Wednesday, 28 August 2013

மணிமேகலை சோனியாவும் ஆ'புத்திரன் கை'மாறும் ...

        கலைஞர் கருணாநிதி  உணவு பாதுகாப்பு  சட்ட மசோதாவுக்கு ஆதரவு அளித்து உள்ளதுடன் இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றிய சோனியா காந்தியை சிலப்பதிகாரம்  கவிய மங்கை மணிமேகலைக்கு  நிகராக  ஒப்புமை படுத்தி பாராட்டி உள்ளார். 

         உணவு பாதுகாப்பு மசோதா சட்டமாக ஆனதால்  மட்டுமே அதனால் உணவு பாதுகாப்பு கிடைத்துவிட்டது என்ற மாய தோற்றம்  இப்போது ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


          இந்திரா காந்தி  கச்சதீவை இலங்கைக்கு ஒப்படைக்கும் போது,தமிழர்கள் அத்தீவில் உள்ள வழிபாட்டு தளங்களுக்கு செல்லவும், அங்கே  மீன்பிடி வலைகளை உலர்த்திகொள்ளவும்,தீவில் தங்கவும் எந்த தடையும் இல்லை, பிரச்னையும் இல்லை என்று கூறப்பட்டது.  ஆனால்,  இப்போது அந்த உறுதிமொழி, உத்திரவாதம் நடைமுறை படுத்த படுகிறதா? இருக்கிறதா? நடைமுறையில்  இருந்தால்  தமிழக மீனவர்கள்  நூற்று கணக்கில் பலியாகி இருப்பார்களா?  ஆகவே,  ஒரு ஒப்பந்தம், சட்டம்  வந்துவிட்டதாலேயே  அதனால்  பயன் ஏற்பட்டு விடுவதில்லை!

          தமிழகத்துக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின்  அளவு குறைக்கபடாது என்ற உறுதிமொழிக்கு எவ்வளவு காலம் ஆயுள் இருக்கும் என்று தெரியவில்லை!  மேலும் மூன்றாண்டுகளுக்கு பிறகு,அல்லது மதிய அரசு மாறும் பொது  இந்த சட்டத்தை எப்படி செயல்படுத்துவார்கள் என்பதும் புதிராகும்!


         ராஜீவ்-ஜெயவர்த்தனே போட்ட ஒப்பந்தம் இன்று ராஜபக்சே-வால்  மீறப் படுகிறது. அதுபோல  வரும் அரசு இந்த உணவுபாதுகாப்பு  மசோதாவுக்கு எதிராக நடந்துகொண்டால் என்னவாகும் என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை!

          இதுபோல  எந்த சிந்தனையும் இன்றி,  அரசியல்ஆதாயத்தை  மட்டுமே கருத்தில் கொண்டு,    சோனியா காந்தியை  மணிமேகலை ஆக  உருவகப் படுத்தி கலைஞர்  பாராட்டுகிறார்.  சிலப்பதிகார மணிமேகலையிடம்  அள்ளக் குறையாமல்  அமுதம் பெருகும் அட்சய பாத்திரம் இருந்தது.  சோனியாவிடம்  அள்ளக் குறையாத ஊழலும், தமிழர்கள் மீதான ஓரவஞ்சனையும் இருப்பதை இந்த ஆ'புத்திரன் கருணாநிதி  அறிந்து கொள்ளவில்லை!


     ஆ'புத்திரன் கையில் இருந்த அட்சய பாத்திரமே,  பிறகு மணிமேகலையிடம்  சேர்ந்தது என்பது  சிலப்பதிகாரம்  கூறும் கதையாகும்.  கலைஞர் கருணாநிதி என்னும் "ஆ'புத்திரன்"  காங்கிரஸ் கையை ஆதரிக்கவும், கனிமொழிக்கு சோனியா செய்த "கைமாறு  கருதியும்   உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவுக்கு  ஆதரவு அளித்துச்செய்த  " கை'மாறே'  மணிமேகலை என்ற பாராட்டாகும்!

       சோனியாவை மணிமேகலை என்று கலைஞர் பாராட்டுவதை விட ஜெயலலிதாவை அவ்வாறு பாராட்டினாலும் தகும்.!  காரணம் தமிழகம் எங்கும் உள்ள கோயில்கள் மூலம் அன்னதானம், சத்துணவு திட்டம்,அம்மா உணவகம் மூலம்  பசிப்பிணி போக்கும் உண்மையான மணிமேகலை  அவர்தான்! ஆ'புத்திரன் கருணாநிதி  இதனை உணர்ந்து கொள்ளட்டும்!


Saturday, 24 August 2013

ஜனநாயக திரைக்குப் பின்னால்..

    நிலக்கரி ஒதுக்கீட்டில்  முறைகேடு நடந்து இருக்கிறது. 1.80 இலட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. நிலக்கரி ஒதுக்கீட்டில் பிரதமரும் சம்பந்தப்பட்டு உள்ளார். அதனால் பதவி விலக வேண்டும் என்று  போராடி  பாராளுமன்றத்தை முடக்கினர்.

       மவுன சாமியார் மன்மோகன் சிங் வாயே திறக்க வில்லை. !  பாராளுமன்றத்துக்கு வந்து பதிலளிக்கவும்  மறுத்துவந்தார். ஒருவழியாக ஊழல் குறித்து மத்திய புலனாய்வு துறை விசாரித்து வந்தது.


      வழக்குக்கு தேவையான ஆவணங்களை கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். வழக்கை நடத்த   மத்திய அரசு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்து வருகிறது என்று உச்சநீதிமன்றத்தில்  முறையிட்ட பிறகு,  நிலக்கரி ஒதுக்கீடு,சுரங்க ஊழல் தொடர்பான  ஆவணங்களை காணோம் என்று இப்போது அறிவித்து இருகிறார்கள்.

        இப்போதும் எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கி  போராடி வருகிறது. இந்திய ஜனநாயத்தில் இதுபோன்ற போராட்டம் எல்லாம் புதிதல்ல.!

          போராட்டத்தால் செய்யப்பட்ட ஊழலும்,கொள்ளை போன செல்வமும் திரும்ப கிடைத்ததாக வரலாறே இல்லை.   எதிர்கட்சிகள் இப்படிதான் கொஞ்ச  காலத்துக்கு ஆர்ப்பாட்டம் செய்து விட்டு ,  அப்புறம் வேறு ஊழலை, முறைகேட்டை எடுத்துக்கொண்டு கூக்குரல் இடும் என்பது ஆளுவோருக்கும்,ஊழலில் திளைக்கும்  பெரும்புள்ளிகளுக்கும் தெரியும்.!

       மக்களும் இதை எல்லாம் பார்த்துகொண்டு, அடுத்த ஊழல் குறித்து எப்போது தெரிய வரும் என்ற மனநிலைக்கு ஆளாகிவிட்டனர்.

          போர்ப்பஸ்  ஆயுத ஊழல் பற்றி  இப்போது போலவே எதிர்கட்சிகள் கூக்குரல் எழுப்பி,விசாரணை நடந்து வந்தது. இங்கிருந்து யாரையோ விசாரிக்கிறேன் பேர்வழி என்று இந்திய அதிகாரிகள் லண்டனுக்கு சென்றனர். லண்டன் விமான நிலையத்தில் கொண்டுபோன ஆவணங்கள் காணமல் போய்விட்டதாக தெரிவித்தார்கள்.

          ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டில் ஊழல் நடந்து இருக்கிறது என்று  கொஞ்ச காலம் பேசினார்கள். அப்புறம் அந்த ஆவணங்களைக் காணோம் என்று அறிவித்தார்கள். இன்றுவரை தேடியும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. போதாத குறைக்கு   அந்த ஆவணங்கள் இருந்த கட்டிடம் தீபிடித்து எரிந்தது. மின்கசிவு காரணமா? சதிவேலையா என்று விசாரணை நடத்தப்படும் என்றார்கள் .நடந்துகொண்டே இருக்கிறது. விடிவே இல்லை!

      இப்படி  ஊழல் தொடர்பான ஆவணங்கள் காணமல் போவதும், அழிக்கபடுவதும், எரிக்கபடுவதும்    இந்திய ஜனநாயகத்தில் தொடர்ந்துவரும் "ஒரு புதிய ஊழல் ஒழிப்பு"   யுத்தியாக அரசு நினைக்கிறது.

    ஊழலை ஒழிக்க வேண்டுமா?  ஆவணங்கள் இருந்தால் தானே  நடந்திருகிறதா?  இல்லையா? என்பதை கண்டுபிடிக்க முடியும்!   கண்டுபிடிக்க முடியாதபடி  செய்துவிட்டால்,   ஊழலும் ஒழிந்துவிடும். ஊழல செய்தவனும்  யோக்கியனாகி விடுவான் இல்லையா?    இந்த உத்தியைதான் இப்போது  ஜனநாயகப் போர்வையில்  சுரண்டும்   பாசிச வாதிகள்  இந்தியாவில் கடைபிடித்து வருகிறார்கள்!

           தனி நபரா? பாசிசத்துக்கு எதிரியா,பிரச்னையா ? அவனை கொலை செய்!  அமைப்பா? அதனை அச்சுறுத்தி பணியவை.!  முடியவில்லையா? கொஞ்சம் பணம் கொடுத்து அவனை விலைக்கு வாங்கு,அல்லது அவனை ஊழலால் வாதிகளாக சித்தரித்து  தடுத்துவிடு.!

        இரண்டும் முடியாதா? நமது ஊழல் தொடர்பானவற்றை  நிருபிக்க முடியாதவாறு  ஆவணங்களை திருத்து,  அழித்து விடு..!  இவைகள்தான் பாசிச வாதிகளின்  செயல்களாக இருந்து வருகின்றன.

         இவைகளையே இன்று ஜனநாயகப் போர்வையில்  செய்து வருகிறார்கள்!  இவ்வாறு செய்வது பாசிசத்துக்கு ஒன்றும் புதிய விஷயம் இல்லை. !காலம் முழுவதும் தங்களுக்கு எதிரான  ஆவணங்களை திருத்தியும், அப்புறபடுத்தியும், தங்களுக்கு சாதகமாக மாற்றி எழுதியும் வருகிறது என்பதே வரலாறு.!


Thursday, 22 August 2013

அதிகார வெறியால் ஏற்படும் ஆபத்துகள்..

         மக்களுக்கு தொண்டு செய்யும் மகத்தான பணியாக கருதப்பட்ட  ஆட்சி அதிகாரம் இன்று அதன் நோக்கத்தை  இழந்துவிட்டது. உலகம் எங்கும் இப்போது நடந்துவரும் செயல்கள், ஆட்சி அதிகார வெறிக்கு  சான்றுகளாக உள்ளன.

      பல நாடுகளின்   ஆட்சியாளர்கள் மக்களைபற்றியோ, நாட்டின் முன்னேற்றத்தை பற்றியோ,சிறிதும் அக்கறை இன்றி, இருந்து வருகிறார்கள்.எதைபற்றியும் கவலை இன்றி,சுகபோகங்களில் திளைத்து வருகின்றனர்.


        ஆட்சியாளர்களின் இத்தகைய செயல்களை எதிர்த்து  போராட்டம் நடத்தும் மக்களைத் தங்கள் எதிரிகளாக கருதி, கொன்று குவிக்கவும் ஆட்சியாளர்கள் தயங்குவதில்லை !  சிரியாவில்  ஆட்சிக்கு எதிராக போராடும் மக்கள் மீது ரசாயன வாயு குண்டுகள் போடப்பட்டு,1500-க்கு மேற்பட்டவர்களை ஆட்சியில் உள்ளவர்கள் கொன்றுள்ள செயல் நெஞ்சை கலங்க வைக்கிறது.

ஸ்ரீலங்காவில்  இவ்வாறு  அந்நாட்டு அரசு  ,லட்சக்கணக்கான   தமிழர்களை  கொன்றுள்ளது.  எகிப்தில் ஆட்சியை எதிர்த்த போராட்டத்தில்  பலர் இறந்தனர். ஆப்கானிஸ்தானில்  இன்றுவரை தாலிபான்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையில் போராட்டங்கள் இருந்துவருகிறது. பாகிஸ்தானில் இரண்டு பிரிவாக அதிகார போட்டியில் அப்பாவி மக்கள் குண்டுவெடிப்புகளுக்கு பலியாகி வருகின்றனர். ஈராக்கிலும் அமைதி அற்ற நிலை தொடர்கிறது. பாலஸ்தீனப் பிரச்னையில்  இஸ்ரேலின் அத்துமீறல்கள் எண்ணில் அடங்காதவை.


             இந்தியாவை பார்த்தால்  ஆட்சியதிகார போட்டிக்கு  அதவானியின் ரதயாத்திரை நடந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்டு நாட்டில் ரத்த ஆறு ஓடியது. ஒரு மாநிலத்தின் அதிகாரத்தில் இருந்தபோதே  குஜராத்தில் நரேந்திர மோடி அரசால்  நடததப்பட்ட முஸ்லிமின  படுகொலைகள் மனித வக்கிர குணத்துக்கும்,ஆட்சி வெறிக்கும்  உதாரணமாக இருக்கிறது.


         தனக்கு எதிராக,தங்களது எண்ணத்திற்கு எதிராக,  இயங்கும்  மக்களைக் கொள்ளும்  கொடுமைக்கு காரணம்  ஆட்சி அதிகாரம் என்ற  வெறியும், அதுதரும் ஆணவ போதையும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.!
மனிதர்களின் அதிகார வெறியானது, யானைகளுக்கு மதம் பிடிப்பதை விட மோசமானது என்பதை காணுகிறோம்!

    அன்பு,அகிம்சை,கருணை, நேயம், சமாதானம்,சமத்துவம்,ஜனநாயகம்,  மனித உயிர்கள், அனைத்துக்கும் எதிரானதாக இருக்கும் அதிகார வெறிக்கு மனிதகள்  பலியாவதும்,அப்பாவி மக்கள் அழிக்கப் படுவதும் தடுத்து நிறுத்த  அனைவரும் முன்வரவேண்டும்.!


Tuesday, 20 August 2013

கச்சத் தீவு மிச்சமாகுமா ?

        கச்சத் தீவை இலங்கைக்கு  கொடுத்து இந்தியா  ஒப்பந்தம் செய்ததால் தமிழக மீனவர்கள்  படும்  துயரம்  தொடர்கதையாகி விட்டது.

     "கையாலாகாதவன் பெண்டாட்டி கண்டவனுக்கு எல்லாம் வைப்பாட்டி" என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோல ஆகிவிட்டது,  மீனவர்கள் நிலை.!    இந்திய அரசின்  கையால்  ஆகாத  (மெத்)தனத்தால்  இந்திய கடலும் கூட .. தமிழக மீனவர்களின் படுகொலைக் களமாக மாறிவிட்டது.   சுமார் 600 மீனவர்கள்  இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டு உள்ளனர்.  600 தமிழ் பெண்களின் தாலி அறுபட்டு,விதவைகள் ஆயினர். அவர்களது குழந்தைகள்  அனாதைகளாகினர்.! 


          இவ்வளவு நடந்த பிறகும், இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இலங்கை அரசை கண்டிக்காமல் இருகிறது.    நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இன்றும் கூட இலங்கைச் சிறையில் உள்ளனர்.  அவர்களை விடுதலை செய்யகூட  உரிய நடவடிக்கை எடுக்காமல் இந்திய அரசு உள்ளது.  கேட்டால்,  இலங்கை நட்பு நாடு என்கிறது.! 

    இந்திய அரசின்  நட்பு  நாடான இலங்கை அரசு, இந்தியா உடன் கொண்டுள்ள  நட்புக்கு  மரியாதையால், தமிழக  மீனவர்களின் வாழ்க்கை சீரழிகிறது !   இந்திய பெருங்கடல்  மீனவர்களின் இரத்தத்தால் செந்நீராகிறது . கடலில் உள்ள உப்பு போதாது என்று  மீனவர்களின் கண்ணீரும் சேர்க்கிறது.!
 
           இந்த நிலையை மாற்ற,மீனவர்களின் துயரம் தீர  இந்தியா  முன்வராமல் இருக்கிறது.   இலங்கை நட்பு நாடு  என்பது  சரி என்றே இருக்கட்டும், தமிழர்கள்  இந்திய அரசுக்கு அன்னியர்களா?  எதிரிகளா ?   தமிழர்கள் இந்தியர்கள்  இல்லையா?  சொந்த மக்களை  கொன்று குவிக்கவும், துயரத்தில் ஆழ்த்தவும் நட்பு  நாடாகவே இருந்தாலும், இலங்கையை அனுமதிக்கலாமா?

             தனது வீட்டில்  அத்துமீறி ஒருவன் நடந்துகொண்டால்,  நண்பனாக இருந்தாலும் அதனை நாம் ஏற்றுகொள்ள மாட்டோம் !   இலங்கையின் செயலை   இந்திய அரசு  எப்படி ஏற்றுகொள்கிறது? ஏற்றுகொள்ள வேண்டிய அவசியம் என்ன? நிர்பந்தம்   என்ன ? என்பதற்கு பதிலை இன்றுவரை இந்திய அரசு  சொல்லவில்லை !


         ஒருவேளை  ராஜீவ் காந்தி  கொலையின்  இன்னொரு கோணம், இரகசியத்தை தெரிந்துகொண்டு, இந்தியாவை இலங்கை மிரட்டுகிறதா? அதனால்தான் மன்மோகன் அரசு,  இந்திய நாட்டு மக்களை கொன்றாலும், எது நடந்தாலும்    இலங்கையை கண்டுகொள்ளாமல் மவுனமாக இருந்து வருகிறதா? சந்தேகம் எழுகிறது.!

      ராஜீவ் காந்தி-ஜெயவர்த்தனே செய்த ஒப்பந்த்ததைகூட நிறைவேற்ற இலங்கை அரசு இப்போது மறுத்து வருகிறது. இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட பொழுது, இதனால் எந்த பயனும் ஏற்படபோவதில்லை,இலங்கை தமிழர்களின் தொல்லைகள் குறையாது என்றுதானே  பிரபாகரன்  ஏற்க மறுத்தார். அதனால்தானே  அமைதிப்படை என்று  இந்திய படை  இலங்கை சென்று  அதகளம் செய்தது.!


         விடுதலைப் புலித் தலைவர். பிரபாகரன் எதிர்த்த  ஒப்பந்தத்தை  இலங்கை இப்போது நிறைவேற்ற முடியாது என்கிறது !  நிறைவேற்ற வலியுறுத்தி வந்த இந்தியா  என்ன செய்ய வேண்டும்?  நிறைவேற்ற இலங்கையை  நிர்பந்தம் செய்ய வேண்டாமா ? ஆனால், அப்படியும்  செய்யாமல் இந்தியா அமைதி காத்து வருகிறது.  அமைதி காப்பது  ஏன் என்று  தெரிய வில்லை !

      போகட்டும். ராஜீவ்-ஜெயவர்த்தனே  ஒப்பந்தத்தை  மதிக்காமல், நிறைவேற்றாமல்   தொடர்ந்து   இலங்கை மறுத்து வரும் நிலையில்  இந்தியா என்ன செய்ய வேண்டும் ?

     இலங்கையானது  இந்தியாவுடன், செய்துகொண்ட  இருநாட்டுக்கு இடையிலான ஒப்பந்த்தத்தை நிறைவேற்றாமல், மதிக்காமல், ஒப்பந்தத்தை மீறி நடந்துகொள்வதை காட்டி,  இலங்கையுடன்  ஏற்படுத்திக்கொண்ட  கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். கச்சத் தீவை இந்தியாவின் கட்டுப்பாட்டில்  மீண்டும் கொண்டுவர நடவடிக்கை  எடுக்க முன்வரவேண்டும்.  அதற்கும் இந்தியா முன்வரவில்லை என்றால், இந்திய அரசு  கையாலாகாத அரசாக,  மீண்டும் கையே இல்லாத அரசாகவே இந்திய அரசு  இருக்கும் !

தமிழக மீனவர்களின் கண்ணீரும் செந்நீரும்  இனியும் சிந்தபோகிறதா ? இல்லை இந்தியா கச்சத் தீவை மீட்கப்போகிறதா?  என்பது   நவம்பருக்குள் தெரிந்து விடும்!Monday, 19 August 2013

புலிவேசம் போடும் இந்திய பொருளாதாரம்...

        புதிய பொருளாதார  கொள்கையை வேகமாக இந்தியா அமுல் படுத்த முனைந்து வருகிறது. அதன் காரணமாக  இந்தியவை ஆளும் அயிக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முழிபிதுங்கி வருகிறது.

          இந்தியா வேகமாக வளரும்,மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும், வல்லரசாகும் என்று நம்பிக்கையுடன் முன்பு பேசிய பொருளாதார புலிகளான மன்மோகனும், மன்டெக்ஸ் சிங்  அலுவாலியா-வும், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும்  இன்று எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர்.


          கடந்தவாரம்  டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு படுபயங்கரமாக வீழ்ச்சி அடைந்தது.பங்குசந்தை வர்த்தகம் 769 புள்ளிகளாக சென்செக்ஸ் குறைந்து அதிச்சி அளித்தது. தங்கத்தின் விலை ஒரே வாரத்தில் 1888 ரூபாக்கு விலை அதிகரித்தது.

        இந்திய பொருளாதரத்தை வேகமாக அசைத்துப்பார்த்த இந்த நிகழ்வுகளால், பணவீக்கம் விலைவாசி உயர்வு போன்றவை அதிகரித்து இந்தியாவின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என்பது தெரிகிறது. பொருளாத தேக்க நிலையை ஏற்படுத்தி,   இந்திய அரசின் ஏற்றுமதி இறக்குமதியை  இது பாதிப்பதுடன் இந்தியாவின் கடன்  சுமையை,அதற்கான வட்டியையும் கணிசமாக அதிகரிக்கும்
.
         இதனால் கலங்காத நமது மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் முதலீட்டாளர்களுக்கு, பங்குவர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆறுதல் சொல்லி தேற்றும் நிலைக்கு தள்ளபட்டார்.  இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்கள் பதற்றம் அடையவேண்டாம், அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பொருளாதார தகவல்களை கவனத்தில் எடுத்துக்கொள்ள கூடாது என்றும் கேட்டுகொண்டார்.

         நமது பிரதமர் மன்மோகன் இன்னும் ஒருபடி மேலேபோய், இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக  கையிருப்பில் இருக்கும் தங்கத்தை விற்கும் நிலை ஏற்படாது என்று ஆறுதல் அளிக்கும் வகையில் பேச ஆரம்பித்து விட்டார்.


          மேலே கூறியவற்றில் இருந்து, இன்று நமது நாடு  புதிய பொருளாதாரக் கொள்கையை விரைந்து அமுல்படுத்தி வருவதால்  முகுந்த நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதை தெரிந்துகொள்ளலாம். வெங்காயத்தில் இருந்து  தங்கம் வரை நமது அரசு கொண்டுள்ள ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகள் தவறான,மோசமான விளைவுகளை ஏற்படுத்திவருகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

       ஆன் லைன் வர்த்தகம் என்ற பெயரில்  நடந்துவரும் வர்த்தகமுறை,  இந்திய மக்களுக்கும்,இந்திய சிறுவியாபாரிகள், அனைவருக்கும்  தீமையாகவே உள்ளதை தெரிந்துகொள்ளலாம்.  அந்நிய நேரடி முதலீட்டால் இந்தியாவுக்கு எந்த நன்மையையும் இதுவரை ஏற்படவில்லை என்ற உண்மையும் தெரியவருகிறது.

        இவ்வளவும் தெரிந்தும் கூட நமது ஆட்சியாளர்கள் மேலும் அந்நிய முதலீட்டை அதிகரிக்கும் யோசனையில் இருப்பதை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை.

        அந்நிய முதலீடும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் செயலும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். வேலைவாய்ப்பைப் பறிக்கும். மேலும் மக்களை வறுமையில் தள்ளும் அபாய நிலையை ஏற்படுத்தும் இந்திய ஏழ்மையின் பிடியில் சிக்கித் தவிப்பதை தடுக்க முடியாது  என்பதை இப்போதாவது உணர்ந்து செயல்பட ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும். ஆட்சியாளர்கள் அவ்வாறு செய்ய முன்வருவார்கள்  என்றும் நம்ப முடியவில்லை.!

       காரணம்.வங்கிகளால் பெரும் முதலாளிகள் மட்டுமே பயன்பெறுகின்றனர்.அதுவும் பாமரமக்களின் சேமிப்பை வைத்து என்பதால், 44 ஆண்டுகளுக்கு முன்பு  இந்திரா காந்திவங்கிகளை தேசியமாக, நாட்டுடைமையாக,பொதுத்துறை வங்கிகளாக மாற்றினார்.

        இன்றைய அரசோ,பொதுத்துறை வங்கிகளின் செயல்களை கட்டுப்படுத்தி,தனியார் வங்கிகளின் நலனில் அக்கறை செலுத்திவருவதாக தெரிகிறது. இப்போது உள்ள தனியார் வங்கிகள் போதாது என்று, 26-கார்பரேட் நிறுவனங்கள் வங்கிகள் துவங்க மத்திய அரசின் அனுமதிக் காத்திருகின்றன. அவைகளையும் அனுமதித்தால் என்ன நடக்கும் என்பதை எண்ணிப்பார்க்க இயலவில்லை.!

       வங்கி ஊழியர் சம்மேளனம், தமிழக பொது செயலாளர் கிருஷ்ணன் என்பவர்  நமது அரசு,கடந்த எட்டு ஆண்டுகளில் நிறுவனங்களுக்கும் பெரும் முதலாளிகளுக்கும்  31 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரிவிலக்கு அளித்து உள்ளதாக தெரிவிக்கிறார்.


           ஏழைகளுக்கு  சமையல் வாயு,பெட்ரோல்,டீசல் உயர்வு. விலைவாசி உயர்வு. வேன்னகாயம் கூட விண்ணைமுட்டும் விலைக்கு உயர்ந்துள்ள நிலையில்,பெருமுதலாளிகளுக்கு 31 ஆயிரம் கொடிகள் வரிவிலக்கு அளிக்கும் அரசை என்னவென்று சொல்வது?

            இதுவில்லாமல் ஆட்சியாளர்களின் ஊழலால், 10 இலட்சம்  கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டு உள்ளதாம்..  புலிவேசம் போடும் இந்திய பொருளாதாரம் எப்போது உண்மைப் புலியாகும் என்றே தெரியவில்லை.!

           இந்தியா வல்லரசு ஆகாவிட்டாலும் போகட்டும். நல்லரசு ஆகவாவது இருக்கக் கூடாதா?
       நல்ல அரசாக இல்லாமல் போனாலும் போகட்டும், மக்களுக்கு தொல்லை  தரும் அரசாக இல்லாமல் இருக்கலாம் அல்லவா.?


Wednesday, 14 August 2013

சு'தந்திரம் என்னும் சோககீதம்..!

         ஆங்கிலேயரால் அடிமைப்பட்டு கிடந்தபோது, இந்தியர்களுக்கு  சுதந்திர உணர்வு ஏற்படுவதை தடுக்கவும்,தீவிரத்தைக் குறைக்கவும்  ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் தொடங்கப்பட்ட அமைப்பு காங்கிரஸ் கட்சியாக  பிறகு மலர்ந்தது. காந்தியின் வருகைக்கு பிறகு  சுதந்திர தாகமும் போராட்ட வடிவமும் மாறியது. உலகில் எங்குமே காணாத அதிசயமாக.. அமைதியான முறையில்  சுதந்திரம்  கோரி காந்திய வழியில் போராடும்போது நேதாஜி சுபாஸ்,பகத்சிங்,பசும்பொன் முத்துராமலிங்கம்  போன்றவர்கள்  தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டனர்.


                காந்தியை ஆதரித்து,நேதாஜியை எதிர்த்து  ஆங்கிலேய அரசு  நடந்துகொண்டது.  பல்லாயிரம் மக்கள்  சிறையில் சித்திரவதை பட்டு, தூக்கிலிடப்பட்டு, வாழ்வை இழந்து நடத்திய  போராட்டம் வலுவிழந்தது. கண்ணீரும் செந்நீரும்  சிந்திப் பெற்ற சுதந்திரம்,  "கத்தி  இன்றி,இரத்தம் இன்றி சத்தியவழியில்" பெற்றதாக இன்று  வரலாற்றை  படிக்கும் நிலைக்கு நாம் மாற்றபட்டு விட்டோம்.

     நாம் மட்டுமா மாறி இருக்கிறோம்.? சுதந்திரத்திற்கு பிறகு  நம்மை வழிநடத்திய தலைவர்கள்  அனைவரும்  இன்றைய நிலைக்கு  கொஞ்சம் கொஞ்சமாக நம்மை மாற்றி விட்டார்கள்.

          பொதுநலம், நாட்டு பக்தி, ஜனநாயகம்  அனைத்தையும் நமது தலைவர்கள் மாற்றி, நம்மை ஏமாற்றிவிட்டார்கள். சுதந்திரத்திற்கு முன்பு  நாட்டில் இருந்த வறுமை அப்படியே நீடித்து வருகிறது.வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, வன்முறை கலாச்சாரம், மதவெறி, இன மோதல்  என்று அனைத்தையும் ' ஜனநாயகம் என்ற போர்வையில்'  வளர்த்து விட்டு, இன்று அந்நிய நாடுகளால் அச்சுறுத்தல், தீவிரவாதிகளால் உள்நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்து என்று சொல்லி,  குண்டுதுளைக்காத  மேடைச்சிறையில்  இருந்துகொண்டு, இந்திய சுதந்திரத்தைப் பற்றி பிரதமரும், ஜனாதிபதியும் பேசவேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.!


           உண்மையில் நமக்கு 1947-லில் கிடைத்தது சுதந்திரம்தானா? அல்லது ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிக்கு ஆளான  சு'தந்திரமா? என்று சந்தேகம் ஏற்படுகிறது. நாம் இன்னும் சுதந்திரம் என்ற சுக கனவில் இருப்பதால்தான்  கட்டியிருக்கும் கோமணத்தையும் பறிக்க  ஆட்சியாளர்கள் நினைகிறார்களா? என்றும் சந்தேகம் எழுகிறது.!

        சுதந்திரம் என்ற உன்னதத்தை நமது தலைவர்கள்  புரிந்துகொள்ளாத காரணத்தால்,  இன்று ஊழலும், முறைகேடும், சர்வாதிகார போக்கும், தீவிரவாத செயல்களும்   இந்தியாவில் சகஜமாகி  விட்டது !

        இந்தியாவின் எதிர்காலம் இப்படிதான் இருக்கபோகிறதா? இல்லை மாறுமா?   காந்தியைக் கொன்றவர்கள் தேசபக்தர்கள் ஆகிவிட்ட நிலையில் மாற்றத்தை நாம் எதிபார்க்கலாமா? எதிர்பார்ப்பது வீண்தானா? என்று  கேட்க தோன்றுகிறது.

சு'தந்திரம் என்பது  சுக ராகமா ? இல்லை சோககீதம் தானா? தெரிந்தால் சொல்லுங்கள்


Monday, 12 August 2013

கலைஞர் கருணாநிதிக்கு என்ன ஆச்சு..?

       "சொன்னதைச் செய்வோம்  செய்வதைச் சொல்வோம்" என்று அலங்காரமாக கூறிவந்த கலைஞரும் , அவரது கட்சியும்  சமீப காலமாக  தடுமாறி வருவதாக தெரிகிறது.

          ஈழ போராட்டம்  என்பதை  தனக்கு சாதகமான அரசியலாக இப்போது பார்க்கும் கலைஞரின், கடந்த கால  ஈழ அணுகு முறைகளும், செயல்களும்   அவருக்கு எதிராக இருப்பது  தெரிகிறது.  ஆட்சியில் இருந்தபோது,   கலைஞர் நடந்துகொண்டதும்,  அவர் பேசியவைகளும்   அவருக்கு எதிராகவும், விமர்சனமாகவும் இப்போது முன்வைக்கப்பட்டு,  சூடாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

                                                                                                                                                                              மறுபுறம் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு,பிறகு, வாபஸ் என்று தடுமாறிய கலைஞர்,  தனது மகள் கனிமொழிக்காக.. கேவலம் ஒரு ராஜ்ஜிய சபை உறுப்பினர் சீட்டுக்காக  மீண்டும் சரண் அடைந்தது  போல  நடந்து கொண்டது, கலைஞர் மீது தமிழர்கள் வைத்திருந்த நம்பிக்கையை வெகுவாக  குறைத்து விட்டிருக்கிறது.   மேலும் அவரது குடும்பதினரின்  பதவி வெறி, சுயநலம்  ஆகியவைற்றை  சாமானிய  மக்களும்  இப்போது  தெரிந்து கொண்டுள்ளனர்.

        தனது இமேஜையும், இழந்த தி.மு.கவின்  செல்வாக்கையும் மீட்டெடுக்க பல்வேறு பகீரத பிரயத்தனங்களை எடுத்துவந்த போதிலும், அவைகளும்    பயனளிக்கவில்லை.  பூமராங்காக  திருப்பி, கலைஞரின் இமேஜை மேலும் டேமேஜாக்கி  வருவதாக தோன்றுகிறது.

       இவைகளை உணர்ந்து கொள்ளாமல்,மேலும் மேலும் தனது செல்வாக்கைச்  சிதைத்து கொள்ளும் விதமாகவே அவரது  அன்றாட அறிக்கைகளும், ஆ.தி.மு.க-வை இடித்துரைப்பும்   இருந்து வருகின்றன.


           உணவு பாதுகாப்பு மசோதாவை தனது கட்சி ஆதரிக்குமா? எதிர்க்குமா? அந்த மசோதாவால் தமிழகத்துக்கு நிரந்தர பாதிப்பு உள்ளதா? இல்லையா?  என்பதை  தெளிவாக அறிவிக்காமல்,  வெண்ணையாக..விளக்கெண்ணையாக  மசோதா இப்படியே இருந்தால் ஆதரிக்காது.  திருத்தங்கள் செய்தால் ஆதரிக்கும் என்று கூறி  பிரச்னையை  பூசிமெழுகுவது கலைஞரின் ரெட்டை வேசத்தையும்  கொள்கைத் தடுமாற்றத்தையும் காட்டுகிறது. 

          நாடாளுமன்ற தேர்தலில்  மீண்டும் கையை ஆதரிக்கவேண்டிய நிலை கலைஞருக்கு ஏற்பட்டு இருப்பதால் இவ்வாறு நடந்து கொள்வது தெரிகிறது.

         பாராளுமன்றத்தில் ஒரு நிலை, தமிழக மக்களிடம் ஒருநிலை என்ற கபட நாடகத்தை  ராஜதந்திரம் என்று கூறி  இனியும்  தமிழர்களை ஏமாற்ற முடியாது என்பதை கலைஞரும்,தி.மு.க-வும் புரிந்துகொள்ள வேண்டும்.

          இதனை உணர்ந்து  கொள்கைகளை கலைஞர் வகுக்கவேண்டும். அவ்வாறு செய்யாதவரை ,  தமிழர்களுக்கு மட்டுமல்ல,
தி.மு.கவுக்கும் கூட கலைஞரால் எந்தவித பலனும் எதிர்காலத்தில்  ஏற்படாது என்பதே உண்மையாகும்.

Tuesday, 6 August 2013

இந்தியாவுக்கு உதவும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்

          இந்தியாவுக்கு குறிப்பாக ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் கள்ள தொடர்பு  இருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

          இந்தியாவில் சர்ச்சையைக் கிளப்பும் மிக முக்கிய விசயங்கள் குறித்து பொதுமக்கள் பரபரப்பாக விவாதிக்கும் நிலையிலும், பாரளுமன்றத்தில் காங்கிரஸ் அரசு விழிபிதுங்கி தவிக்கும்போதும், உச்சநீதிமன்றம் கடுமையாக மத்திய அரசை விமரசித்து கருத்துக்கள் வெளியிடும்போதும்  இந்த பிரசனைகளை திசைதிருப்பும் விதத்தில்  பாகிஸ்தான்  தீவிரவாதிகள் நடந்துகொள்கிறார்கள! 

         அதாவது ஆளும் இந்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படும் நெருக்கடியை உணர்ந்து, அறிந்து  அந்த நெருக்கடியில் இருந்து  இந்திய அரசையும்,  காங்கிரசையும் காப்பாற்றவேண்டி    இந்தியாவிலோ, அல்லது இந்திய எல்லையிலோ  துப்பாக்கி சூடு  நடத்துவது, ஊடுருவல் செய்வது    அல்லது வெடிகுண்டுகளை வெடிக்க செய்வது போன்ற நிகழ்சிகள்  நடத்தபடுகின்றன.

        இவ்வாறு  செய்வதன் மூலம் இந்தியா ஆளும் அரசுக்கு ஏற்படும் நெருக்கடி மறக்க வைக்கப்பட்டுகிறது.,   அனைவரும்  பாகிஸ்தானின் தீவிரவாதம், எல்லை பயங்கவாதம், எதிரிகளின் அத்துமீறல், அராஜகம் என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இந்திய அரசும்   எச்சரிகை விடுகிறது , எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து,,போராட்டம் நடத்துகின்றன. ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிடுகின்றன. ,மக்கள் ஆர்வமாக இதுபோன்றவற்றில்  கவனத்தைச் செலுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.

        இவ்வளவும்  பாகிஸ்தான் தீவிரவாதிகளால், நடைபெறுவதால்  மத்திய அரசுக்கு ஏற்படும்  நெருக்கடிகள்,தலைவலிக்கு  தீர்வு ஏற்படுகிறது. இதுபோல  பலமுறை  பாகிஸ்தான் தீவிரவாதிகள்  தீர்த்துவைத்து இருகிறார்கள்  என்பதை பாராளுமன்றம் கூடும் நாட்களில் ஏற்பட்ட நிகழ்சிகள்,அசம்பாவிதங்களை பார்த்தல் நாமும் புரிந்துகொள்ள முடியும்.  முன்பு ஒருமுறை பாராளுமன்றம் கூடிய பொது டெல்லி உயர்நீதிமன்றத்தில்  குண்டு வெடிப்பு நடந்தது.  இப்போது காஸ்மீர் எல்லையில்  5 ராணுவ வீரர்கள்  சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

       அதானால்தான்   பாகிஸ்தான் தீவிரவாதிகள்  இந்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படும்போது  எல்லாம்  அந்த நெருக்கடியை தீர்த்துவைக்க உதவுகிறார்கள். என்று சொல்ல வேண்டி இருக்கிறது.

     இல்லையில்லை. நெருக்கடி ஏற்படும்போது அதிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், பிரசனைகளை திசைதிருப்பவும்  ஆளும் அரசே தனது  உளவுத்துறை,ராணுவம் மூலம் செய்கிறது என்று  எனக்கு சந்தேகம் இல்லை.  சிலருக்கு  ஏற்பட்டால்  நான்  பொறுப்பில்லை!

Monday, 5 August 2013

இந்தியாவில் வறுமை திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது!

         இந்தியா சுதந்திரமடைந்து 67 ஆண்டுகளாகிறது. இந்திய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற, எத்தனையோ ஆயிந்தாண்டு திட்டங்கள் தீட்டியாகிவிட்டது.  இந்திய குடிமக்களின் உணவு,உடை,இருப்பிடதேவைகள்,பொது சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர், கல்வி,வேலைவாய்ப்பு  ஆகியவற்றை தருவதாக  வாய்கிழிய பேசி மக்களுக்கு உத்திரவாதம் தந்தனர் ஆளும் வர்கத்தினர்.


           இந்தியாவை முன்னேற்ற,அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய  பல்லாயிரம் கோடிகள் உலகவங்கி,பன்னாட்டு நிதியம்  என்று வாங்கியும் செலவழித்தும்  இந்தியாவில் வறுமை  ஒழியவில்லை. அடிப்படை வசதிகளை இன்று வரை அனைவருக்கும் தர இயலவில்லை.  குறைந்த பட்சம்  அனைவருக்கும் மூன்றுவேளை உணவுக்கு கூட உத்திரவாதம் இல்லாத நிலையைத்தான்  ஆளுவோர்கள்,அதிகார வர்கத்தினர் ஏற்படுத்தி இருகிறார்கள்.

         விவசாயத்தையே ஜீவநாடியாக,முதன்மைத் தொழிலாக கொண்ட நமது நாட்டில், கங்கை,யமுனை,சிந்து,பிரம்மபுத்திரா, கோதாவரி,நர்மதை ,கிருஷ்ணா,காவிரி,தென்பெண்ணை,பாலாறு, வைகை,தாமிரபரணி  என்று பல ஆறுகள் ஓடும் நமது நாட்டில்  உணவுக்கு வழியில்லை. மூன்றில் ஒருபகுதியினர்  இரவு உணவுக்கு வழியின்றி பட்டினியால்  தவிக்கின்றனர். கிரந்குகின்றனர்.


        இந்த லட்சணத்தில்  நமது ஆட்சியாளர்கள் இந்தியாவில் வறுமைகோட்டுக்கு கீழுள்ளவர்களின் எண்ணிக்கை குறைத்துவிட்டதாக மாய்மாலம் காட்டுகின்றனர். மறுபுறம்  உணவுபாதுகாப்பு உத்திரவாத சட்டம் கொண்டுவந்து இப்போது கிடைக்கும் ரேசன் அரசியும் கிடைக்காமல் செய்ய திட்டம் இடுகின்றனர்.

        இவைகளை எல்லாம் பார்க்கும்போது  வறுமை, வேலையில்லா  திண்டாட்டம், ஆகியவைகள் தொடர்ந்து நீடித்தால் தான் மக்கள் தங்களது ஊழல்,முறைகேடுகளைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற நோக்கத்தில் ஆட்சியாளர்களால்,அதிகார வர்க்கத்தினரால்  இந்தியாவில் வறுமை திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது!


        பசியோடு இருக்கும் மனிதனுக்கு   உணவைப்  பற்றிய சிந்தனைதான் இருக்கும்,  அவனுக்கு வேறு சிந்தனைகள் ஏற்படாது  என்பதை உணர்ந்து ஆட்சியாளர்கள்  உணவை கையாள்கிறார்கள்!

" பசியால் போய் விளையும்
படுகொலைகள் மெத்த வரும்,
அசையாத மாளிகையும்
அசைந்து  பொடி  படுமாம்,
உங்களையும் மீறி உலகத்தில்
ஒரு புரட்சி திங்களைபோல்
எழுந்ததை தெரிவிக்கும் வரலாறு "

-   என்பதை ஆட்சியாளர்கள்,அதிகார வர்க்கதினர்கள் புரிந்துகொள்ளவேண்டும்!Saturday, 3 August 2013

மாயாவாதமும் சாமியார் மடங்களும்.!

            அனைத்து சாதியினரையும் அர்சசகராக்குவோம்.. கருவறை தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்  என்ற கோஷங்களும் போராட்டங்களும் தமிழகத்தில் மீண்டும் புதுவீச்சில் எதிரோளிகின்றன. 
         தந்தை பெரியார் தொடங்கிய போராட்டம் இன்றுவரை நிறைவேறாமல் தொடர்கிறது. தமிழகத்தை பல ஆண்டுகள் திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்தபோதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியவில்லை. கோவில் கருவறையில் பார்ப்பனர்களைத் தவிர வேற்றாள்கள் நுழைந்தால் சாமிக்கு தீட்டு பட்டுவிடும் என்று பார்ப்பனர்கள் கூறிவருகிறார்கள்! வழக்குமேல் வழக்கு போட்டு இப்போது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. 
            கோயிலை கட்ட செங்கல், சிமண்ட்டு , கருங்கல் சுமப்பது, கோயில் சிற்பம்,கடவுள் சிலை செய்வது,   சாரம் கட்டுவது,  கோபுரவேலைகள் செய்வது  அனைத்தும்   பல சாதி மக்கள்.  இந்துக்கள் என்கிறபோது,  கோவிலில் அர்ச்சனை செய்வதற்கு மட்டும் அவர்களுக்கு உரிமையில்லை என்பது  என்ன நியாயம்? அவ்வாறு கூறுவது மிகபெரிய சமூக அநீதியாகும்.  
           பார்ப்பனர்கள்  மட்டுமே கோவிலில் அர்ச்சனை செய்ய வேண்டும், அவர்கள் செய்தால் தீட்டில்லை, பிறசாதி  இந்துக்கள் செய்தால் தீட்டு என்பது  சட்டவிரோதமாகும். இயற்கை நியதிக்கு எதிரானதாகும்.  ஆண்டவன் முன்  சமம்  என்ற தத்துவத்திற்கு எதிரானதாகும்.
        பார்ப்பனர்கள் அல்லாத இந்த உண்மைகள் தெரிந்த இந்து மக்கள் கருவறையில் நிலையாவும்,தாங்களும் அர்ச்சனை செய்யவும் முனைப்புடன் உரிமைகோர வேண்டும். உரிமைகோரி போராட வேண்டும். ஆனால்  அவ்வாறு செய்யாமல்  சும்மா இருப்பது ஏன் என்று தெரியவில்லை.!
        போகட்டும்,  இந்துமத ஒற்றுமையை வலியுறுத்தும்  இந்து அமைப்புகள் இதைப்பற்றி இன்றுவரை எதுவும் சொல்லாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்றும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.  இந்துமத அமைப்புகளைப் போலவே, சங்கர மடம் போன்ற   பல்வேறு  சாமியார் மடங்களும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பது குறித்து தங்களது கருத்தை கூறாமல் ஊமைகளாக இருக்கின்றன. 
          அவ்வாறு ஏன் இருக்கின்றன என்று  அறிவுஜீவிகளும் ,ஊடகத் துறை உன்னதங்களும்  சிந்திப்பதில்லை. பொது கருத்தை,விவாதத்தை  ஏற்படுத்தாமல் இருந்து வருகின்றன.
            எல்லாவற்றுக்கும் காரணம்  இந்துமதம், ஆன்மிகம், கோவில்,வழிபாடுகள் அனைத்தும் பார்ப்பனர்களின்  நலத்துக்கும்  இனமேன்மைக்கும்  உள்ளவைகள் என்பதும், அவைகளில் வேறு சாதியினர்  உரிமைகோரவும் , நன்மை அடையவும்   முயலக் கூடாது  என்ற நோக்கம்தான். 
          பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருந்துவருவது ஆதிக்கமும் ,அதிகாரமும் பார்ப்பனர்களைச் சுற்றியே இன்றுவரை இருந்து வருவதையே   காட்டுகிறது. 
           பார்ப்பனர்களின் அதிகார மையங்களாகவே  சங்கரமடம் உள்ளிட்ட சாமியார் மடங்களும்,  இந்துத்துவ அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.  இந்துத்துவ அமைப்புகளின்  தலைவர்களும்,  மடச்  சாமியார்களும்  பலகோடி சொத்துக்களை வைத்துகொண்டு சுகபோகமாக வாழ்ந்துகொண்டு ,ஆடம்பர கேளிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டு, பாமரமக்களை  ஏமற்றி வருகிறார்கள்.  இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரம்  இல்லை, எல்லாம் மாயை என்று பொய்யாக   கூறி வருகிறார்கள்.
         இந்துமத சாமியார்களும்  இந்துத்துவ அமைப்பினரும்   பாமர மக்களை பற்றியோ, ஒருவேளை உணவுக்கும் வழி இன்றியும், வேலை இன்றியும் தவிக்கும் நிலை பற்றியோ கவலை படுவதில்லை. ! ஆண்டவனுக்கு செய்வதாக சொல்லி அனுதினமும் நெய்வேத்தியம், பாலபிசேகம் செய்து  அவற்றை உண்டு கொழுத்து இருக்கும் இவர்கள் பாமரமக்களுக்கு  அருளாசி கூறுவதற்கு மட்டும் தவறுவதில்லை. ! 
         இந்துமதம்  மேன்மையானது, உயர்வானது  என்று வெறியுடன் அலையும் (பார்ப்பனர் அல்லாத )  இந்துக்கள் சிந்திக்க வேண்டும்.  ஆலயத்தில் இருந்து பார்ப்பனர்களை வெளியேற்ற  போராட  வேண்டும். 
 

Friday, 2 August 2013

ஆதார் கணக்கெடுப்பு-தனிமனித பாதுகாப்புக்கு ஆபத்து.

           மத்திய  அரசு  நடைமுறை படுத்தும் ஆதார் கணக்கெடுப்பு தனிமனித சுதந்திரத்திற்கும் பாதுகாப்புக்கும்   ஆபத்தை விளைவிக்கும் செயலாகும்.

       ஆதார் அடையாள அட்டைக்கான கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இக் கணக்கு எடுப்பு குறித்து  மத்திய அரசு,"  உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும்  அரசின் நலத்திட்டங்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள" உதவும் என்று கூறுகிறது.


        காவல்நிலையத்தில்  கொடும் குற்றங்களைச் செய்தவர்களின்  கைரேகை, கண்ணின் கருவிழி, வலதுகை ரேகை ஆகியவைகளை பதிவு செய்து, பாதுகாத்து வருவதைப் போல..  அதையும் விட கொடுமையாக  ஆதார் அடையாள கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது.

        இடது கை விரல்கள், வலதுகை விரல்கள், இடது-வலது கட்டைவிரல் ரேகைகள், இரண்டு கண்களின் கருவிழிகள் பதிவு செய்யபடுகின்றன. புகைப்படம் எடுக்கப்பட்டு, வயது, வங்கிக் கணக்கு, இமெயில் முகவரி, இருப்பிட முகவரி, தொலைபேசி,  செல்பேசி   உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யபடுகின்றன.  பதிவுக்கு  குடும்ப அட்டை, பாஸ்போர்ட், பான்கார்ட், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகிய ஆவணங்களும்  கேட்க படுகின்றன.

       ஆதார்  அடையாள பதிவுகள் மூலம்  இந்திய அரசு  நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும்  இந்திய அரசு உளவு பார்க்க முடியும்,  உரையாடல்களை ஒட்டுகேட்டும்,  நமது மெயிலுக்கு வரும் செய்திகள், படங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.
        அரசுக்கு தெரியாமல் தனிமனிதர்கள் எவரும் சுயமாக இயங்குவது இயலாது .  இது  தனிமனித உரிமைக்கும், சுதந்திரத்துக்கும், பாதுகாப்புக்கும் மிகபெரிய அச்சுறுத்தல் ஆகும்.   ஜனநாயகத்திற்கு விரோதமான, அரசின் பயங்கரவாத  நடவடிக்கை இது எனலாம். .

        மேலும் ஆளும் அரசுக்கு எதிராக நடந்து கொள்ளும் எவரையும் பழிவாங்கவும்  ஜனநாயக முறையில் அணிதிரள்வதை தடுக்கவும், எதிர்காலத்தில் உரிமைகள் கோரி போராடும் மக்களை ஒடுக்கவும், பொதுமக்களை  அச்சுறுத்தவும்  பயன்படுத்த வேண்டியே ஆதார் அடையாள கணக்கெடுப்பை நடத்தி வருகிறது.

        இந்தியாவில் வேலை இல்லை என்பதால், உலகின் பல நாடுகளிலும் இந்தியர்கள் வேலை செய்கிறார்கள்.  மெயில்,தொலைபேசிஉரையாடல்களை நடத்துகிறார்கள்.  அவ்வாறு உள்ளவர்களை அரசுக்கு பிடிக்கவில்லை என்றால், பழிவாங்கவும், , குற்றச்செயலில் ஈடுபட்டதாக  கூறவும்  அவர்களை  கைதுசெய்யவும்   ஆதார் ஆதாரங்களை   அரசு    எளிதாக பயன்படுத்த முடியும்.


         போலிசு, இராணுவம், துணை இராணுவம்,  மத்திய தொழிற்பாதுகாப்பு படை,  எல்லை பாதுகாப்புப் படை, ஐபி,  சிபிஅய் , ரா,  பயங்கரவாத தடுப்புப்படை  என்று பல்வேறு பிரிவுகளை வைத்துக்கொண்டு உள்நாட்டு பாதுகாப்பை தரமுடியவில்லை என்று அரசு கூறுவது வேடிக்கையாக உள்ளது. தன்னையே இந்திய அரசு  கேலிக்கு   உள்ளாக்கிக்  கொள்வதாக இருக்கிறது.!
  
      ஆனால், அதனைப்பற்றி கவலைபடாமல் அரசு கணக்கெடுப்பு எடுப்பதை பார்த்தால் ,   எதிர்வரும் நாட்களில்  இந்தியாவில் செயல்பட இருக்கும்  பன்னாட்டு,பெருமுதலைகளுக்கு  எந்த ஒரு அச்சுறுத்தலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில்    இப்போதே ஆதார் அடையாளத்தை அரசு எடுத்து வருகிறது  என்னும்  சந்தேகம் ஏற்படுகிறது.

         அடுத்து வரும் ஆட்சியாளர்கள்,  ஆதார் அடையாளங்களை எப்படி எடுத்துக்கொள்வார்கள்?  எப்படி பயன்படுத்துவார்கள் என்பது தெரியவில்லை.!        பி.ஜே.பி. போன்ற கட்சிகள் ஆட்சிக்கு வந்தால்,சிறுபான்மையினர்,தலித்துகள் என்ன ஆவார்கள்/ அவர்களுக்கு எதிராக ஆதார் அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டால்  என்ன நடக்கும்  என்பதை நினைக்கும் போதே  மனம் நடுங்குகிறது.!