Monday, 29 July 2013

தமிழகத்தை குறிவைக்கும் தீவிரவாதம்

            சமீப காலமாக  தமிழகத்தில் நடந்துவரும்  தொடர் விபரீதங்களைப் பார்க்கும் போது  ஒட்டுமொத்த தமிழகமும்  தீவிரவாத நிழல் படிந்துள்ளதாக தோன்றுகிறது.  இந்துத் தலைவர்கள் கொல்லபடுகின்றனர்.

         அதற்கு காரணம் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று  பொதுவான கருத்து உருவாக்கம்  ஏற்படுத்தப்பட்டு  வருகிறது.   இந்த கருத்து உருவாக்கத்தினை  ஒட்டியே உளவுத்துறையும்  சந்தேகத்திற்கு இடமே இன்றி.. முஸ்லிம்களை கைது செய்து, விசாரணை நடத்திவருகிறது.   முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டவுடன்  அவர்களைப்பற்றி  ஆதியோடு அந்தமாக இருந்து அறிந்துகொண்டதைபோல  பார்ப்பன ஆதரவு பரப்புரைகள்   ஊடகங்களில் பரபரப்பாக  செய்தி வெளியிடப்பட்டு வருகின்றன.


         இத்தகைய நிகழ்சிகள் மூலம்  முஸ்லிம்களுக்கு எதிரான கருத்து உருவாக்கம் ஏற்படுத்தப்பட்டு  வருகிறது.  மறுபுறம் இந்துத்துவ தீவிரவாதம்  என்று எதுவும்  இல்லை என்பது நிலை  நாட்டப்பட்டு வருகிறது.  இந்துத்துவ வெறியர்கள்  என்பவர்கள்  தீவிரவாதிகள் இல்லை அவர்கள்
சாதுப்பூனைகள் என்ற நினைப்பை  பொதுமக்களிடம் விதைத்து வருவதைக்  காணமுடிகிறது.

        வேலூர் வெள்ளையப்பன் கொலை,சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை ஆகியவற்றின் குற்றவாளிகள்  மதுரையில்,நெல்லையில் உள்ள முஸ்லிம் தீவிரவாதிகள்  என்று சொல்வது சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது.

     காரணம். வேலூர்,சேலம், மதுரை,திருநெல்வேலி ஆகியவை  தமிழகத்தின் முக்கிய நகரங்கள். மாநகராட்சிகள்  மட்டும் இல்லை. வார்த்தக முக்கியத்துவம்  வாய்ந்த இந்த நகரங்களில்  லட்சகணக்கில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  கோடிகணக்கான   சொத்துக்கள் அவர்களிடம் இருந்து வருகிறது.


             அரசியல் ரீதியாக அவர்களை அச்சுறுத்தவும், பயன்படுத்தவும், தீவிரவாதம் என்ற பெயரில்  மதக்கலவரத்தை ஏற்படுத்தி,  முஸ்லிம்களை கொலைசெய்யவும் அவர்களின் சொத்துக்களை கொள்ளையிடவும் திட்டமிட்டு  இத்தகைய  விபரீதங்கள் நடைபெறுகின்றனவா? என்று சந்தேகம் எழுகிறது.  இத்தகைய சந்தேகத்தை உறுதிபடுத்துவதாகவே  அத்வானியின் சேலம் வருகை உள்ளது.!

       அத்வானி முன்பு மதுரை வந்தார்  திருமங்கலம் அருகில் பாலத்தின் கீழ் பைப் குண்டு இருந்ததாக சொல்லியும், கண்டுபிடிக்கப்பட்டதாகவும்  சொல்லப்பட்டு,அத்வானியை கொல்ல நடந்த சதி  என்று மதுரையில் இருந்த பலகடைகாரனும் சைக்கில் ரிப்பேர் காரனும்  தீவிரவாதிகள் என்று கைதுசெய்யப்பட்டு உள்ளனர்.

          1998-யில் கோவைக்கு அத்வானி வந்தார் அவரைகொல்ல  குண்டுகள் வைத்ததாக  சொல்லி அப்பாவி பொதுமக்கள்  பலர் படுகொலை ஆனார்கள். முஸ்லிம் இளைஞர்கள் 18-பேர்கள் படுகொலை செய்யப்பட்டனர். முஸ்லிம்கள் பலரும் கைது செய்யப்பட்டு  பத்தாண்டுகளுக்கு மேலாக விசாரணையே இன்றி, ஜாமீன் இன்றி சிறையில்  வாடினார்கள். ஷோபா டெக்ஸ்டைல் , முஸ்லிம்களின் நகைகடை, கடிகாரகடை ,பாத்திரக்கடை எல்லாம் கொள்ளையிடப்பட்டன.


            அடுத்தவன் பாக்கெட்டில் இருந்து  எடுப்பதைகூட  (பிக்பாக்கெட் ) குற்றம் என்று சொல்லி தண்டிக்கும் சட்டம் உள்ள நமது நாட்டில் கொள்ளை யிடப்பட்ட   இவைகள் எங்கே போனது.  யாரிடம் சேர்ந்தது என்பது குறித்து இன்றுவரை போலீஸ்,அரசு, சமூக ஆர்வலர்கள், நடுநிலை வகிக்கும் அரசியல் கட்சிகள், அமைப்புகள்  எதுவும்  கண்டுபிடிக்கவில்லை, அதைப்பற்றி கவலைப்படவில்லை.  குறைந்த பட்சம் கேள்விகேட்டகூட முன்வரவில்லை. 

      விளைவு?  முஸ்லிம்கள் துரத்தப்பட்டு, அந்த இடங்கள் மார்வாடிகள்,வட இந்தியர்களின்   வாழ்விடமாக, வளமான பிரதேசமாக இப்போது ஆகிவிட்டது. இதை போலவே,  முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் மதுரை,வேலூர், சேலம், திருநெல்வேலி ஆகியவையும்  குறிவைககபடுகின்றனவா? என்று சந்தேகம் தோன்றுகிறது.

        மகாபாரதத்தில்  குருஷேத்திர யுத்தம்  தொடங்கும் முன்  போரில் வெற்றியடைய  முதல் பலியாக  (அரவான்)ராமன் என்பவனை பலியிடுவார்கள்  வேலூர் வெள்ளையப்பன் ,ஆடிட்டர் ரமேஷ் ஆகியோரின் பலிகள் அதுபோன்றவைகளா? என்றும் சந்தேகம் எனக்கு.!  உங்களுக்கு?

 

Sunday, 28 July 2013

போலி என்கவுண்டர்கள்...

           கடந்த நான்கு ஆண்டுகளில் காவல்துறை,இராணுவம், துணை இராணுவத்தினர்  555 போலி என்கவுண்டர்கள் நடந்திருப்பதாக தேசிய மனித உரிமைகள் கமிஷன்  பதிவு செய்துள்ளது.

       போலி என்கவுண்டர்களில் 114 வழக்குகள் விசாரணை முடிக்கப்பட்டு விட்டது. போலிஸ் விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணையில்  411 போலி என்கவுண்டர்கள் சம்பவங்கள்   இருந்துவருகின்றன.


      அரசு அதிகாரிகள் தொடர்புடைய வழக்குகளில  புலனாய்வு துறை(C B I) ,C B C I D, அமைப்புகள் தலையிட்டு  விசாரணை நடத்துமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம்  கேட்டுக்கொண்டும் இதுவரை போலி என்கவுண்டர் சம்பவங்களில் ஒன்றையும்  மேற்கண்ட அமைப்புகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளவே இல்லை என்ற அதிர்ச்சித் தகவலும்  தெரியவந்துள்ளது.

        உத்திரபிரதேசத்தில் - 138 , மணிப்பூரில்- 62 ,அசாமில் -62 ,மேற்கு வங்கத்தில் -35 , ஜார்கண்டில் - 30 ,  சத்தீஸ்கரில் - 29 போலி என்கவுண்டர்கள் நடந்துள்ளன. இவைகள்  தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்துக்கு சென்றவைகள் மட்டுமே.! ஆணையத்தின் கவனத்துக்கு செல்லாத போலி என்கவுண்டர்கள் எத்தனையோ?


         காஸ்மீர் ஐக்கிய விடுதலை முன்னணி தலைவர் ,"சிறைக்குள் நான் இருக்கிறேன்,எங்களது மாநிலமே  ராணுவத்தின் சிறையாக உள்ளது"  . என்று கூறியதைப்போல  நம்மைக் காப்பாற்ற வேண்டிய கடமை உள்ள இராணுவமும் போலீசும் கடமையை மறந்து நம்மை கொன்று அழிக்கும்  செயல்களைச்  செய்கிறது.

               உரிமைக்காக,நியாயத்திற்காக  குரல் எழுப்பினால், கொன்றுவிட்டு  நியாயப்படுத்துகிறது. !

        போலி என்கவுண்டர்கள் என்பது ஜனநாயகத்தை விரும்பும்  மக்கள் மீது கட்டவிழ்த்து விடும் வன்முறையாகும்.  மக்கள் மீது  செலுத்தப்படும் அரசின் சர்வாதிகார தீவிரவாதம் ஆகும்!Thursday, 25 July 2013

காவல் துறையின் குற்றங்கள்..

       காவல் துறை உங்கள் நண்பன்  உங்களது இயல்பான வாழ்க்கைக்கும் பாதுகாப்புக்கும்  பணிபுரியும் சேவகர்கள்  என்று  கூறுவது  வாடிக்கையாகும். ஆனால், பல சந்தர்ப்பங்களில்  காவல்துறையினரின்  செயல்பாடுகளால் தான் குற்றங்கள் அதிகரிக்கின்றன என்பதும் எதார்ததமாகும்!

        தனக்கு வேண்டிய ஆள் சொன்னார்,தனது மேலதிகாரி சொல்கிறார்,  ஆளும்கட்சி பிரமுகர் சொல்லுகிறார்   என்னும் காரணங்களுக்காக குற்றம் புரிந்தவர்கள் மீது காவல்துறை  தக்க நடவடிக்கை எடுப்பதில்லை.! நடவடிக்கை எடுக்க தயங்கி வருகிறது.


        இதன்மூலம், குற்றங்களின் தன்மை, குற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பதிக்கப்பட்டவர்களுக்கு காவல்துறை அளிக்க வேண்டிய பாதுகாப்பு, கிடைக்க வேண்டிய நிவாரணம், சட்டபடி  கிடைக்க வேண்டிய  நீதி ஆகியவைகள் கிடைக்காமல்  செய்துவருகிறது.

            குற்றம் செய்தவர்களின் மீது நியாயமாக எடுக்கும் நடவடிக்கையை  கைவிடுவது, அல்லது  குற்றத்தை மறைக்கும் செயல்களில் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படுவது, போன்ற செய்கைகளால் தனது அடிப்படை நோக்கத்தில் இருந்து விலகி,குற்றங்களை தடுப்பதற்கு பதில் அதிகரிக்கவும், குற்றங்கள் தொடரவும் காவல்துறைஉதவி வருகிறது!

        காவல்துறையில் பெருகியுள்ள  லஞ்சமும்,ஊழலும்  குற்றங்கள் அதிகரிக்க முக்கிய காரணமாகும்.  காவல்துறையில் உள்ள சிலரின் தனிப்பட்ட விருப்பங்கள், சிலர்மீது காவல்துறைக்கு உள்ள வெறுப்புணர்வால்  குற்றம் செய்யாதவர்களும்  குற்றவாளிகளாக ஆக்கபடுகின்றனர்.

           போலி குற்றவாளிகளை உருவாக்கி,உண்மைக் குற்றவாளிகளை சமூகத்தில் தொடர்ந்து உலவவிடும்அவலத்தை  காவல்துறை  செய்துவருகிறது.

     திருட்டு வழக்கில் ஒருவன் ஒருமுறை கைதானால், அவனையே மீண்டும் மீண்டும்  கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளில் கைதுசெய்து, ஒருவன் செய்யாத குற்றத்திற்கும்  தண்டனை பெற்றுத்தரும்  குற்றத்தை காவல்துறை வாடிக்கையாக செய்துவருகிறது. திருட்டு வழக்கு என்றில்லை எல்லா விதமான குற்றங்களிலும் காவல்துறையின் செயல்பாடு இவ்வாறாக இருப்பது கொடுமையாகும்.

            அப்பாவி மக்களை குற்றவாளிகளாக்கி தண்டிக்க  துணைபோகும் காவல்துறை,  கொடும் குற்றங்களை செய்தவர்களையும்   நிரபராதிகள் என்று விடுவிக்க  உதவி வருவதாலேயே இன்று குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.  குற்றச்  செயல்கள் தொடர்கின்றன.

குற்றவாளிகளும் காவல்துறையும் வைத்துள்ள கூட்டும் கள்ளத்தொடர்பும்  நல்ல சமூகத்திற்கு  தீமையை  ஏற்படுத்தும். காவல்துறை இதனை உணர்ந்து கடமையாற்ற வேண்டும்!


Wednesday, 24 July 2013

படுகொலைகளைத் தடுப்பது எப்படி..?

          தமிழகத்தில் சமீப காலமாக அதிகரித்து வரும் அரசியல் படுகொலைகள்  அதிகரித்து வருகிறது.  அரசியல் தலைவர்கள்  படுகொலை செய்யப் படுவதற்கு அரசியல் காரணங்கள்  மட்டுமின்றி,  வேறு காரணங்களும்  இருப்பதை மறுப்பதற்கு இல்லை.!

         தி.மு.க-வின்   திருச்சி  மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரருமான,  ராமஜெயம் படுகொலைக்கு காரணம் என்ன? என்பது  இன்றுவரை தெரியாத மர்மம் ஆகவே இருந்து வருகிறது.!


           தி.மு.க-ஆட்சியில்  மிக சக்தி வாய்ந்தவராக மதுரையில்  இயங்கிய பொட்டு சுரேஷ் என்பவர் வெட்டி கொல்லப்பட்டார் .  கொலை வழக்கில்  பலரும் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வரும் நிலையில் "அட்டாக் பாண்டி' என்பவர் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை அறிவித்து இருக்கிறது.  இன்றுவரை அவரை கைதுசெய்ய காவல்துறையால்  இயலவில்லை. !  நவீன தொழில் நுட்ப வசதிகள் இருக்கும் இந்நாளில் அட்டாக் பாண்டியை கைது செய்யாமல் உள்ளது  சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.!  அட்டாக் பாண்டி உண்மையில் உயிருடன் உள்ளாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

          தேர்தல் தகராறுகள், முன்விரோதம், கொடுக்கல்-வாங்கலில் ஏற்படும் பிரசனை,  கூடா நட்பு,  கள்ள உறவு,  பெண் தொடர்பு,  வியாபார போட்டி  என்று கொலைகளுக்கு பல காரணங்கள் இருக்கின்றன .   படுகொலையானவர் அரசியல் தொடர்ப்பு உள்ளவராக இருந்தால்,  கொலையை அரசியல் கொலையாகவே  பொதுமக்களும் , ஊடகங்களும் எண்ணி கொள்கின்றன. மேலும் பீதியை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துகின்றன.   கொலையானவர் இருந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும்  உண்மையான காரணம்  தெரிந்தும் அதனை  மூடி மறைத்து விட்டு, கொலைக்கு அரசியல் சாயம் பூசி ஆதாயம் அடையவும், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.

        இத்தகைய நிலை தமிழகத்தில்  சமீப காலமாக ஏற்பட்டு  கவலை  அளிக்கிறது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படுத்தி, அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும்  எதிராக செயல்படும்  அரசியல் மிகவும் ஆபத்தானது!

     எந்தஒரு அமைப்பும்  அமைப்பின் தலைவரும், இந்திய அரசியல் சட்ட வரம்புகளை மதித்து, சட்ட மீறல்கள் செய்யாமல், ஜனநாயக மாண்புகளை பாதுகாக்க  முன் வேண்டும்.


      அவ்வாறு இல்லாமல்  ஜனநாயத்தின் மீது நம்பிக்கை இழந்து, பொது நலனுக்கு அச்சுறுத்தலாகவும், சர்வாதிகார போக்குடன்  நடந்து கொண்டால், அவர்கள்  மீதும் அவர்கள் சார்ந்துள்ள அமைப்புகள் மீதும்  ஒட்டுமொத்த  மக்களுக்கும் வெறுப்பு உணர்வே ஏற்படும் என்பதை  முதலில் அனைவரும்  தெரிந்து கொள்ள வேண்டும். . இது அனைத்து அமைப்புகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும்  பொருந்தும்  ஒன்றாகும்.!

       ஒரு அமைப்பு...  மற்ற அமைப்பிற்கும், மற்ற அமைப்பின் தலைவர்களுக்கு  எதிராக செயல்படும் போக்கினாலேயே,  அரசியல் படுகொலைகள்  நடக்கின்றன என்பது  எனது கருத்தாகும்!   


    நாம் எதை விரும்புகிறோமோ,  அதுவே நமக்கு கிடைக்கும்!.   நாம் பிறரை எப்படி எதிர்கொள்கிறோமோ, அப்படியே பிறரும் நம்மை எதிர் கொள்வார்கள்.! 

    வன்முறையை விரும்பி,   வன்முறையை தூண்டி, சமூக ஒழுங்கிற்கு சவாலாகவும்,அச்சுறுத்தலாகவும் செயல்படும் யாரையும்  காலம் அனுமதிப்பதும் இல்லை என்பதை வன்முறையாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தங்களது நிலையை,கொள்கைகளை மறு பரிசிலனை செய்து கொள்ள வேண்டும் .  இதனையே அரசியல் படுகொலைகள் நமக்கு சொல்லும் பாடம் ஆகும்.!

      ஆகவே, நல்லதை விதைப்போம், நல்லதை செய்வோம் நன்மையை அறுவடை செய்வோம்.! இந்திய தேசத்தை  காப்போம்.!


Friday, 19 July 2013

விப்ரோவுக்கு வெடி குண்டு மிரட்டல்

        பெங்களூரில் இயங்கிவரும் விப்ரோ நிறுவனத்துக்கு  வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளதாகவும்,அதனால் பெங்களூர் முழுவதும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும்  செய்திகள் கூறுகின்றன.

       முன்பு நடந்த  ஒரு குண்டுவெடிப்புக்கு கேரளா முஸ்லிம் தலைவர் அப்துல் நாசர் மதானியை  தொடர்புபடுத்தி கைது செய்தது,கர்நாடக காவல்துறை.! பிறகு மல்லேஸ்வரம் பி.ஜே.பி அலுவலகம் அருகில் குண்டு வெடிப்பில்  திருநெல்வேலி காரனையும் ,மதுரை தள்ளுவண்டி முஸ்லிம்களையும், காரணமோ என்று கிசுகிசுத்தார்கள். தென்காசி முஸ்லிம் ஒருவரை  தொடர்பு இருக்குமோ என்று  கர்நாடாக காவல்துறை போலீஸ் கஸ்டடி எடுக்க இருப்பதாக  செய்தியை வெளியிட்டு உள்ளனர்..

         இத்தனை ஏற்பாடுகளுக்கு பிறகு விப்ரோவுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தெரிகிறது. அதாவது  இதுவரை குற்றம் சுமத்திய முஸ்லிம்களை இந்த மிரட்டலுக்கும் காரணமாக்கி, அவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருக்கவும் ,குண்டு வைப்பது முஸ்லிம்கள்தான் என்று நம்ப வைக்கவும் நடக்கும் நாடகம் இது என சந்தேகம் ஏற்படுகிறது!

        இது ஒருபுறம் இருக்க,  மாலேகானில் குண்டுவைத்த பெண் சாமியார் பிரக்யா சிங்கின் அபினவ் பாரத் அமைப்பின் தலைவர்"ஹிமானி சவார்க்கர் " என்பவர் தைரியமாக நாங்கள்தான்  குண்டு வைத்தோம், வைப்போம் என்று பேசுகிறார்.

 

     இவர் யார்தெரியுமா?  காந்திஜியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்ஸேயின்  சகோதரன் கோபால் கோட்சேயின் மகளாவார். ஹிமானியின் கணவர், ஹிந்துத்துவ ஆச்சாரியன் சாவர்க்கருடைய  மருமகன் ஆவார்.

       ஹிந்து நாடான ஹிந்துஸ்தானைப் பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை; இதனை அங்கீகரிக்காத முஸ்லிம்கள் இங்கிருந்து வெளியேறி, ஏதேனும் ஒரு முஸ்லிம் நாட்டில் குடியேறி வாழ்ந்து கொள்ளட்டும் "மாலேகோன் முதலான இடங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் ஹிந்துக்களின் நியாயமான எதிர்வினைகளாகும். தங்களுடைய மக்களுக்கு எதிராக நிரந்தரமாக அக்கிரமம் நடக்கும் வேளையில், 


       ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்ற தத்துவங்கள் எதுவும் இக்காலத்தில் விலை போகாது"  "தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டமே எங்களின் இலட்சியம்.  அதனைத் தடுப்பதில் அரசு தோல்வியடைந்தால், ஹிந்துக்கள் எதிர்வினையாற்றுவர். 

     ப்ரக்யா சிங் துவங்கிய மாலேகோன் குண்டு வெடிப்புத் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராகக் காவல்துறை சுமத்தும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சரியானவையே. தீவிரவாதிகளுக்கு எதிராக அவர்கள் எதிர்த் தாக்குதல் மட்டுமே நடத்தியுள்ளனர்"..

         வெடிகுண்டுக்குப் பதிலாக ஏன் வெடிகுண்டு ஆகக் கூடாது?
மாலேகோன் வழக்கில் கைது செய்யப்பட்ட மேஜர் சமீர் குல்கர்ணி முதலானவர்கள், உண்மையில் தேசப்பற்று மிக்கவர்களாவர். தேசப் பற்றாளர்கள் மீது குற்றம் சுமத்தி, ஹிந்துக்களைப் பலவீனப் படுத்துவதற்கு அரசு முயல்கிறது..குஜராத் நிகழ்வைக் குற்றச் சாட்டாகச் சொல்பவர்கள் குடியேறுவதற்கு உலகில் பல முஸ்லிம் நாடுகள் உள்ளன. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் உடையவர்கள் அங்குச் சென்று வாழ்ந்து கொள்ளட்டும். ஹிந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டியது எங்களின் கடமை.

      "ஜெர்மனியில் வசிப்பவர்களை ஜெர்மனியர் என்றும் பிரிட்டனின் வசிப்பவரை பிரிட்டீஷியர் என்றும் அழைக்கும் பொழுது, ஹிந்துஸ்தானில் வசிப்பவர்களை ஹிந்து என்று ஏன் அழைக்கக் கூடாது?" "இந்தியாவை மதசார்பற்ற நாடு எனக் கூறக்கூடாது. இந்தியாவில் மத சார்பற்ற அரசு நடக்கிறது என வேண்டுமானால் கூறலாம். விடுதலையின் பொழுது நேரு முதலானவர்கள் இப்புனித ஹிந்து மண்ணிற்கு துரோகம் இழைத்து விட்டனர். பாரம்பரிய ஹிந்து மண்ணான இந்தியா, ஒருபோதும் ஒரு மதசார்பற்ற நாடாக இருக்கவே முடியாது.  எனவே இம்மண்ணை ஹிந்து மண்,  ஹிந்து நாடு என்று தான் அழைக்க வேண்டும்".என்று முழங்குகிறார். 

      இப்படி பேசுபவர்களை பற்றி கவலைபடாத, கைது செய்யாத, அரசும் புலனாய்வு துறையினரும்  முஸ்லிம்களை தேடித்தேடி வேட்டையாடுகிறது ! 
 ஹிமானி சவார்க்கர் போன்றவர்களை கைது செய்து,உண்மை கண்டறியும் சோதனை நடத்தி  எங்கெங்கே,என்னென்ன நாசவேலைகளை செய்துள்ளார்கள் என்பதை கண்டறிந்து முதலில் தண்டிக்கவேண்டும். தண்டனையை பொதுமக்கள் முன்னிலையில் தரவேண்டும். அப்போதுதான் காந்திய தேசம் அகிம்சை வழியில் பயணப்படும்! 

     இந்த நாடு  எங்களுக்கு  சொந்தம் என்று கோட்சேவின் மருமகள்கூசாமல் பேசுகிறாரே?   இதற்கு உங்கள் பதிலென்ன? 


Wednesday, 17 July 2013

பொது சிவில் சட்டம் தேவையா?


        விஷ்வ இந்து பரிஷத் தலைவர்   பிரவீன் தொகடியா  பாபர் மசூதி இருந்த அதே இடத்தில ராமர் கோயில் கட்டவேண்டும்,பொது சிவில் சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் இந்துத்துவ அமைப்பு தலைவர்கள் பலரும்  வெகுஜன மக்களான இந்துக்களின் வாக்குகளை மனதில் வைத்து இதுபோல பேசுவதுவாடிக்கையாக இருந்துவருகிறது!

       இந்தியாவில் உள்ள  முஸ்லிமோ,இந்துவோ, சீக்கியனோ,கிருத்துவனோ அல்லது வேறு எந்த மதத்தை சேர்த்தவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் கிரிமினல் (குற்றச்)  சட்டம் பொதுவானதாகும். கிரிமினல் சட்டப்படி எந்த மதத்தை சேர்ந்த யாராக இருந்தாலும் அவர்களது குற்றசெயல்களுக்கு நடவடிக்கை எடுக்கவும்,தண்டனை வழங்கவும் முடியும்.!


         பொதுவான கிரிமினல் சட்டம் அமுலில் இருந்து வரும் நிலையில்,  இந்துத்துவ வாதிகள்,   பொதுவான சிவில் சட்டம் வேண்டும் என்று இந்துத்துவ வாதிகள் தொடர்ந்து  ஏன் கூறுகிறார்கள்?

        இந்திய அரசியல் அமைப்பில் சிறுபான்மையினராக உள்ள சமூகங்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. கல்வி நிலையங்கள்,வழிபாட்டு உரிமைகள், அரசின்  நிதி ஒதுக்கீடு,உதவித் தொகை போன்ற சலுகைகளை பெற்றுவரும் சிறுபான்மையினருக்கு அவைகளை வழங்க கூடாது என்று நேரடியாக  தடுப்பதற்கு பதிலாக, மேலும்  சிறுபான்மை சமூகங்களின் வாழ்வாதாரத்தை பறித்து, பாதிப்புக்கு உள்ளாக்க வேண்டும் என்ற பாசிச இந்துவெறியர்களின் நோக்கமே  பொது சிவில் சட்ட கோரிக்கையாக அவர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.


          இந்தியாவில் பொது சிவில் சட்டம் அமுல்படுத்தினால் சிறுபான்மை இன மக்கள் மட்டும் பாதிக்க படுவார்கள் என்பதில்லை. இந்து மக்களாக அடையாள படுத்தும்  தாழ்த்தப்பட்ட,  பழங்குடியின ,  மிகவும் பிற்படுத்தப்பட்ட  சமூகங்களும், சாதிகளும் கூட பாதிக்க படும். !

       இன்று அவர்களுக்கு வழங்கி வரும் கல்விச் சலுகைகள், கல்வி உதவித் தொகை,  இருப்பிட வசதி, இட ஒதுக்கீடு,  வேலைவாய்ப்பில் முன்னுரிமை, அவர்களின் முன்னேற்றத்திற்கு மத்திய - மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் சிறப்பு கூறுகள் திட்டங்கள்,  அவற்றுக்கு வழங்கப்பட்டு வரும் நிதி ஒதுக்கீடு, சிறப்பு தொழில் வாய்ப்புகள்,  கடன் வசதிகள்   ஆகிய அனைத்தும் கேள்விக்குறியாகும்.!

       பொது சிவில் சட்டப்படி, இவைகளை  S C , S T AND  M BC  மக்கள் எதிர்காலத்தில்  பெற முடியாமல் போகும். அவைகளை தொடர்ந்து பெற நீதிமன்றம் போனாலும்  சட்டத்தை காட்டி  தடுத்துவிட முடியும். . இந்த விவரங்களை அறியாமல்  முட்டாள்தனமாக, வெகுஜன  இந்துக்கள் எனபடும் தாழ்த்தப்பட்ட,பழங்குடியின,மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் பொது சிவில் சட்டம் கோரிக்கைக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்!         பிராமணர்கள்,ஆதிக்க சாதிகள்,   அதிகார வர்க்கங்கள் ஆகியோர்தான் பொது சிவில் சட்டத்தால் மேலும்  லாபம் பெறுவார்கள். ! எல்லாம் சட்டப்படியே   நமக்கு மறுக்கப்படும்.   'அவாள்'களுக்கு கிடைக்கும். அதற்காக    நடத்தும்  நாடகமே, பொது சிவில் சட்டம்   என்பதை புரிந்து நாம்  கொள்ள வேண்டும்! .

       பொது சிவில் சட்ட கோரிக்கைப் பற்றி  முஸ்லிம் சமூக புரட்சியாளர், போராளி டாக்டர்.பழனிபாபா அவர்கள்  முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தெளிவான பார்வை கொண்டு, கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.  அவரது கருத்துகளை  அடுத்த பதிவில் பார்ப்போம்.

Monday, 15 July 2013

மோடிக்கு வக்காலத்து வாங்கும் துக்ளக்!

விவேக சிந்தாமணி என்ற பழைய நூலில் உள்ள பாடல் ஒன்று

"குக்கலைப் பிடித்து  கூண்டிலே அடைத்துவைத்து 
மிக்கதோர் மஞ்சள் பூசி மிகுமணம் செய்தாலும்
அக்குலம் வேறாமோ அதனிடம் புனுகு உண்டாமோ?
குக்கலே குக்கல் அல்லலால் குலந்தனில் வேறாமோ ?! " -என்கிறது. குக்கல் என்றால்    நாய் என்று பொருள். (தெலுங்கில்)

       குஜராத் படுகொலைகள்,முஸ்லிம் மக்கள் இன அழிப்பு குறித்து   நரேந்திர மோடிபேசியதற்கு கடும் கண்டனங்களும்,விமர்சனங்களும் எழுந்து வருகின்றன


         நாய்களின் குணம் மாறாது என்பதை அப்போதே தமிழர்கள்   நூலில் பாடல்களாக எழுதி வைத்துள்ளதை அறிந்தால், "நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது எதையோ தேடிபோகும்", அதன் குணம் மாறாது என்ற உண்மையை அறிந்தவர்களுக்கு, நரேந்திர மோடியின் நாய்குணம்,  பேய்குணம் குறித்தும் தெரிந்திருக்கும்!

       பி.ஜே.பி.-யின் தேர்தல் பிரசாரக் குழு தலைவராக அறிவித்த உடன் நரேந்திர மோடிக்கு இந்தியாவின் பிரதமராகவே ஆகிவிட்டது போல நினைப்பும், திமிர்த்தனமும் வந்துவிட்டது.ஆணவத்தின்எல்லைக்கே போய்  ஏதோதோ பிதற்ற ஆரம்பித்து விட்டார்.!        இனம் இனத்தோடு சேரும் என்பார்களே?  அதுபோல,  மோடிக்கு வக்காலத்து வாங்க  தமிழகத்தில் ஒருவர்  பத்திரிக்கை  நடத்துகிறார் !  "சோ" என்ற அந்த  மகா மேதை, அறிவு ஜீவி  தனது துக்ளக்  பத்திரிக்கையில் " நரேந்திர மோடி இந்தியாவிலேயே  மிகச் சிறந்தவர்,  அப்பழுக்கற்றவர், நேர்மையாளர்  " என்று பாராட்டி சான்று  தருகிறார்.  டாயிலெட்டுக்கு  கூட உபயோகமில்லாத  பத்திரிக்கையில் (17.07.2013) மோடிVS காங்கிரஸ் என்று 11.08.2010-ல்  எழுதியதை மறு தலையங்கமாக  போட்டு  அறிய கண்டுபிடிப்பை  வெளிபடுத்துகிறார்.

       மேலும் நேர்மையாக,மிகத் திறமையுடன் ஆட்சியை நடத்த முடியும்  என்று நரேந்திர மோடி நிருபித்து வருகிறார்   என்று துக்ளக்  சொல்கிறது. நரேந்திர மோடியின்  நேர்மை  எப்படி பட்டது என்பதை எல்லோரும் மறந்து விட்டார்கள் என்று நினைத்து இப்படி பிதற்றுகிறது!


       காவி குண்டர்களை வைத்து,  குஜராத்தில் நடத்திய காட்டுமிராண்டித் தனங்களை, படுகொலைகளை, கொள்ளைகளை, நரேந்திர மோடியின் மிக சிறந்த நிர்வாகம்  எப்படி காவல்துறையை வைத்து மிரட்டியது, சாட்சியங்களை அழித்தது,  சாட்சி சொல்ல வந்தவர்களை மிரட்டியது, என்பதெல்லாம்  பூனை கண்ணை மூடிகொண்டதுபோல   மூடிக்கொண்டு, மோடியின்  ஆட்சியில் அவரது  கண்பார்வையில் நடந்த சொல்லொண்ணா துயரங்களை  மூடி மறைத்துவிட்டது,  இவரது கண்களுக்கு மட்டும் நேர்மையும் , மிகத் திறமையும் ஆக தெரிகிறது.


      2002ம் ஆண்டு நடந்த குஜராத் படுகொலையின்போது தீவைத்து எரிக்கப்பட்ட வீடுகள் பத்தாயிரத்து 504, எரிக்கப்பட்ட கடைகள் பத்தாயிரத்து 429, தீ வைத்து எரிக்கப்பட்ட லாரி காலாஸ்கள் இரண்டாயிரத்து 623.வாழ்க்கையை இழந்து 103 நிவாரண முகாம்களுக்கு ஓடி வந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்து 13ஆயிரத்து 697. இந்திய வரலாற்றில் மிக மோசமான இந்த வன்முறையின்போது கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை குறித்து இன்றுவரை முழுமையான தகவல் இல்லை. எனினும் ஆயிரக்கணக்கானவர்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் கொல்லப் பட்டார்கள் என்பது மட்டும் உண்மை! 

 நாய்களின் வாலை நிமிர்த்த முடியாது, குணத்தையும் தான்!  நரேந்திரமோடி,'சோ'.ராமசாமியை  திருத்த முடியாது! 

        இன்றும் கூட மனித உரிமை மீறல் குற்றங்கள், பெண்களை வாடகை தாய்களாக  தனி அறைகளில் அடைத்து வைக்கும்  கொடுமைகளில்  குஜராத் மாநிலம் முதலிடத்தில் இருப்பது   இந்த குருடனுக்கு  தெரியவில்லை ! தெரிந்தாலும்  கூட..   அதனையும்  மிக திறமையாகவும், நேர்மையான செயலாகவும்   பாராட்டி சுகம் காணும் இதுபோன்ற ஜென்மங்கள் என்பதில் வியப்பு இல்லை!

Friday, 12 July 2013

காதலுக்கு மரியாதை செய்வோம்,வாருங்கள்!

         இளவரசனின்  இறப்பு பரபரப்பாக  ஆக்கப்பட்டு, மிகபெரிய தலைவர் ஒருவரின் இறப்பைபோல  முக்கியத்துவம்  பெற்றுது. மனமொத்து காதலித்து கலப்புமணம் செய்துகொண்ட  இளம் ஜோடியான இளவரசன் திவ்யாவுக்கு  சமூக பாதுகாப்பு  இல்லாமல் போனதும்,அவர்கள் சேர்ந்து வாழ அனுமதிக்காமல்  போனதும் மிகபெரிய சமூக கொடுமையாகும்.!

       இளவரசனின் காதல் விவகாரம்  ஆரம்பத்தில் இருந்து சர்ச்சையாக ஆக்கப்பட்டது.   நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஊடகங்களும்,விடுதலை சிறுத்தைகளும்,வழக்கறிஞர்களும், இளவரசன் தரப்பினரும் முன்னுக்கு பின் முரணாக சித்தரித்து   குழப்பத்தை ஏற்படுத்தி வந்தனர்.


         நீதித் துறையும் கூட உணர்வு பூர்வமான  இந்தவிவகாரத்தை  முறையாக விசாரிக்கவில்லை. இளவரசனுடன்  திவ்யா  இருப்பதை அறிந்தும்,அவர்கள் சேர்ந்து வாழ்ந்து வருவதை அறிந்திருந்தும் திவ்யாவின் தாயார்  கொடுத்த ஆள் கொணர்வு மனுவை தள்ளுபடி செய்யாமல்,விசாரணைக்கு ஏற்றுகொண்டதால் இருவரும் சேர்ந்து வாழும் சூழலை கெடுத்து விட்டது! விளைவு,   திவ்யா ஒன்றாம் தேதி இளவரசனுடன் செர்ந்துவால்வதாக சொன்னவர்,மூன்றாம் தேதி மூளை சலவை செய்யப்பட்டு, இளவரசனுடன் இனி சேர்ந்து வாழ வழியில்லை என்று சொல்ல வைக்கப்பட்டார். !

       இதயத்தை பரிமாறிகொண்டு  இணைந்த காதலர்களை, அனைவரும் சேர்ந்து   இதயமே இன்றி பிரித்ததால், காதல் இளவரசன் மூளை சிதறி சாக நேரிட்டது .!


         மரணத்திற்கு அப்புறமும்  பிரச்சனை தீரவில்லை. கொலையா தற்கொலையா என்று  மோதிக்கொள்ளும் நிலையை ஏற்படுத்திவிட்டனர்   இளவரசனின் மரணத்தை    போலீசாரும் கூட முறையாக விசாரிக்க முன்வராமல்  ஏதோ நிர்பந்தத்தின் பேரில் விசாரணை  நடத்துவதாக தோன்றுகிறது.

     இளவரசன் தற்கொலை செய்துகொண்டதாக இருந்தாலும் கூட காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிந்து கைது செய்து இருக்கவேண்டும். மேலும் . இளவரசன் கொலை செய்யப்பட்டு இருக்க கூடும் என்ற கோணத்தில் இதுவரை விசாரணை செய்யாமல் இருக்கிறது.

     
     ஒருவேளை இளவரசன் கொலைசெய்யப்பட்டு இருந்தால் தமிழகத்தில் ஏற்படும் கலவரங்கள்,சாதிய மோதல்கள்,சட்டம்- ஒழுங்கு பிரச்சனைகளை  உத்தேசித்து   கடமையை செய்ய தவறி வருகின்றனர்.

      இளவரசனின் உடலை  இன்று . எயிம்ஸ் மருத்துவமனை தடய ஆய்வு மருத்துவர்கள் மறுபிரேதப் பரிசோதனை செய்கிறார்கள். அவர்கள் இறப்பு குறித்தது  எதுசொன்னாலும் சர்ச்சைகள் விலகபோவதில்லை, இரு சமூக மக்களுக்கு இடையில்  ஏற்படுத்தப்பட்டு  உள்ள சாதிய துவேசமும், கசப்பு உணர்வுகளும் எளிதில் மறைய போவதில்லை.!


       இவைகளுக்கு  தீர்வு காணாமல்,   புண்ணுக்கு புனுகு தடவும் செயல்களை செய்வதால்  எதிர்காலத்திலும் கூட எந்த ஒரு பயனும் எற்படப்போவதும் இல்லை !

          ஆகவே சமூகங்களுக்கு இடையில் தீவிர வியாதியாக  பரவிவரும் சாத்திய வேற்றுமைகளை களையவும் நல்லிணக்கம் ஏற்படவும் அனைவரும் பாடுபட முன்வரவேண்டும் !  அப்படி செய்வதுதான் இறந்த  இளவரசனுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்!

      திவ்யா இளவரசனின் இறுதி அஞ்சலிக்கு செல்வதில்லை என்று மறுத்து உள்ளதன் மூலம்  காதலுக்கு இலக்கணமாக இருந்தவர், அவமான சின்னமாகவும்  ஆகிவிட்டார்!

Thursday, 11 July 2013

இந்தியன் முஜாஹிதீன்கள் இந்துக்களா,முஸ்லிம்களா?

         சோனியாவும்,சிண்டேவும் குண்டுகள் வெடித்த மகாபோதி ஆலயத்தை பார்வை இட்டு உள்ளனர்.   குண்டு வெடிப்புக்கு  எந்த தீவிரவாத  அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ள முன்வராத நிலையில், இந்தியன் முஜாஹிதீன்கள் பொறுப்பு ஏற்றுகொண்டதாகவும் அவர்களது ட்விட்டர்  பக்கத்தில் தெரிவித்து உள்ளதாகவும்  செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

           அதுமட்டுமின்றி மும்பையில் ஒருவாரத்தில் பயங்கர நாசவேலையை செய்ய இருப்பதாகவும்  முடிந்தால் தடுங்கள் என்று எச்சரித்து உள்ளதாகவும் கூறுகிறார்கள்.


          எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இவ்வாறு முன்கூட்டியே எச்சரிக்கை செய்து,  சதிவேலைகளை செய்வதில்லை.  சதிவேலைகள் நடந்த பிறகுதான் செய்தது யார் என்றோ, எந்த அமைப்பு என்றோ  புலனாய்வு செய்து கண்டுபிடிப்பார்கள்!   இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு ட்விட்டெரில் பகிரங்கமாக சவால் விட்டு இருப்பதை பார்க்கும்போது, அது உண்மையான பயங்கரவாத அமைப்பு இல்லை என்பதை (கற்பனை ) எளிதாக அனைவரும் தெரிந்து கொள்ள முடியும்.

          மேலும் அந்த செய்தி வந்த இணைய பக்கங்கள் போலியாக உருவாக்கப் பட்டவை என்று புலனாய்வு அதிகாரிகள் சொல்கிறார்கள்! அந்த இணைய தளத்தை யார் பயன்படுத்துகிறார்கள்?,  எப்போது உருவாக்கப்பட்டது,? எங்கிருந்து  செய்தி அனுப்பப்பட்டது ?  என்பதெல்லாம் இன்றைய நவீன தொழில் நுட்பத்தினால் எளிதில் கண்டுபிடிக்க முடியும்.  ஆகவே, அந்த கோணத்தில்  உண்மையாக  புலனாய்வு செய்தால் சதிக்கு பின்னால் உள்ளவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடியும்.  அதனை செய்யாமல், அரசியல்  காரணங்களுக்காக   குண்டு வெடிப்புகளுக்கு பாகிஸ்தானை குறை கூறுவது தவறு என கருதுகிறேன்.


          காரணம், இந்தியாவைப் போலவே தீவிரவாதத்தால்... இந்தியாவை விட அதிகமாக பாதிக்கப்படும் நாடு,  ஏராளமான குண்டுவெடிப்புக்கு ஆளான நாடு பாகிஸ்தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.!

         பாகிஸ்தானில்  நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு இந்தியாதான்  காரணம் என்று கூற முடியுமா?   இந்தியாவில் குண்டு வெடித்தால், உடனே பாகிஸ்தான் காரணம் என்று சொல்வதை என்னவென்று  நினைப்பது?

       உண்மையில் இருநாடுகளும் அணுஆயுதம் உள்ள நாடுகள், மதரீதியான  சச்சரவுகள்,  பொருளாதார நெருக்கடிகள்,  எல்லைப் பிரசனைகள் , காஸ்மீர் பிரச்சினை  என்று  உள்ள நாடுகள்.   இந்த நாடுகளில் அமைதியும் ஸ்திரத்தன்மையும்  நிலவகூடாது என்று எண்ணி, ஆதாயம் பெரும் நாடுகள் ஏன் சதிவேலைகளை இருநாடுகளிலும் செய்ய கூடாது? என்று நினைக்கவும் அவ்வாறு  செய்கின்ற சதிவேலைகளா? என்றும் பார்க்கவேண்டி உள்ளது.


       அதனைப் பற்றி சிந்திக்காமல்,  "மொட்டைதாசன் குட்டையில் விழுந்தான்" என்பது போல, நமது புலனாய்வு புலிகளும்,"ஈஅடிச்சான் காப்பி" கணக்கான இந்துத்துவ சிந்தனை ஊடகங்களும்  சுற்றி,சுற்றி  குண்டு வெடிப்புகளுக்கு இந்திய முஜாஹீதீன்கள் காரணம் என்றும்  பாகிஸ்தான்  பின்னணி என்றும் கூறுவதைப் பார்க்கும்போது வேதனை ஏற்படுகிறது.   ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறி உண்மையாக நம்பவைக்கும், கோயபல்ஸ்  யுக்தியாக நினைக்கத் தொன்றுகிறது!

      போகட்டும்!   உண்மையில்  இந்தியன் முஜாஹிதீன்கள்  இருகிறார்களா? இருகிறார்கள் என்றால், அவர்கள்  இந்துக்களா? முஸ்லிம்களா? புலனாய்வு செய்து இன்டர்போல் அமைப்பு  சொல்ல  வேண்டும்.! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்,சொல்லுங்க பிளீஸ்!


Wednesday, 10 July 2013

ஊழலில் இந்தியா முதல் இடம்


       'டிரான்ஸ்பெரன்சிஇண்டர்நேஷனர்'என்றஅமைப்பு உலகில் உள்ள 107 நாடுகளில் வசிக்கும் லட்சத்து 14 ஆயிரத்து270 பேரிடம்  சர்வே நடத்தியது.
       இந்த சர்வேயில், கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் ஊழல் பன்மடங்கு பெருகி விட்டதாக 70 சதவீதம் இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் நடந்த 'ஊழல் அளவுக்கோல் 2013' சர்வேயில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது 
 
 
        ஊழலை ஒழிக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க, இந்திய அரசு எவ்வித முயற்சியும் எடுப்பதாக தெரியவில்லை என இவர்களில் 68 சதவீதம் பேர் கருதுகின்றனர்.

    '86 கதவீதம் பேர் இங்குள்ள அரசியல் கட்சிகள் ஊழல் கறை படிந்தவை என்று கருத்துரைத்து உள்ளனர்!.

       ஆசிய அளவில் மட்டுமின்றி உலகளாவிய அளவிலும் ஊழலை எதிர்க்கும் நடவடிக்கையிலும் மக்களின் நம்பிக்கையை சம்பாதிக்க இந்தியா தவறி விட்டது.

          உலகின் தனிப்பெரும் சக்தியாக மாற நினைக்கும் இந்தியா ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில்,   உள்நாட்டு மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற தவறி விட்டதாக எங்கள் சர்வே முடிவுகளில் தெரிய வந்துள்ளது' என டிரான்ஸ்பெரன்சி இண்டர்நேஷனல் அமைப்புக்கான ஆசிய பிராந்திய பிரதிநிதி," ருக்ஷானா நனயக்கரா" தெரிவித்துள்ளார்.

          உலக அளவில் தங்களது காரியத்தை குறுக்கு வழியில் சாதிக்க 27 சதவீதம் பேர் கடந்த 12 மாத காலத்தில் யாருக்காவது லஞ்சம் தந்துள்ளனர்.

ஆனால், இந்தியாவில்   54 சதவீதம் பேர் லஞ்சம் தந்து காரியம் சாதித்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
 
          ஊழலில் மட்டும் இந்தியா  முதலிடம் பெறவில்லை,லஞ்சத்திலும் இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது.

           இந்தியாவில் போலீஸ் துறையில் 62 சதவீதம், பதிவுத்துறை மற்றும் அனுமதி வழங்கும் துறையில் 61 சதவீதம், கல்வி துறையில் 48 சதவீதம், நில அளவை மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட துறையில் 38 சதவீதம், நீதித்துறையில் 36 சதவீதம் லஞ்சம் நடமாடுவதாக மேற்கண்ட ஆய்வு தெரிவிக்கிறது

           இப்படி பெருகிவரும் லஞ்சம் ஜனநாயகம் மற்றும் சட்டப்படியான நடைமுறை ஆகியவற்றின் மீதான மக்களின் அடிப்படை நம்பிக்கையையே தகர்ந்து விடுகிறது.லஞ்சம் பெறுவது என்பது குறுக்கு வழியில் ஆதாயம் பெற நினைக்கும் தனி நபருக்கு மட்டும் அதிக செலவை ஏற்படுத்தவில்லை. எதிர்வினையாக, மற்றவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய முன்னுரிமைகளையும், சட்டத்தின் ஆட்சியையும், ஒட்டுமொத்தமாக சமுதாய ஒருமைப்பாட்டையும் அர்த்தமற்றதாக்கி விடுகிறது எனவும்   சர்வே அறிக்கை தெளிவு படுத்துகிறது! 
 
 
        இந்தியா வல்லரசு ஆகும்,பாலரும் தேனாறும் பாயும் என்று கூசாது பொய்யுரைகளை,புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடும் நம்மதலைவர்கள், இந்தியாவை   சோமாலியா,எதியோப்பியா  போன்று ஆக்காமல் விட மாட்டார்கள்  போலிருக்கிறது! 
 

Sunday, 7 July 2013

குண்டுவெடிப்புக்கு புத்தரும் விலக்கில்லை!

          பீகாரின்  முக்கிய நகரான  புத்த கயாவில் உள்ள மகா போதி ஆலயத்திற்கு  உள்ளும் வெளியும் ஒன்பது குண்டுகள்  வெடிக்கப்பட்டு உள்ளது! உலக அளவில் பிரசித்திப்பெற்ற,புராதன சின்னமாக, புத்தர் ஞானம் பெற்ற இடமாக, கருதப்பட்டு வரும்  மகா போதி ஆலயத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தி இருப்பதன் மூலம் தீவிர வாதத்துக்கு   புத்தரும் விலக்கில்லை என்று தெரிகிறது!


           வழக்கம் போல இந்த குண்டுவெடிப்புக்கும் இந்தியன் முஜாஹித் அமைப்புதான் காரணமாக இருக்கும் என்று இந்திய ஊடகங்களும் புலனாய்வு புலிகளும் சந்தேகிக்க ஆரம்பித்து விட்டனர். இந்திய முஜாஹிதுக்கள்  முஸ்லிம்கள் தான் என்று கூற ஆரம்பித்து,புத்தர் கோவிலில் குண்டுவைக்க ஒரு பொருத்தமான கற்பனையை கூறவும் செய்வார்கள்!

            ஒன்றரை ஆண்டுக்கு முன்பே, பிடிபட்ட இந்தியன் முஜாஹித் ஒருவர்  மியான்மரில்  முஸ்லிம்கள்  மீது நடத்தும் தாக்குதலுக்கு  பழிவாங்கப் போவதாக சொன்னதாகவும்,  டெல்லி பொலிசார், உளவு பிரிவுக்கு சொல்லி,உள்துறை அமைச்சகம்  மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை  செய்யப்பட்டதாக செய்திகள் பரப்பபடுகிறது!


            இந்தியன் முஜாஹித்  என்பதே உளவுத்துறையும்,  ஊடகங்களும் உலவவிட்டு வரும் கற்பனை அமைப்பு என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு   சொன்னது  ஒருபுறம்  இருக்கட்டும்!

         குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப் பட்டதற்கு, பல்வேறு குண்டுவெடிப்புகள், கலவரங்களில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, பாதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு,சித்தரவதை செய்யப்பட்டு, சீரழிக்கப்பட்டதற்கு,  பழிவாங்க வக்கற்ற, கையாலாகாத, இந்திய முஸ்லிம்கள், இந்தியன் முஜாஹித்துக்கள், மியன்மாரில் தாக்கப்படும் முஸ்லிம்களுக்காக... இந்தியாவில் அதுவும் மாகாபோதிஆலயத்தில் குண்டு வைப்பதன்  மூலம்   பழிவாங்குகிறார்கள் என்கிறார்கள்! "தென்னைமரத்தில் தேள்  கொட்ட பனை மரத்தில் நெறிகட்டிய கதை"  சொல்கிறார்கள்!


       பீகாரில் பி.ஜே.பி-யுடன் வைத்திருந்த கூட்டணியை நிதிஷ் குமார் விளக்கிக் கொண்டார்.  காங்கிரசும் சுயேட்சைகளும்  ஆதரவு அளித்து வருகிறது.  பி.ஜே.பி. அங்கு மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுகளைப் பெற வேண்டும்.!

       ஆகவே, அங்கு ஆட்சி நடத்தி வரும் நிதிஷ் குமாருக்கும், அவரது  கட்சிக்கும்,  அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும்.  கூடவே, லாலு பிரசாத்தையும்அவரது கட்சியையும் சமாளிக்க வேண்டும். மத்தியில் ஆளும் காங்கிரசுக்கும்  நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும். என்பதெல்லாம் பி.ஜே.பி.யின்  நிலைபாடாக உள்ளது.


           இந்த நிலையில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை,  நிதிஷ் குமார் வெறுத்துவரும்  நிலையில் ,  புத்த கயாவுக்கும் , மகாபோதி  ஆலயத்துக்கும்  நரேந்திர மோடி  சமீபத்தில் சென்று திரும்பிய நிலையில்,  குண்டுவெடிப்புகள் நடந்துள்ளதை  கவனிக்க வேண்டி உள்ளது!

        "பாவி போன ஊருல ஏரியும் பாலாகும்" என்பதுபோல இருக்கிறது கதை! இதே நரேந்திர மோடி  மதுரைக்கும் வந்து சென்று இருக்கிறார். அவரை சோழவந்தான் சுப்பிரமணியம் சாமியும்   குஜராத் சென்று  சந்தித்து வந்திருக்கிறார். என்பதை எல்லாம் நினைத்து பார்க்கும்போது, மதுரை மீனாட்சி அம்மன் கூட எச்சரிக்கையுடன்   இருக்க வேண்டி நிலை ஏற்பட்டு உள்ளது!

     இன்னும் என்னென்ன கூத்துக்கள் நாடாளுமன்ற தேர்தல்வரை நடக்குமோ என்று பார்க்கலாம்

சாதிகள் மட்டுமே நீதியானது!

ஷாஜகானே.. !
நீயும் காதலித்தாய்,
மும்தாஜை நேசித்தாய்!
 உங்களால் காதல்ஆசீர்வதிக்கப்பட்டது!

காதலியின் இறப்புக்குப் பின்பும்
உனதுநேசம்  உன்னதமென;
உலகுக்கு அறிவித்தாய்!
உதயமானது தாஜ் மஹால்!

உனது காதல் மட்டுமல்ல,
நீ கட்டிய கல்லறையும்;
காதலின் அடையாளமானது!
உலகின் அதிசயமானது!
 
 

சாதியைச் சொல்லி,
காதலின் நீதியைக் கொன்று,
காதலே குற்றமென்று..
இங்கே கல்லறை கட்டுகிறார்கள்!

சில்லறை மனிதர்களின்,
சிறுமதியால்  துவேசத்தால்;
காதலே இன்று சமாதியானது!
சாதிகள் மட்டுமே நீதியானது!

Friday, 5 July 2013

தரம்கெட்ட மனிதர்களும், சட்டங்களும்!

       மனிதர்கள் கல்வி பெற்றுள்ளனர். வசதி வாய்ப்புகள் அதிகரித்து உள்ளது,பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆனால் அன்பு,பாசம்,அறிவு,நற்சிந்தனை, மனித நேயம்  முதலிய குணங்களை இழந்து,மிருகங்களாக மாறிவருகின்றனர் என்பதையே தருமபுரி  சம்பவங்கள், மரக்காணம் சம்பவங்கள் உணர்த்துகின்றன !

        மனிதர்கள் தரம்கெட்ட மிருகங்களாக மாறும் நிலையை கட்டுபடுத்த நமது அரசும்,  சட்டங்களும் தவறிவிட்டன என்பதால், இளவரசன் இறப்புக்கு... (அது  கொலையாக  இருந்தாலும் தற்கொலையே ஆனாலும்) அரசே  முதல் காரணம் ஆகும். !


        காதலுக்கு ஒரு சமூகம் ஆதரவாக,ஒரு சமூகம் எதிராக இயங்கியதை அறிந்தும் கண்மூடிக்கொண்டு மவுனமாக நமது அரசும்,சட்டங்களும் இருந்தது.

        கலப்பு திருமணத்தை சட்டம் அங்கீகரிக்கிறது, தீண்டாமை கொடும் குற்றம் என்று சொல்கிறது. காதலித்து,கலப்பு திருமணம் செய்த திவ்யா-இளவரசன் தம்பதிகளுக்கு  சமூக பாதுகாப்பு இல்லாத நிலையை அறிந்தும், அரசு பாதுகாப்பு தரவில்லை. இருவரும் சேர்ந்து வாழ எந்த ஏற்பாடும் செய்யவில்லை.!


        தீண்டாமையை  குற்றம் என்று  சொல்லும் சட்டம், தலித்துகள் குடியிருப்புகள்  கொளுத்தப்பட்டு, உடமைகள் கொள்ளை அடிக்கப்பட்டு, தலித்துக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளான நிலையில் நிவாரணமும்,உதவிகளும் மட்டுமே செய்தது..

       சமூகத்தில் சாதீய  தீண்டாமை இவ்வளவு ஆழமாக வேரோடி போய் இருப்பதற்கு, நமது அரசாங்கமும்  கையாலாகாத சட்டமும்  நீதிதுறையும் காரணம் ஆகும்.  அவைகள் . இந்தியா சுதந்திரம்  அடைந்து  இத்தனை ஆண்டுகள் கடந்தும்   "மனுதர்மம மனோபாவத்தை' மாற்ற முன் வரவில்லை, மாற்ற விரும்பவில்லை;மாற்ற முடியவில்லை! என்பது  ஒப்புகொள்ள வேண்டிய உண்மையும்  வேதனையும்  ஆகும்!


"ஓடும் உதிரத்தில், வடிந்து ஒழுகும் கண்ணீரில்;
தேடிப்பார்த்தாலும், சாதி தெரிவதுண்டோ அப்பா?

எவர் உடம்பிலும் இரத்தத்தின் நிறம் சிவப்பே அப்பா!
எவர் விழி நீரும் உவர்ப்பே இயற்கை குணமப்பா !"
   - என்று கவிமணி   பாடிய தமிழகத்தில்,

      "சாதி இரண்டொழிய  வேறில்லை" ,என்று சாற்றிய தமிழகத்தில்,
சாதியின் பெயரால் கலவரங்கள் நடக்கின்றன!

      "காதலும் வீரமும் தமிழர் வாழ்வின் இரு கண்களாக" போற்றி தமிழகத்தில்,
காதலை மையபடுத்தி,இரண்டு சமூகங்கள் மோதிக் கொ(ல்)ள் கின்றன !


 "நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால்,
நாட்டினர்தாம் வியப்பெய்தி, நன்றாம் என்பர்!
ஊடகத்தே,கிணற்றோரத்தே,ஊரினிலே
 காதல் என்றால்;தடுக்கின்றார்-அதை
பாடை கட்டி  கொல்ல வழிகள் செய்வார்!
பாரினிலே மூடரெல்லாம் பொறாமையால்
விதிகள் செய்து,முறை தவறி,
இடர் எய்தி கெடுக்கின்றாரே! "

          நெஞ்சு பொறுக்கவில்லையே,பாரதி!
 நீங்கள் பாடிய கவிதையை நிஜமாகி, கண்ணீரும்... செந்நீரும்..  சிந்துகின்றனர்! காரணம் மனுதர்மம வாதிகள்! மனிதநேயம் மறந்த  மகா பாவிகள் !!


Monday, 1 July 2013

இந்தியா வல்லரசாக மாறும் வழிகள்!

            நமது நாடு, நிறைய பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது!  கண்ணை மூடிக்கொண்டு எதைப் பற்றியும்  கவலை கொள்ளாமல் புதிய பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பம் செய்துவிட்டு,அதனை நிறைவேற்ற முனைப்பு காட்டி வருகிறது!

       
          புதிய பொருளாதார கொள்கையால் நுழைந்த பன்னாட்டு கம்பனிகள்,  எந்த விதிமுறைகளையும்,இந்திய சட்டதிட்டங்களை பற்றியும் கவலைப் படாமல்,  இந்தியாவை குப்பை மேடாக்கி வருகின்றன.

       இந்தியாவின் மண்ணும், விவசாயமும்,காற்றும் மாசுபட்டு விட்டது.  கனிமவளங்கள், இயற்கை ஆதாரம் சுரண்டப்பட்டு வருகிறது. பன்னாட்டு கம்பனிகளின் சுரண்டலுக்கும் லாபத்துக்கும்  இந்தியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது,

       ஐந்து ஆண்டு திட்டங்கள் பல தீட்டி,பல ஆயிரம் கோடிகளைக் கொட்டி, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட  அடிப்படை கட்டமைப்புகள் சீர்குலைந்து வருகின்றன.  விவசாயமே ஜீவநாடியாக,  முதன்மை ஆதாரமாக இருந்த இந்தியாவில், இன்று குடிநீரின்றி,  பலகோடி மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது!

       20-ஆண்டுகளுக்கு முன்பு,  நிலம் வைத்திருந்த இந்தியர்கள் இன்று நிலத்தை இழந்து, அவகளின் நிலங்களில் கூலியாக வேலைசெய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.  மீதம் சொற்ப நிலம்  வைத்திருக்கும் இந்தியர்களின் நிலங்களைப்  பறிக்கவும்,நிலம் வைத்திருப்பவர்களை பிச்சை எடுக்க வைக்கவும் வேண்டி  முனைப்புடன் நில  எடுப்பு சட்டத்தை கொண்டுவர ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள்.

 
       இருக்கும் நீராதாரத்தை வைத்து, இந்தியர்கள் யாரும் விவசாயம் செய்ய கூடாது என்று  விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கும் சட்டத்தை  நிறைவேற்ற முற்பட்டு உள்ளார்கள்!

         விவசாயத்தை முடக்கி,நிலங்களை பிடுங்கி,நீரின்றி செய்து, தரிசாகக மாற்றி,  பன்னாட்டு கம்பனிகளுக்கு அதனை பண்ணை நிலமாக கொடுத்து, பன்னாட்டு கம்பனிகள் இங்கே விளைவதை  எந்த தடையும் இன்றி, 6-வழி ஹைவே மூலம் ஹார்பருக்கோ,விமான நிலையத்துக்கோ,ரயில் நிலையத்துக்கோ எடுத்து சென்று, எற்றுமதி செய்ய,இந்திய ஆட்சியாளர்கள்  ஏவல் வேலை செய்து வருகிறார்கள்!


      பட்டினி சாவில் செத்து மடியும் இந்தியர்கள் மேலும் செத்து,
தொலையட்டும் என்று,  இப்போது கிடக்கும் உணவும் கிடைக்காமல் செய்யும்  நோக்கத்தில், உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்படுகிறது!  இந்த சட்டம் மூலம் உணவு பொருள் வழங்க முடியவில்லை என்றால், அதற்கு பதிலாக அரசு கொடுக்கும் ஐந்து  ரூபாயோ,பத்து ரூபாயோ அதனை கொண்டு நீங்கள் வெளியில் உணவு வாங்கி சாப்பிட்டு கொள்ளலாம் என்கிறது அரசு.! அதற்காக வால்மார்ட்-ஐ திறந்து வைக்க வகையும் செய்துள்ளது!

        இப்படி நாட்டையே சுடுகாடாக ஆக்கி, மக்களை மீண்டும் அடிமைகளாக மாற்றி, வால்லரசு நாட்டின்  கீழ்  இந்திய ஆளப்படும்போது இந்தியாவும் வல்லரசு நாடாக ஆகிவிடும்!  நமது ஆட்சியாளர்கள் இந்தியாவை வல்லரசு நாடாக்க  இப்படிதான் முயன்று வருகிறார்கள்!