலாத  காரியமாகும்!

          ஆற்றுக்கும்,மாட்டுக்கும்  பெயர்  வைத்து பெண்களைப்  போற்றுவதாக கூறும் காவிக்கும்பல்கள்  நிஜ வாழ்க்கையில்  பெண்களை மதிப்பதில்லை! பெண்களை  .இழிவுபடுத்தி,அடிமைப்படுத்தி, தனது வக்கிரங்களைத் தீர்த்துக்கொண்டு, அவர்களைக் கொடுமை செய்யத் தவறுவதில்லை  என்பதையே,  மத்திய  பிரதேசத்தில்  பெண்களுக்கு நடந்த கன்னித்தன்மை சோதனை நிருபிக்கிறது!

         " மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் "என்றான் பாரதி !  பெண்களை இழிவு செய்வதை நியாயப்படுத்தும்  காவிகும்பலிடம்  நாட்டை ஒப்படைத்தால்  கன்னித்தன்மை சோதனையைபோல பல சோதனைகளை பெண்கள் சந்திக்க வேண்டி இருக்கும்..!

     இறையாண்மை உள்ள இந்தியாவில்,  மத சார்பான   பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்த்தது போல,  "கட்டாய கன்னித்தன்மை சோதனை" என்று சட்டம் கொண்டு வந்தாலும் வருவார்கள் என்று  நினைக்க தோன்றுகிறது!

     இந்த லட்சணத்தில், பெண்களும்,முஸ்லிம்களும்,தலித்துகளும் அடிமைகள்    என்று நினைக்கும்  "இந்துமத சிந்தனையை  அமலாக்க வந்துதித்த  அவதாரபுருஷர் " என்று இந்துமதவாதிகளால்  சித்தரிக்கப்படும்   நரேந்திர மோடி, பி.ஜே.பி-யின்  பிரசாரகுழு தலைவராக்கப்பட்டு இருக்கிறார். இவர் பிரதமரானால்  மனுதர்மத்தை  காக்க எப்படியெல்லாம் சிந்திப்பரோ என்று கவலை ஏற்படுகிறது!

  "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மானிடரை நினைத்து விட்டால். "  என்ற பாரதியின்  பரிதவிப்பில்  எவ்வளவு உண்மைகள்!

        கன்னித் தன்மை சோதனை நடத்திய கயவர்களை நினைக்கும்போது, நமது நெஞ்சமும் குமுறுகிறது


Friday, 7 June 2013

அத்வானியின் நிறைவேறாத ஆசை..!

        இந்தியாவின் பிரதமர் கனவு  தேசிய கட்சித் தலைவர்கள் பலரின் ஆசையாகும்!பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அத்வானியும் இதற்கு விதிவிலக்கு இல்லை!

     அத்வானியின் பிரதமர் கனவு இன்று நேற்று ஏற்பட்டதில்லை. காங்கிரஸ் கட்சி  வீழ்ச்சி அடைந்து, காங்கிரஸ் அல்லாத கட்சியான,ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனபோது பலருக்கும் ஏற்பட்டது போல அத்வானிக்கும் பிரதமர் பதவி மீது அதீத ஆசை ஏற்பட்டு இருக்க கூடும்!

        பிரதமர் பதவி மீதான  அதீத ஆசையின் காரணமாக, அத்வானி   வாஜ்பாயைக் காட்டிலும் தீவிரமாக அரசியல் களத்தில் செயல்பட்டார்.

         வாஜ்பாயை  மிதவாதியாக காட்டப்பட்டு,அத்வானி தீவிர இந்துத்துவ அரசியல் வாதியாக உருவகிக்கப் பட்டது  எல்லாம் நடந்தது!

      இந்தியாவின் பல மாநிலங்களுக்கு ரத யாத்திரை நடத்தியும், தவிர இந்துத்துவ அரசியல் செய்தும் கூட  அத்வானியால் பிரதமராக முடிய வில்லை ! வாஜ்பாய் பிரதமர் ஆனார்.

    இந்தமத தீவிர பற்றாளராக காட்டப்படும் அத்வானி, இந்துமத மனுதர்ம, வருணாசிரப்படி பிராமணர் இல்லை என்பது பிரதமர் ஆவதற்கு தடையாக இருக்கிறது என்று தோன்றுகிறது.

     அப்போது,வாஜ்பாய்,இப்போது நரேந்திரமோடியைத்தான் பிரதமர் என்கிறது பாரதிய ஜனதா கட்சி.!அத்வானியை கட்சி ஓரம் கட்டிவிட்டதாக தெரிகிறது.!

        இதனை உணர்துகொண்டே,அத்வானி   பிரதமர் வேட்பாளர், நாடாளுமன்ற தேர்தலைப் பற்றி விவாதிக்க கூடும் பி.ஜே.பி-யின் செயற்குழு ஆலோசனைக் கூட்டத்தில்  பங்கு கொள்ளவில்லை என  தெரிகிறது!

 அத்வானிக்கு வயதும் ஆதிகமாகி விட்டது     இந்த தேர்தலை விட்டால் எப்போதும் அவரால்  பிரதமர் ஆக முடியாது! அவரது பிரதமர் கனவு .. கனவாகவே..,நிறைவேறாத ஆசையாகவே தெரிகிறது!


Thursday, 6 June 2013

தீவிரவாதத்துக்கு தீர்வு!

        தேசிய புலனாய்வு அமைப்புகள்  தீவிர வாத செயல்கள் குறித்த உளவுத் தகவல்களை மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரி உள்ளார்.

          அவரது கோரிக்கை வரவேற்கதக்கது.நியாயமானதும் கூட.!  ஏனெனில் உளவுத்தகவல்களை மத்திய அரசும், மாநில அரசும் பகிந்துகொண்டு, ஒருங்கிணைந்து செயல்படும்போதுதான் சமுக விரோத செயல்களை தடுக்க முடியும்.

        தேசிய புலனாய்வு அமைப்புகள் எந்த தகவல்களையும் மாநிலங்களுக்கு  கொடுக்காமல் மாநில அரசின் உதவியை, ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது! மத்திய அரசின்  புலனாய்வு  அமைப்புகள்  மாநில அரசுக்கு தகவல்கள் ஏதும் தராமல், தன்னிச்சையாக செயல்படுவதால் தீவிரவாத செயல்கள் அதிகரித்து வருகின்றன.

       சமூக விரோத செயல்களை  தடுக்க முடியாமல் உயிர் சேதம்,பொருளாதார விரயம், ஏற்படுகின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுகிறது ! அரசுக்கும் கேட்ட பெயர் ஏற்படுகிறது!

       மாநில அரசுக்கு உளவுத்தகவல்கள் முன்கூட்டியே தெரியவந்தால். தீவிரவாத,சமூக விரோத  செயல்கள் விரைவாக தடுக்க வழி ஏற்படும். ! 

       நாட்டில் அமைதியும், முனேற்றமும் ஏற்பட ஒன்றுபட்ட  விசாரணையும்   ஒன்றான செயலாற்றலும் மத்திய மாநில  அரசுகளுக்குள் ஏற்படவேண்டும். செய்வார்களா?


Wednesday, 5 June 2013

கேள்விக்குறியாகும் கூட்டாட்சி..

இந்தியாவின் பாதுகாப்பு,அயலுறவு கொள்கைகள்,ராணுவம், போன்றவற்றை மத்திய  அரசும், உள்ளாட்சி நிர்வாகம்,திட்டப் பணிகள்,விவசாயம் உள்ளிட்டவைகள்  மாநில அரசும் மேற்கொள்ளும் வகையில் நமது நாடு இயங்கி வருகிறது!

      மத்திய அரசு சமீப காலமாகஅமல்படுத்தி வரும் சட்ட மசோதாக்களைப் பார்க்கும்போது, மத்தியில் கூட்டாட்சி.,மாநிலத்தில் சுயாட்சி என்ற தத்துவம்  இனிமேல் நீடிக்காது  எனத் தொண்டுர்கிறது!

      இதுவரை மாநிலங்களுக்கு  இருந்துவந்த உரிமைகளை  பறிக்கும் விதத்தில் மாநிலஅரசின்  அதிகாரத்தை குறைக்கும் செயலைகளை   மத்திய அரசு மேற் கொண்டு வருகிறது!

     அதாவது ஜனநாயகத்தில் மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை மத்தியில் குவித்து, சர்வ அதிகாரம் உள்ள அரசாக,   முயன்று வருவதாக தோன்றுகிறது!

மத்திய அரசின்  இத்தகைய விபரீத செயல்கள்   இந்திய தேசத்துக்கு மிகபெரிய கேட்டினை ஏற்படுத்தும் எனக் கருத வேண்டியுள்ளது!  .

      தேசத்தை துண்டாடவும், தேசப் பிரிவினைக்கு மாநிலங்களைத் தூண்டும் வகையிலும் மத்திய  அரசு  கொண்டு வரும் சட்ட மசோதாக்கள்  உள்ளன. அவ்வாறான சட்ட மசோதாக்களை  அரசு  முதலில்  மக்கள் பார்வைக்கு வைத்து,  பொது விவாதம் நடத்தி  பிறகு சட்டமாக்க முன்வர வேண்டும! 

      விவசாயமே உயிர் நாடியாக திகழ்ந்த  இந்தியாவில் லட்சகணக்கான மக்கள் பட்டினிச் சாவில் இறக்க நேரிட்டபோதும், உணவு கிடங்குகளில் புழுத்து, வீணாகும் உணவுப் பண்டங்களை  ஏழைமக்களுக்கு வழங்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை நினைக்கும்போது, உணவுப்பாதுகாப்பு சட்டத்தை   பாராளுமன்றத்தில் வைத்து  நிறைவேற்ற முன்வராமல்,  அவசர  சட்டமாக்க    மத்திய அரசு காட்டும் முனைப்பு  உள்நோக்கம் உடையதாக கருத வேண்டி இருக்கிறது!

         மறுபுறம் , விலை நிலங்களை கார்பரேட் கம்பனிகளும், பெருமுதலாளிகளும்   மேற்கொள்ளதக்க தொழிலாக மாற்ற உதவும் வகையில்  ரியல் எஸ்டேட்  ஒழுங்கு முறை சட்டம்  என்று ஒன்றை கொண்டுவருகிறது.,

        சாலைகள், அரசு பணிகளுக்கு நிலங்களை எடுக்கலாம் என்றுகூறி    நிலஆர்ஜித  சட்டத்தை கொண்டு வருகிறது.

      மத்திய அரசின் சட்டங்களால் பாதிக்கப்பட்டு போராடினால் அவர்களை   அடக்கவும் ஒடுக்கவும்  உதவும் வகையில்  தீவிரவாத தடுப்புப் சட்டம்    என்று  மாநில பாதுகாப்பிலும்,சட்டம்  ஒழுங்கு  பிரச்னையில் தலையிடும் அதிகாரத்தை கொண்ட   சட்டதிருத்தம்  கொண்டு வருகிறது.

    இவைகளை பார்த்தால் இந்திய அரசு கூட்டாட்சி  தத்துவத்தை கேள்விக்குறியாக்கி வருவதுடன், சர்வ அதிகார அரசாக மாற முனைந்துள்ளது விளங்கும்.! 

Tuesday, 4 June 2013

தகவல் ஆணையமும் அரசியல் கட்சிகளும்.

      மத்திய தகவல் ஆணையம் அரசியல் கட்சிகளும் தகவல் வழங்கவேண்டும் என்று அறிவித்து இருக்கிறது ! பொதுவாக வரவேற்கத்தக்க செயலாக இது தெரிந்தாலும், இதனை அதாவது சட்டத்தை செயல் படுத்துவது  நடைமுறையில்  சாத்தியமில்லை என்பது உண்மையாகும்!

      அரசு நிறுவனங்கள், 30-நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. சட்டப்படி  30- நாட்களுக்குள் தகவல் வழங்காவிட்டால் மேல் அதிகாரிக்கு முறையீடு செய்யவும், அவரது தலையீட்டுக்கு பிறகும் தகவல் கிடைக்கப் பெறவில்லை என்றால்,  ஆணையத்துக்கு  மேல் முறையீடு செய்தால் தகவல் ஆணையம் நேரடி விசாரணைநடத்தும்!

      நியாமான காரணங்கள் இன்றி,  தகவல் வழங்குவது மறுக்கப்பட்டது தெரிய வந்தால்  தகவல் வழங்க மறுத்தும்,காலதாமதம் செய்தும் வந்த பொதுத் தகவல் அலுவலர் மீது தகவல் பெறும் உரிமைச்சட்டமீறலுக்காக  நடவடிக்கை எடுக்கப்படும் . தொடர்புடைய  பொதுதகவல் அலுவலருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறுகிறது!

       ஆனால் நடைமுறையில் பொதுதகவல் அலுவலர்கள் குறித்த காலத்தில் தகவல் வழங்குவதில்லை! வழங்கும் தகவல்களும்கேட்கும்  தகவல்களாக இருப்பது இல்லை!  இதுபற்றி  முறையீடு செய்தாலும் முறையாக ஆணையமே முறையாக விசாரணை நடத்துவது இல்லை! என்பதுதான் எதார்த்தமாக உள்ளது!

       பொது தகவல் அலுவலர்கள் தகவல் வழங்காமல் காலதாமதப்படுத்தி வருகிறார்கள் அல்லது  தகவல்   வழங்காமலேயே வழங்கியதாக பொய் சொல்கிறார்கள்!   வேறு ஒருவருக்கு உரிய தகவல்களை வேண்டும் என்றே   மாற்றி அனுப்புவது,  தகவலுக்கான  இணைப்பு நகல்களை  வழங்காமல் இணைப்பு நகல்கள்  வழங்கியுள்ளதாக கூறுவது  போன்ற அனைத்து ஒழுங்கீனங்களையும்,தகிடு தத்தங்களையும்  செய்து வருகிறார்கள்.

     ஆணையத்திடம் முறையிட்டாலும்,இதனை  ஆதாரத்துடன் நிரூபித்தாலும் தகவல் ஆணையமே   சட்டை செய்வதில்லை. அது பொது தகவல் அலுவலர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் நிலையில்  இருந்து வருகிறது!

     எனக்கு தெரிந்த ஒருவரின் பழைய தவறை சுட்டிக்காட்டியும், தகவல் பெறும் மனுக்களை அனுப்பி அவர் தொல்லை தருவதாகவும் இதுவரை 74 மனுக்கள் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தகவல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினார். ஒரு மனுவுக்கு கூட உருப்படியாக,உண்மையான தகவல்களை தராத காவல் துறை அலுவலர்  தந்த அறிக்கையை தகவல் ஆணையம்  எந்த ஆதாரமும் இன்றி  அப்படியே  ஏற்றுகொண்டது!

     அவர் கடந்த காலத்தில் செய்த தவறு என்ன? அதாரம் இல்லை! 74 மனுக்கள் அனுப்பினாரே அதற்கு எத்தனை மனுக்களுக்கு உரிய தகவல்கள் வழங்கப்பட்டது? ஆணையம் கேட்கவே இல்லை!

       போகட்டும் ,74 மனுக்கள் அனுப்பியதாக பொதுத் தகவல் அலுவலர் சொல்கிறாரே ?அந்த மனுக்களை  சமர்பிக்கும்படி ஆணையம் கேட்கவே இல்லை!

     இந்த விவரங்களை பெற்று தருமாறு ஆணையத்திடம் பல முறையீடுகள் செய்தும் ஆணையமே  கண்டு கொள்ளவில்லை! இந்த லட்சணத்தில் தான் தகவல் ஆணையங்கள்  சட்டத்தை செயல் படுத்துகின்றன.!

       ஆணையத்தில் உள்ளவர்களும் அரசு அலுவலர்கள் தானே? அங்கும் ஊழலும் ஒழுங்கீனமும் இல்லாமல் போய்விடுமா என்ன?

      அரசு அலுவலர்களிடம் தகவல் கேட்கும் போதே, அடியாட்களை விட்டு மிரட்டுவதும், அதிகாரிகள் சார்பாக அரசியல்வாதிகள் மிரட்டுவதும்  நடந்து வருகிறது!

     தகவல் கேட்டதற்காகவே கொலையானவர்கள்,தாக்குதலுக்கு ஆளானவர்கள்  இந்தியாவில் பலர் உள்ளனர். இந்த லட்சணத்தில்  சாமானிய மக்கள் அரசியல் கட்சிகளிடம் இருந்து தகவல்களை பெறுவது நடக்கிற காரியமா?  தகவல் கேட்பவர்களை அரசியல் கட்சிகள் சும்மா விடுமா?

   அரசியல் கட்சிகளும், அரசு அலுவலர்களும் காந்தியின் கொள்கைகளைக் கடைபிடிக்கும் அகிம்சாவாதிகள் என்று நினைத்து  தகவல் ஆணையம்  செயல் படுவதாக தோன்றுகிறது!

     இந்த நாட்டில் நடைமுறை படுத்தப்படும்  எந்த சட்டமும்  ஏழைகளைதான் மிரட்டும்,ஏமாற்றுமே தவிர.. அரசியல் வியாதிகளை, அரசு அலுவலக பெருச்சாளிகளை ஒன்றும் செய்யாது,ஒன்றும் செய்ய வக்கற்றது என்பதுதான் நிஜமாகும்,