Friday, 27 December 2013

புது துடைப்பம் நன்றாக பெருக்குமா?

    இந்திய ஜனநாயகத்தின் புதிய வரவு ஆம் ஆத்மி கட்சி  தலைநகர் டெல்லியில் நாளை ஆட்சி அமைக்க இருக்கிறது.

    அக்கட்சி துடைப்பம் சின்னத்தில் நின்று ஆளும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றி இருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் ஊழலை எதிர்ப்பைத் தனது கொள்கையாக அறிவித்து ஆளும் கட்சியான காங்கிரசை எதிர்த்த ஆம் ஆத்மி கட்சி இன்று ஊழலால் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது வேடிக்கை விநோதமாகும்!


        ஆட்சி அமைக்க முன்வந்தவுடன் ஊழல் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை  எடுக்கப்படும், குடிநீர் மின்சார பிரச்னைகள் தீர்க்கப்படும், நேர்மையான,ஊழல் அற்ற நிர்வாகம் நடக்கும் என்று உறுதி அளித்து உள்ளது.!

      ஆங்கிலத்தில்,"  புது துடைப்பம் நன்றாக பெருக்கும்" என்று பழமொழி உண்டு.!  அதனை உண்மை என நம்பும்படி "ஆம் ஆத்மி" கட்சியின் ஆரம்ப செயல்கள் உள்ளன.

       ஆட்சி அதிகாரம்,பதவியால் கிடைக்கும் புகழ்,பணம் ஆகியவைகள் குறித்து அக்கட்சிக்கு  தெரியவில்லை.!  மேலும் ஊழலில் ஊறித் திளைத்து இருக்கும்  இந்திய அரசியல்வாதிகள் தங்களை சுதந்திரமாக ஆட்சி நடத்தவும்,மக்கள் பணியை செய்யவும் அனுமதிப்பார்களா? என்பது பற்றிய சிந்தனை அக்கட்சிக்கு இருப்பதாக தெரியவில்லை. அதனால் இன்றி,கம்பீரமாக  மக்களுக்கு நம்பிக்கையுடன் வாக்குறுதி அளித்து வருகிறது.!


 உண்மையில் நேர்மையுடன் ஆட்சியை நடத்தினால் ஆம் ஆத்மி கட்சியை மக்கள் வரவேற்கவே செய்வார்கள். ஆனால் நேர்மையை இந்திய ஜனநாயகத்தில் அதிகம் காணமுடியவில்லை.எதிர்பார்க்கவும் வழியில்லை  என்பதால்டெல்லியில்  நித்திய கண்டமாகவே ஆட்சி இருக்கும் என்பது நிதர்சனமாக தெரிகிறது.!

புது துடைப்பம் இப்போது நன்றாகஇருக்கிறது. அது ஊழலை பெருக்குகிறதா? குறைக்கிறதா? என்பதை அக்கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து விரைவில் தெரிந்து கொள்ளமுடியும்.!

 டெல்லியின் புது மனைவியாக  குடித்தனம் நடத்தத் தொடங்கும் ஆம் ஆத்மிக்கு நமது  நல்வாழ்த்துக்கள். !
Thursday, 5 December 2013

ஊழலும், ஊழல் சார்ந்த... இந்தியாவும்.!

          உலக அளவில் சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வதேச ஆய்வு ஒன்று ஊழல் மிகுந்த நாடுகள் வரிசையில் இந்தியா 94-வது இடத்தில இருப்பதாக அறிவித்து இருக்கிறது. பாகிஸ்தான் 127-வது இடத்தில இருக்கிறதாம்.

         இந்தியாவில் சென்ற ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் இடையில் ஊழலிலும் எந்தவித வேறுபாடும் மாற்றமும் ஏற்படவில்லையாம்.அதே நிலையில்,அதே  இடத்தில நீடித்து வருகிறதாம்.


        ஏதோ,ஊழலில் தவிர மற்ற துறைகளில் மாற்றம் ஏற்பட்டு விட்டது போல இதனைச் சொல்கிறார்கள். !  மக்களை மடையர்களாக நினைத்து செயல்படும் ஆட்சியாளர்கள் தேர்தல் காலங்களில் மட்டும் உத்தமர்கள் போல  ஆகி விடுகிறார்கள்.

        நடைபெற்றுவரும் 5 மாநில தேர்தலில்,காங்கிரஸ் ஆட்சி செய்த டெல்லி, இராஜஸ்தான் மாநிலங்களில் பி.ஜே.பி. கட்சி அதிக இடங்களைப் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.

       இதுவரை நடந்த ஊழல்கள் எல்லாம் களையப்பட்டு,குற்றவாளிகள் தண்டிக்கபடுவார்கள் என்பது போலவும் பி.ஜே.பி.கட்சி பிரசாரம் இருந்தது. 

        தேர்தல் கணிப்புகளின்படி  பி.ஜே.பி.கட்சி ஆட்சிக்குவந்தாலும் காங்கிரஸ் கட்சியை குற்றம் சொல்லியே, தங்களது காரியத்தை பார்க்கப் போகிறார்கள். ஊழலை தொடருவார்கள்.என்பதுதான் இந்தியாவின் நிலை.ஏனென்றால் ஊழலும் ஊழல்  சார்ந்த இடமும் ஆக  இந்தியாவும் இருக்கிறது.!       போகட்டும், ஊழல் என்பது இந்தியாவின் அடையாளம் மட்டுமே  என்ற நிலை மாறி, இப்போது சர்வதேச அடையாளமாக மாறி வருவதை   ஊழல் பற்றிய சர்வே முடிவுகள் தெரிவிகின்றன.

        ஊழலை ஏற்றுக்கொண்டும்,சகித்துக் கொண்டும், ஊழல் செய்தும் வாழவும்  மக்கள் எல்லாநாடுகளிலும் பழகி வருகிறார்கள் என்பது அதிர்ச்சிதருகிறது.

        எல்லா நாட்டு மனிதர்களிடமும் பொதுநலம் போய்விட்டது. எங்கும்,எதிலும்,சுயநலமும் அதன் காரணமாக ஊழலும் முறைகேடுகளும் செய்யவும் தொடங்கிவிட்டார்கள்.மனிதர்கள்  மாறிவிட்டார்கள். அதனால் ஊழல் அதிகரித்து வருகிறது. உலகம் அன்பு,நட்பு,பாசம்,மனித நேயம் அற்ற காடாக,பாலைவனமாக ஆகிவருகிறது.

      சுருங்க சொன்னால், உலகம் அழிவுக்கு ஆளாகி வருவதன் அடையாளமாக இதனை நாம் பார்க்கவேண்டி உள்ளது.