Wednesday, 26 February 2014

மோடி ஆட்சிக்கு வந்தால்...

       சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற ஒருமுறை எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என பி.ஜே.பி-யின் தலைவர் ராஜ்நாத் சிங் கேட்கிறார். அவர் கேட்பதுபோல வரும் நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம்கள்,இதர சிறுபான்மையினர் வாக்களித்து மோடி பிரதமர் ஆனால் என்ன நடக்கும்?

          இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கை கேள்விக்குறியாக ஆகிவிடும்! இந்துத்துவவாதிகளால் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் திருத்தப்படும் அபாயம் ஏற்படும்.!

      இந்திய அரசியல் சட்டத்திற்கு மட்டுமா, ஆபத்து?  சிறுபான்மை சமூகங்கள் இந்தியாவில் வாழ்வதற்கே  இயலாத நிலை ஏற்படும்.!  சிறுபான்மை சமூகங்களின்  வாழ்வாதாரங்கள் சட்டப்படியே பறிக்கும் செயலில்  பாசிச இந்துக்கள் முயல்வார்கள்.!

          மோடி ஆட்சிக்கு வந்தால்..அரசின் அனைத்து துறைகளும் காவி மயமாக்கப்படும். தங்கள் விருப்பம்போல வரலாற்றை திருத்துவார்கள்! கோட்சேவை தியாகியாகவும் காந்தியை துரோகியாகவும் கட்டுவார்கள்!

        இந்து மத ஆராய்ச்சி என்ற பெயரில் மக்களின் வரிப்பணம்   ஆர்.எஸ்.எஸ். கைகாட்டும் அமைப்புகளுக்கும் ஆட்களுக்கும் கோடிகணக்கில் ஒதுக்கப்படும்.! அதைப்பற்றி  எவனும் கேள்வி கேட்க முடியாது.! அப்படியே கேட்டுவிட்டு இந்திய திருநாட்டில் உயிருடன் உலவ முடியாது.!

     கல்வி என்ற பெயரில் பொய்களும்,புராணங்களும் உண்மை  என்று நம்ப வைக்க, நச்சு கருதுக்களை விதைப்பார்கள்!.சிறுபான்மையினரைப் பற்றி இழித்தும் பழித்தும் பொய்யுரைகளை  பரப்புவார்கள்! கல்வி என்ற பெயரில் மாணவர்கள், இளைஞர்களிடம் அதனை திணிக்கும் செயல்களைச்  செய்வார்கள்.!

        " இந்துவை ராணுவமாக்கு, இராணுவத்தை இந்துமயமாக்கு!"  என்று ஏற்கனவே  கொக்கரிக்கும் இவர்கள்,  உண்மையிலேயே இராணுவத்தை காவிமயமாக்கி விடுவார்கள்.!   சிறுபான்மையின மக்கள், உழைக்கும் மக்கள் மீது  இந்துவாக்கப்பட்ட  இராணுவத்தை ஏவுவார்கள்.! மோடி ஆட்சிக்கு வந்தால்.. உரிமைகள் கேட்டு  எந்த அமைப்புகளும்  போராட முடியாது.! நியாயம் கேட்க்க முடியாது. !மனித உரிமைகள் மறுக்கப்படும்.

      சிறுபான்மையினர்,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை  மத்திய அரசு வழங்கிவரும் இட ஒதுக்கீடு,கல்வி உதவித் தொகை, சலுகைகள் அனைத்தும் கிடைக்காது!

   ஊழலை ஒலிப்பதாக சொல்லும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் அரசாங்கமே ஊழலாக மாற்றப்படும்! லோக்பால் சட்டம்  வரவே வராது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு எட்டாக்கனி ஆகும்.

ராஜேந்திர சச்சார் கமிட்டியின்  பரிந்துரைகள்  கிடப்பில் போடப்படும். மதக் கலவர தடுப்பு மசோதாவை எதிர்க்கும் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால்," மதமாற்ற தடை சட்டம்"  நாடுமுழுவதும் கொண்டுவரப்படும்.!  சிறுபான்மையின மக்களை  இந்த சட்டத்தின் மூலமே  குற்றவாளிகள் ஆக்கி   சிறைகளில் போட்டு சித்திரவதை செய்ய முடியும்.! 

      எதிர்கட்சியாக இவர்கள் உள்ள நிலையிலேயே  இவர்களால் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட கலவரங்கள், படுகொலைகள் செய்யப்பட்ட சிறுபான்மையினர்,  கொள்ளையிடப்பட்ட  சொத்துக்கள், நாடெங்கும் நடத்திய வன்முறைகள்  ஏராளமாகும்.!

        பாபர் மசூதி இடிப்பு போன்ற தேசிய அவமானங்களைச்   செய்த  இவர்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவை ஆளும் நிலை ஏற்பட்டால்...    "பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்"  என்பது  உண்மையாகும்.!


ராஜ்நாத் சிங்கின் மன்னிப்பு..

      முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எப்போதாவது, எங்கேயாவது எங்கள் சார்பில் ஏதாவது தவறு நிகழ்ந்திருந்தால் அதற்கு தலை வணங்கி மன்னிப்பு கேட்கத் தயாராக உள்ளோம்; இந்தத் தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள்’  பாரதிய ஜனதா, முஸ்லிம்களுக்கு விரோதமான கட்சி அல்ல. எங்கள் கட்சிக்கு எதிரான பிரசாரத்தை நம்பிப் போகாதீர்கள். இந்த ஒருமுறை எங்களுக்கு நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு ஓட்டு போடுங்கள்.    என்று பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்  வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 

 
          எப்போதாவது எங்கேயாவது இவர்கள்  சார்பில் முஸ்லிம் சமுதாயத்துக்கு  இவர்களால் நன்மை விளைந்திருக்கிறதா? என்று கேட்கத் தோன்றுகிறது.!
 
        நரேந்திரமோடி குஜராத்தில் ஒரு முஸ்லிமுக்கு சட்டமன்ற சீட் கொடுத்து வெற்றிபெற செய்துள்ளாரா? குஜராத்தில் சிறப்பான்மையினருக்கு எதிரான 4000 வன்முறை வழக்குகளை மோடியின் அரசு முடித்துகொண்டது  ராஜ்நாத் சிங்குக்கு தெரியாதா? முஸ்லிம்களுக்கு இவர்களது அவதார புருஷன்," நமோ" செய்த நன்மைகள் என்னவென்று  கூற முடியுமா?
 
       பெஸ்ட் பேக்கரி வழக்கில் சாட்சியங்களுக்கு நெருக்கடி கொடுத்து 14 குற்றவாளிகளை விடுவித்தது  முஸ்லிம்களுக்கு செய்த நன்மையா? குஜராத் அரசு மீது, உச்ச நீதிமன்ற நீதிபதியே, நம்பிக்கை இல்லை என்று சொல்லி, மறுவிசாரணைக்கு ஆணை இட்டதே!   அதுதானா, இவர்கள் கூறும் நாட்டு நலன்?  என்று கேட்கத் தோன்றுகிறது.!
 
        இனப்படுகொலைக்கு ஆதரவானவர்களை அரசு வழக்கறிஞர்கள் ஆக்கி, விசாரணையை இழுத்தடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு அநீதி இழைத்தவர்  நரேந்திர மோடி.! 
 
       அரசு  நடத்திய   முஸ்லிம்களின் நிவாரண முகாம்களை மூடி, "குழந்தை உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்குவதை அரசு விரும்பவில்லை" என்று  முஸ்லிம்களை கேவலப்படுத்தியவர்  எப்படி சிறுபான்மை மக்களின் நலனை வரும் காலத்தில் பேணி காப்பார்? 
 
        இன்றுவரை, குஜராத்தில் முஸ்லிம்கள் அடிப்படை  வசதிகள் அற்றவர்களாக ஆக்கப்பட்டு உள்ளனர்.! அவர்களது வாழ்விடங்களில் பள்ளிகள், வங்கிகள், கைபேசிகள் போன்ற பல சமூக வசதிகள் கூட வழங்கபடாமல் மறுக்கப்பட்டு வருவதை அறியாதவரா? இந்த ராஜ்நாத் சிங் !
 
       சிறுபான்மையினருக்கு மத்திய  அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையைக்கூட பெற்று  வழங்காமல்,  அதனை திருப்பி அனுப்பிய   " காருண்ய மூர்த்தி" தான்   மோடி என்பதும்,  அதுகுறித்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் தற்போது நடந்துவருவதும்   ராஜ்நாத் சிங்குக்கு தெரியாதா?  
 
         அப்பாவி மக்களைக் கொன்றதை நியாப்படுத்தும் வக்கிர குணம் கொண்ட பி.ஜே.பி.தலைவர்கள்,  இப்போது முஸ்லிம்களின் வாக்குகளைப்  பெறுவதற்காக,  நாட்டின் நலனை  குறித்து பேசுவதும்,முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதாக பேசுவதும்   வேடிக்கையிலும் வேடிக்கையாகும்.!
 
       கோடிகோடியாக கார்பரேட்டுகளுக்கு கொடுத்து,அவர்களை காப்பாற்றும் மோடியின் குஜராத்தில், இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை ஊட்டச் சத்து குறைபாடு இருக்கிறது.  இதற்கு காரணம் குஜராத் தாய்மார்கள் உணவுக் கட்டுப்பாட்டில் இருகிறார்கள் என்று மனசாட்சியே இன்றி மோடி பேசுவதை என்ன வென்பது?  
 
        அதிகார போதை, ஆணவம், மதத்திமிர், வக்கிரகுணம், ஆகியவற்றின் உருவமான  மோடி, பன்முக சமூகங்கள் வாழும்  இந்தியா போன்ற நாட்டில் வாழத் தகுதியற்றவர. அவர் மனித வடிவில் உள்ள மிருகம்.   அவர் இந்தியாவின் பிரதமராக வந்தால் இந்தியாவில் சிறுபான்மையினர் நிலை கேள்விக்குறியாகும்!   
 
       மோடியை  நாட்டின் நலம் காக்க பி.ஜே.பி. முன்னிறுத்தி உள்ளது. மோடி  குஜராத்தின்  நலம் காப்பற்றியவரா?  ஒருமாநிலத்தின் நலனையே காப்பாற்ற முடியாத மோடி, எப்படி நாட்டின் நலத்தைக் காப்பாற்றுவார்?
 Tuesday, 25 February 2014

மோடியின் மோசடிகளும் முறைகேடுகளும்..

       மோடியின் மோசடிகளையும்  முறைகேடுகளையும்  மூடி மறைத்து அவைகளையே   இன்று   சாதனைகளாக  கார்பரேட் கம்பனிகள், ஊடகங்கள் மக்களிடம்  காட்டுகின்றன.. அப்பாவி விவசாயிகள், குஜராத் பழங்குடியினர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, கார்பரேட் முதலாளிகளை வாழ்விக்க மோடி செய்த முறைகேடுகள் ஏராளமாகும்.!

       மோடியின் கார்பரேட் கம்பனிகள் மீதான தாராள குணத்தையும், மோடியால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் சிலவற்றையும் பார்க்கலாம்.


           குஜராத் உஜ்ரா விகாஸ் நிகமுடன் கார்பரேட்குழுமத்தின் அதானி பவர் லிட்  உடன்படிக்கை செய்திருந்தது.  உடன்படிக்கைக்கு எதிராக நடந்து கொண்ட அதானி குழுமத்திற்கு ரூ  240.08 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ரூ  80.08  கொடிகளை மட்டும் அதானிக் குழுமத்திடம் பெற்றுக்கொண்டு, ரூ 160 கோடியை செலுத்த அக்கம்பனிக்கு விலக்கு  அளிக்கப்பட்டது.

      இதே.. அதானி நிறுவனதுக்கு சதுர மீட்டர் ரூ 1500 சந்தை மதிப்புள்ள குஜராத்தின் கடற்கரை பகுதி விலை நிலங்கள் சதுர மீட்டர் ரூ 1 முதல் 32 வரை சலுகை விலையில்  தொழில்  வளர்ச்சி மற்றும் துறைமுக அபிவிருத்திக்கு என்று மோடி அரசால் வழங்கப்பட்டன.மோடி அரசால் சலுகைவிலையில் பெற்ற நிலத்தின் ஒருபகுதியை மற்ற கார்பரேட் நிறுவனங்களுக்கு விதிமுறைகளை மீறி அதானி நிறுவனம் குத்தகைக்கு விட்டது. மோடிதான் கார்பரெடுக்கள்  நலம் காப்பவர் ஆயிற்றே! நடவடிக்கை எடுக்கவில்லை.!

      எஸ்ஸார் குழுமம் குஜராத்தின் ஹஜிரா பகுதியில் ஆக்கிரமித்து இருந்த 7'24'687 சதுர மீட்டர் நிலத்தை அந்த நிறுவனத்துக்கே சலுகைவிலையில் வழங்கினார். அரசுக்கு 238.50 கோடி இழப்பு ஏற்பட்டது. !

      மோடிக்கு லாபம் !  குஜராத் மக்களுக்கும் மாநில அரசுக்கும் நஷ்டம். இதில  வேடிக்கை என்னவென்றால் ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக  மோடி ஊழலை எதிர்கிராரார்ம். இந்தியாவை வளர்ச்சி அடைய  வந்துதித்த "நமோ"வாம்!  .ஊடகங்கள் கார்பரெட்டுகலின் எலும்பை கடித்துக்கொண்டு  நம்மை மூளை சலவை செய்கின்றன!


          அணுஉலை அமைக்க என்று லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்துக்கு சலுகை  விலையில் நிலம் வழங்கி  அரசுக்கு ரூ  128.71 கோடிகள் ஏற்படுத்தினார்.அதுமட்டும் இன்றி, இந்த நிறுவனத்துக்கு பரோடா மாவட்டத்தில் நிலம் ஒதுக்கி, 79.77 கோடிகள் லாபம் அடைய  மோடி உடந்தையாக  செயல்பட்டார்.

     குஜராத்தின், மஹுவா பகுதியில் விவசாய நிலங்களை  அரசு புறம்போக்கு நிலங்கள் என தவறாக  காட்டி, 'நிர்மா சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு  சிமெண்ட் ஆலை கட்ட'  மோடி அரசு நிலம் ஒதுக்கியது.  15000 மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் இச்செயலுக்கும்  மோடியே  காரணம்.! 

       டாட்டா குழுமத்தின் நானோ திட்டத்துக்கு, "நமோ-மோடி"  சந்தை மதிப்பு சதுர மேட்டருக்கு ரூ 10000 உள்ள நிலத்தை, ரூ.900 என்ற அளவில் ஒதுக்கியது.அவ்வாறு ஒதுக்கிய நிலம், ஒன்று இரண்டு ஏக்கர்  இல்லை!  1100 ஏக்கர் நிலத்தை மோடி ஒதுக்கினார். ஊழலின் அளவும், மோடியால் குஜராத் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு   எத்தனை  கோடிகள் இருக்கும்? என்பதை   நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்!

    இந்த  இலட்சணத்தில்  டாட்டா குழுமத்திற்கு 0.01 வட்டியில் மிகபெரிய அளவில் கடனும் வழங்கப்பட்டு  உள்ளது.  டாட்டா குழுமம் தயரிக்கும் ஒவ்வொரு காருக்கும் அரசாங்கம் தரும் மானியம் ரூ.60'000 என்று பொருளாதார புள்ளிவிவரம் கூறுகிறது.!

        ஊழல்,முறைகேடுகள், பெருமுதலாளிகளின் மேன்மை ஆகியவற்றை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படும் மோடியா இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல போகிறார்?

          மோடி புகழ்பாடும்  ஊடக மேதாவிகள், இந்துத்துவ அறிவு ஜீவிகள்   குஜராத் மக்களின் நிலை குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அடுத்த பதிவு .Monday, 24 February 2014

குஜராத்தின் உண்மை நிலை.! மோடியின் பொய்களுக்கு அளவே இல்லை. மோடியின் குஜராத் வளர்ச்சி பற்றி ஊடகங்கள்  இந்துத்துவ கண்ணாடி போட்டுகொண்டு உண்மையை மறைத்து பொய்களை விதைத்து வருகின்றன. காரணம் அவைகள் இந்துத்துவ பாசிட்டுகளின் ஏவல் நாய்களாக இருக்கின்றன என்பதற்கு  அருந்ததி ராய்  அவர்களது கேள்வியே சான்றாக உள்ளதை அறியலாம்.!

மோடியின் கோயபல்ஸ் பொய்களுக்கு அளவே இல்லை. அவைகள் அடுத்தும்  தொடரும்.Saturday, 22 February 2014

மோடியின் கோயபல்ஸ் பொய்கள்.!

        பொய்யையே திரும்பத் திரும்ப சொல்லி அதனை உண்மை என்று நம்ப வைக்கும் தந்திரத்தை செய்தவன் இட்லரின் மந்திரி கோயபலஸ் என்பார்கள்! 
அவனை போலவே, மோடியின் நிர்வாகத்தில் குஜராத் வளர்ச்சி பெற்றுள்ளது.மோடியால் குஜராத்தைப் போல இந்தியா வளர்ச்சி அடையும் என்ற பொய் பிரச்சாரம் தொடர்ந்து நடந்து வருகிறது!

              உண்மையில் குஜராத் வளர்ச்சி அடைந்து  உள்ளதா? விவசாயிகள்,தொழிலாளர்கள், சிறுபான்மையினர்,பழங்குடியினர், பெண்கள் வாழ்க்கை நிலை மோடியின் ஆட்சியில் முன்னேற்றம் கண்டுள்ளதா? என்று ஆய்வு செய்தால் அதிர்ச்சிதரும் வகையில் குஜராத்தில் அனைத்து தரப்பு மக்களும்  ஏழ்மையில்,வறுமையில் இருந்துவருவதும்  கல்வி,வேலைவாய்ப்பு,பொருளாதார முன்னேற்றம், தொழிலாளர்கள் நலம் மோடியால் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது பல்வேறு புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது. கல்வி,சுகாதாரம்,வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம்,வாழ்க்கைத்தரம் அனைத்திலும் உண்மையை மறைத்து கூறப்பட்டு வருகிறது. 

       பொய்யாக  மோடியைப் பற்றிய மாயையை மோடியால் பயனடைந்த கார்பரேட் கம்பனி முதலாளிகள்  உருவாக்குவதில் முனைப்புடன் செயல் பட்டுவருவதை அறிய முடிகிறது.  கார்பரேட் கம்பனிகள், மோடியை மிக சிறந்த நிர்வாகியாக,குஜராத்தை முன்னேற்றி,தொழில் வளர்ச்சி செய்தவராக ஊடகங்கள் மூலம் காட்டி வருகின்றன.  மோடியைப் பற்றிய மாய தோற்றத்தை, பொய்களை  ஊடகங்கள் மூலம் காட்டுவதை ஊக்குவித்து வருகின்றன.! 

            காரணம், மோடியால் பயன் அடைந்தவர்கள் கார்பரேட் கம்பனிகளும் பெரும் முதலாளிகளும்தான்.! மோடியை பூதாகரமாக காட்டி, அவரை ஆட்சிக்கு கொண்டுவந்து விட்டால், இந்தியா முழுமைக்கும் குஜராத்தைப் போல,  தங்களது கம்பனிகள் பயனடையும்என்று அவைகள் கோயபல்ஸ் பிரசாரத்தை  செய்துவருகின்றன.!
 
.        மோடியின் சிறந்த நிர்வாகி,மிகச் சிறந்த அரசியல்வாதி,நேர்மையாளர், அவரே இந்தியாவை ஆளத்  தகுந்தவர்!   என்று  பிரசாரம் செய்ய,  ஆப்கோ வேர்ல்ட் வைடு என்ற நிறுவனம் பணி அமர்த்தப்பட்டு  உள்ளது.

        இட்லர் தனது நாசிசத்தை நியாயபடுத்த கோயபல்ஸ் மூலம் செய்த மூளை சலவையை, இன்று மோடிக்காக ஆப்கோ வேர்ல்ட் வைடு( APCO Wide Wide) என்ற நிறுவனம் உலகம் முழுவதும் செய்து வருகிறது. இதற்காக இந்த நிறுவனத்திற்கு மாதம் 25,000 அமெரிக்க டாலர்கள் கொடுக்கப்படுகிறது. 

     இந்த நிறுவனம் உலக சுகாதார அமைப்புக்கு எதிராக புகையிலைக்கு ஆதரவாக உலகம் முழுவதும் பிரசாரம் செய்து வெற்றிகண்டது. .இந்நிறுவனத்தின் ஆலோசனைப்படியே மோடியின் உடைகள், தோற்றம், ஒவ்வொரு இடத்திலும் என்ன பேசவேண்டும் என்பவைகள் தீர்மானிக்கபடுகின்றன!  மோடியும் பேசி வருகிறார்.

        ஆப்கோ வேர்ல்ட் வைடு  நிறுவனம்  நாடாளுமன்ற தேர்தல் வரை ஊடகங்கள் மூலம்  மோடியையும் அவரது ஆட்சியில்  குஜராத் வளர்ச்சி பெற்றிருப்பதாகவும் அதுபோலவே, மோடி பிரதமர் ஆனால்   இந்தியாவும் வளர்ச்சி பெரும் என்று   பொய்யாக பிரசாரம் செய்யும். செய்துவருகிறது.  

        மோடியின் பொய்யான பிரசாரத்தையும், மோடிக்கு ஆதரவாக களம் இறக்கப்பட்டு உள்ள ஆப்கோ வேர்ல்ட் வைடு நிறுவனத்தின் கோயபல்ஸ் பொய்களையும்   பார்க்கலாம்.

      நிலமில்லதவர்களுக்கு வழங்கவேண்டிய நிலங்களை கார்பரேட் கம்பனிகளுக்கு அடிமாட்டு விலைக்கு மோடி அரசு விற்பனை செய்துள்ளது. காடுகளும்  இதற்கு விதிவிலக்கு இல்லை.!

       பழங்குடியினர் பட்ட கோரிய 1.20 லட்சம் மனுக்கள் மோடி அரசால் எந்தவித விசாரணையும் இன்றி,நிராகரிக்கப் பட்டுள்ளன. பழங்குடியினர் பட்ட கோரிய 1.20 லட்சம் மனுக்கள் மீது விசாரணை நடத்தகோரி குஜராத் உயர் நீதிமன்றதில் போடப்பட்ட வழக்கினால்,குஜராத் உயர்நீதிமன்றம், தற்போது  பொதுமக்கள் பட்ட கோரிய அனைத்து மனுக்களையும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு இட்டுள்ளது

     . ஏழைகள் நிலமற்றவர்கள் நலனில் மோடிக்கு  அக்கறை இல்லை என்பதற்கும்   குஜராத் வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்,பொய் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

      சிறப்பு முதலீட்டு மண்டலம் அமைவதற்காக குஜராத் மாநிலம், பகுச்சராஜி பகுதியில் 55000 ஏக்கர் நிலத்தை மோடி அரசு பலவந்தமாக, மலிவான விலையில்  கார்பரேட் கம்பனிகளுக்கு பெற்றுகொடுக்க முனைந்தது. மோடியின் இச்செயலை எதிர்த்து விவசாயிகள் இயக்கம் குஜராத்தில் தற்போது  கடும்போராட்டங்களை  நடத்தி  வருகிறது. மோடி அரசு மாருதி சுசுகி நிறுவனத்துக்கு 750 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது.

விவசாயிகள் நலனில் மோடிக்கு அக்கறை இல்லை.ஆனால் கார்பரேட்டு,கம்பனிகள்,அதன் முதலாளிகள் மீதுதான் அக்கறை கொண்டுள்ளார்  என்பதற்கும்  குஜராத் வளர்ச்சி பற்றிமோடி  கூறும் பொய்களுக்கும்  இதுவும் ஒரு உதாரணமாகும்.

   2011-2012-ன் நிதியாண்டு CAG அறிக்கை ரூ. 1275 கோடிகளை கார்பரேட் கம்பனிகளுக்கு நரேந்திரமோடியின் குஜராத் அரசு வாரி வழங்கி உள்ளதாக தெரிவிக்கிறது.!  மோடியின் தாராள குணத்தால்,கார்பரேட்டுகள் மீதான பாசத்தால்   அதானி,எஸ்ஸார் ரிலையன்ஸ் மற்றும் லார்சன் அண்ட் டுப்ரோ போன்ற கம்பனிகளே  பயனடைந்து உள்ளன.!

      ஏழைகள், விவசாயிகள் நலனில் மோடிக்கு அக்கறை இல்லை என்பதற்கும் மோடியின் பார்வை கார்பரேட்டுகள் மீதும்,கார்பரேட்டுகளின் பார்வை மோடிமீது  உள்ளதற்கும்,   மோடியால் குஜராத் வளர்ந்துள்ளதாக கார்பரேட்டுகள் ,ஊடகங்கள் மூலம்  பரப்பும் பொய்களுக்கும்  இதுவும் ஒரு உதாரணமாகும்.!
        (மோடியின் பொய்யுரைகள்  அடுத்த பதிவிலும் தொடரும்)
Thursday, 20 February 2014

தமிழர்களுக்கு ராஜீவ் இழைத்த கொடுமைகள் !

        "இறந்தவர்களுக்கு நீதி வேண்டும்" என  தற்போது பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து காங்கிரசார். கேட்கிறார்கள்.காங்கிரஸார் கடந்த காலங்களில் தமிழர்களுக்கு நீதி வழங்கி இருகிறார்களா? என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்!  

        (1) நெல்லியடி முகாமை 1987 ஆடி ஐந்தில், கேப்டன் மில்லர் தகர்த்து எறிந்து, நூற்றுக் கணக்கான சிங்கள இராணுவத்தினரை கொன்று குவித்த பின்னர்,
         தமிழ் ஈழப் பகுதிகள் அனைத்திலும் அமைந்திருந்த சிங்கள முகாம்களில் இருந்த ராணுவத்தினர் நடு நடுங்கினர். படிப்படியாக புலிகள் ஒவ்வொரு முகாமையும் தகர்த்து அழிக்கவிருந்த வேளையில்தான் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, ராஜீவின் காலில் விழுந்து ஒப்பந்தம் செய்து இலங்கைக்கு இந்தியப் படைகளை வரவழைத்தார். இல்லையேல், 1990 --க்கு முன்னரே தமிழ் ஈழம் கிடைத்திருக்கும்!  தமிழ் ஈழம் அமைவதற்கு தடையாக இருந்தவர்,தமிழினத்திற்கு  விரோதியாக செயல்பட்டவர் ராஜிவ்காந்தி!

      (2) தியாக தீபம், திலீபன் இந்தியச் செயல்களைக் கண்டித்து உண்ணா நோன்பு இருந்தபோது, திலீபனை அநியாயமாக சாகவிட்ட சண்டாளர்தான் ராஜீவ் காந்தி.

      (3) குமரப்பா, புலேந்திரன் உட்பட 13 புலித் தளபதிகளை யுத்த நிறுத்தக் காலத்தில் சிங்கள ராணுவத்திடம் ராஜிவின் படைகள் ஒப்படைக்க இருந்ததால்தான் அவர்கள் சயனைட் உட்கொண்டு மடிந்தனர். 13 புலித்தலைவர்கள் தற்கொலைக்கு காரணமானவர் ராஜீவ்காந்தி.!

      (4) ராஜிவின் இந்திய அமைதிப் படையால் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 8000.பேர்கள்.
அதற்கு  பொறுப்பு ஏற்க வேண்டிய  இந்திய பிரதமர்   ராஜீவ் காந்தி. காங்கிரஸ்காரர்கள் நீதி வழங்கினார்களா?


     (5) ராஜிவின் கொலைவெறி, காமப் படையால் ஈழத்தில் மானபங்கப் படுத்தப் பட்ட ஈழத் தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கை, சுமார் 2000கு மேல்.
அதற்கு காரணம் ராஜீவ். காங்கிரசின் தமிழர்களுக்கான நீதி இதுதானா? 


     (6) இந்திய அமைதிப்படையால் கொள்ளை அடிக்கப் பட்ட ஈழத் தமிழர்களின் பணம்- சொத்து மதிப்பு சுமார் 1500கோடி ரூபாவுக்கு மேல். என்ன நிவாரணம் வழங்கப்பட்டது.?காங்கிரசார் பதில் சொல்வார்களா?

    (7) இந்திய அமைதிப் படையால் அப்போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்  (ஏதிலிகளாக)  அகதிகளாக ஆன தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 20,000 பேருக்கு மேல். தமிழர்களை அனாதைகளாக ஆக்கியவர் ராஜீவ் காந்தி.!

    (8) இந்திய அமைதிப் படையால் அவர்களின் துப்பாக்கி குண்டுகளாலும் எறிகணைகளாலும், கை கால்களை, கண்களை, செவித்திறனை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3000கு மேல். அதற்கு காரணமாக இருந்தவர் ராஜீவ்.! 

   
   தமிழீழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கும், கற்பழிக்கப்பட்ட எங்கள் தமிழ் சகோதரிகளுக்கும்  காங்கிரஸ் நீதி வழங்கவில்லை.!இத்தனை கொடூரங்களுக்கும், படுகொலைகளுக்கும் செய்யக் காரணமான ராஜீவுக்கு நீதி  கேட்கிறார்கள். ! 

      இலங்கையில் இன்னும் தொடரும் அவலங்களுக்கு இந்தியா காரணம். இன்றும் தமிழர்கள் சிங்களப்படையால்  கொல்லபடுகின்றனர். சொல்லொண்ணா துன்பத்திற்கு ஆளாகிவருகின்றனர்.!

      காங்கிரசார் தமிழர்களுக்கு  நீதிவழங்கவில்லை. காரணமாக இருந்து அநீதி இழைத்த  ராஜீவுக்கு நீதிகேட்பது   எவ்வளவு பெரிய கொடுமை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.! 
 

Wednesday, 12 February 2014

தி.மு.க-வின் நாடகங்கள்..!

      திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்த நாட்களில் அக்கட்சி  சினிமா, நாடகம் போன்ற கலைத்துறையை தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டு வளர்ந்தது.

       மற்ற கட்சிகளை விட அன்றுமுதல் இன்றுவரை கலைத்துறையினர் அதிகம் உள்ளக் கட்சியும் தி.மு.க-தான்.   அன்று எம்.ஜி.ஆர்,,எஸ்.எஸ்.ஆர். எம்.ஆர்.ராதா  என்று ஒரு பட்டாளம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்கள்.


             இன்று குஸ்பு, சந்திரசேகர், நெப்போலியன்,ரித்திஸ் என்று பலர்  இருகிறார்கள். அவ்வளவு ஏன்?  தி.மு.க-வின் தலைவர் கலைஞரே  திரைத் துறையை சேர்ந்தவர்தான்.!

         அதனால்தானோ, என்னவோ,அன்றுமுதல் இன்றுவரை அரசியலில் அவர் போடும் வேடங்களும் பேசும் வசனங்களும் நேரத்துக்கு தகுந்தபடியும் அவர் ஏற்றுகொண்ட  பாத்திரத்திற்கு தக்கபடியும் இருப்பதை கூர்ந்து நோக்கும் எவரும் அறிய இயலும்.

         ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டபோது, காங்கிரசின் உறவில் திளைத்து இருந்த கலைஞர், அப்போதுஅவர்களுக்காக அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை.!


            நாற்பது எம்பிக்கள் இவரது கட்டுபாட்டில் இருந்தும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று மத்திய அரசை மிரட்டவில்லை.போரை நிறுத்த முயற்சிகள் எடுக்கவில்லை. மூன்றுமணிநேரம் அன்ன சமாதியில் உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்தினார்.!

         தனது மகளும் குடும்பமும் 2-ஜி ஊழலில் சிக்கிக்கொண்டபோது  காங்கிரசை  மிரட்டியும் பயனில்லாமல் போனதால், ஆட்சியில் இருந்து வாபஸ் பெற்றார்.இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்து செத்துப்போன டெசோ அமைப்பை தொடங்கினார்.!

          தனது மகள் கனிமொழியை ராஜ்ஜிய சபை உறுப்பினர் ஆக்க அதே காங்கிரசின் தயவு தேவைப்பட்டதால்,மீண்டும் நேசக்கரம் நீட்டினார்.
இப்பொது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழர் நலம்,இலங்கை பிரசனை,மீனவர்கள் படுகொலை என்று ஒருபுறம் நாடகம் நடத்துகிறது.

         மறுபுறம், காங்கிரசோடு கூட்டணி வைக்க சோனியாவை சந்திக்க  தனது மகள் கனிமொழியை அனுப்புகிறார். ராகுலை சந்திக்க தோல்.திருமாவை அனுப்புகிறார்.!

         பார்த்தாயா தி.மு.க-வின் பலத்தை என்று காட்ட திருச்சியில் பலகோடிகளை  கொட்டி,மாநாடு நடத்துகிறார்.

           அன்று துண்டேந்தி பிச்சை எடுத்து தமிழர்களைக் காப்பாற்ற கட்சியை நடத்துவதாக சொன்ன தி.மு.க-வால் இன்றுகோடிகளை அனாவசியமாக செலவு செய்து மாநாடு நடத்த முடிகிறது. !

       இந்தப்பணம் எப்படி வந்தது? என்பது ஒருபுறம் இருக்க..
 தி.மு.க. வளர்ந்த அளவுக்கு தி.மு.க-வால் தமிழர்கள், திராவிடர்கள் வளர்ந்து உள்ளார்களா?என்ற கேள்வி எழுகிறது.!


           இன்றும் கையறுநிலையில்,வறுமையின் பிடியில் இலட்சக்கணக்கான தி.மு.க.தொண்டர்கள்,அப்பாவி தமிழர்கள் இருப்பதை காணும்போது, தி.மு.க யாரை வளர்த்துள்ளது என்ற கேள்வி எழுகிறது.!
       
                     கண்ணதாசன் சொல்வார்: 
."நாடகங்கள் ஆடுமாறு நாயகன்தன் கட்டளை
நாடகம் என்னும் பேரில் நடப்பதுதான் எத்தனை?"

"அன்பு ஒன்று செய்யுமாறு அண்ணலிட்ட கட்டளை
அன்பு என்னும் வாள்கொண்டு ஆளறுபோர் எத்தனை ?"

-    இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ,நிச்சயம் கலைஞருக்கு பொருந்தும்!

        சுயநலமும், சந்தர்ப்பவாதமும்,அடுக்குமொழி பேச்சும், தந்திரமும் அரசியல் சாணக்கியமாக தெரியலாம். ஆனால்,இவைகளால் யாருக்கு என்ன பயன்? சிந்திக்க வேண்டிய நேரம் இது.


Monday, 10 February 2014

ராமதாசின் (சொ)நொந்த மனம்..

          எந்த திராவிட கட்சிகளுடன் தேர்தலுக்கு தேர்தல் அணிமாறி கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தில் பங்குபேற்றாரோ அந்த திராவிடக் கட்சிகளை சனியன்கள் என்று மருத்துவர் ராமதாஸ் சாடி உள்ளதுடன்,இந்த கட்சிகளை வேரடி மண்ணோடு வீழ்த்தவேண்டும் என்று பேட்டி அளித்துள்ளார்.

          சமூக நீதிக்கு குரல்கொடுத்த ராமதாஸ்,  தந்தை பெரியார்,அண்ணல் அம்பேத்கர் போன்றோரின் எண்ணங்களுக்கு எதிராக இன்று நடந்து கொள்வதை காலத்தின் கோலம் என்பதா? வாக்கு வங்கி அரசியலுக்காக வழிதவறி போனவர் என்பதா? தெரியவில்லை.!


      தமிழ்குடிதாங்கி என்று தோல்.திருமா அவர்களால் அழைக்கப்பட்ட, அண்ணல் அம்பேத்கர் விருது பெற்ற திராவிடரான,  மருத்துவர் ராமதாஸ் அவர்கள் இன்று ஆரிய,பார்ப்பன சூழ்ச்சிக்கு பலியாகி,ஆதிதிராவிடர்களுக்கு எதிராக செயல்படத் தொடக்கி இருக்கிறார்.

     சாதிகளை ஒழிக்கவும்,சாதிகள் அற்ற தமிழ் தேசியத்தைக் கட்டியமைக்கவும் வேண்டிய மிகப்பெரிய சமுதாயக் கடமையை மறந்துவிட்டு, புறக்கணித்து விட்டு, சாதியத்தை முனைப்புடன் தூக்கி நிறுத்தவும்,சாதிய கட்சிகளின் தயவுடன் ஆட்சி அதிகாரத்தை பெறவும்  ராமதாசின் (சொ)நொந்த மனம் இன்று துடிக்கிறது. தவியாய் தவிக்கிறது.!

       இத்தனைக்கும் ராமதாஸ் திராவிடர்களான,தமிழர்களை ஆளவும், தமிழகத்தை ஆளவும் துடிப்பது  அப்பட்டமாக  தெரிகிறது.!
 

          கண்ணை விற்று சித்திரம் வாங்குவதைப் போல தமிழினத்தை சிதைத்தும்,  தமிழின ஒற்றுமைக்கு ஊறு விளைவித்தும், ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை  தமிழகத்தில் கொண்டுவர  ஒருபுறம் கூட்டணி பேரம் பேசியபடி, கூட்டணியில் தனக்கு அதிக சீட்டும்,நோட்டும் கிடைக்க வேண்டுமே என்ற பதைபதைப்புடன்,சமுதாய கூட்டணியை அமைத்து, நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க போவதாக ராமதாஸ் அவர்கள் கூறுகிறார்.!

        நாம் என்ன சொன்னாலும்மக்கள்   நம்பிவிடுவார்கள், மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள்  என்ற எண்ணத்தில் ராமதாஸ் அவர்கள் நடந்து கொள்வது  தெரிகிறது.

        முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்பார்.  தேர்தலில் போட்டியிட இவர் முஸ்லிம்களுக்கு வாய்பளிக்க மாட்டார். கட்சியிலும், பதவிகளிலும் முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் தரமாட்டார்.!

       பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று குரல்கொடுப்பார். போராட்டம் நடத்துவார். ஆனால் இவரது கட்சியில் பெண்களை போட்டியிட அனுமதிக்க மாட்டார்.!


         ஒரு தலித்தைதான் தமிழ்நாட்டின் முதல்வராக ஆக்குவேன் என்று பேசுவார். தலித்துகள் பொருளாதாரத்தை,அடிப்படை உரிமைகளை மனுதர்ம வழியில் அழிக்கவும், ஒடுக்கவும்  செயல்படுவார்.!

        சினிமாவை வெறுக்கும் சினிமாகாரர்கள் அரசியலுக்கு வருவதை எதிர்க்கும் ராமதாஸ், அரசியலையே சினிமாவாக நினைத்து நாளொருவேசம் பொழுதொரு நடிப்பை வெளிபடுத்தி வரும் நடிகராவார்.!

      தமிழ் பழமொழி ஒன்று,படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்பதுதாகும். ராமதாசின் செயல்கள் அனைத்தும் அந்த ரகமாக இருக்கிறது.!
தமிழகத்தை பீடித்துள்ள எத்தனையோ பயங்கர நோய்களில் இவரையும் சேர்க்க வேண்டும்.!


தேர்தல் திருவிழாவும் திண்டாடும் மக்களும்..!

         நாடாளுமன்ற தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி விட்டது. எப்படியாவது இந்தமுறையும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவேண்டுமே என்று காங்கிரசும்,இந்தமுறையும் கோட்டை விடக் கூடாது என்று பி.ஜே.பி-யும் ஆளாய் பார்க்கின்றன. கொள்கை,லட்சியம், எல்லாவற்றையும் ஏறக் கட்டிவிட்டு முரண்பட்டு நிற்கும் அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி வைக்க பேரம் பேசுகின்றன.

        கூடாத நட்பாயினும் கூட்டணியில் அதிக சீட்டுகளைபெறவும்,கேட்ட தொகுதிகளை பெறவும் துடிக்கும் மாநில கட்சிகளும்,சாத்திய அமைப்புகளும், தங்கள் பலத்தை காட்டுவதற்கு மாநாடுகளை பிரமாண்டமான பொதுக் கூட்டங்களை போட்டு மக்களை திரட்டி காட்டுகின்றன.


         இந்தியா எங்கும் நடக்கும் இத்தகைய கூத்துக்கள் தேர்தல் என்பதை திருவிழாக் கொண்டாட்டமாக எண்ணி செயல்படும் அரசியல்வாதிகளை, அரசியல் கட்சிகளை அடையாளம் காட்டுகின்றன.!

          இவைகளில் இருந்து பொதுவான ஒரு விஷயம் நமக்குத் தெரிகிறது. எந்தக்கட்சிக்கும் தனது கொள்கைகளை சொல்லி,நியாயமான வாக்குறுதிகளை சொல்லி, பொதுமக்களிடம் தனித்து நின்று வாக்கு கேட்கும் தைரியம் இல்லை.


        மக்களுக்கு இந்த கட்சிகளின் யோக்கியதை  ஏற்கனவே தெரிந்து இருப்பதால், மக்கள் தங்களை புறக்கணித்து விடுவார்கள் என்கிற அச்சம் எல்லா கட்சிகளுக்கும் இருப்பது தெரிகிறது.!

        மேலும் இக்கட்சிகள் அனைத்தும் மக்களை கடந்த காலத்தில் ஏமாற்றி வந்ததால் மக்களின் அதிருப்திக்கு ஆளாகி உள்ளதும் தெரிகிறது. அதனாலேயே. தனித்து நாடாளுமன்ற தேர்தலைச் சந்திக்க முடியாமல் கூட்டணி என்ற பெயரில் கொள்கை முரண்பாடுகள் உள்ள கட்சிகளுடனும் கூட்டு வைக்க கொஞ்சமும் வெட்கமின்றி நடந்து கொள்கின்றன.!

        இவைகளைப் பார்க்கும்போது  ஒட்டுக்காகவும், எம்.பி.சீட்டுக்காகவும், ஆட்சி அதிகாரத்துக்காவும் ஆளை பறப்பது நாட்டை காப்பாற்றவும்,நாட்டு மக்களை முன்னேற்றவும் இல்லை என்பது தெரிகிறது.!


            கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்து கொள்ளையும் ஊழலும், முறைகேடுகளும் செய்ய நடக்கும் இந்திய நாடாளுமன்ற தேர்தலால்  நாட்டின் பொருளாதாரம் மேலும் வீணாகிறது என்பதும் மக்கள் மேலும் திண்டாடப் போகிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது.!

      மோசமான அரசியல் கட்சியின் மோசமான நபர்களை,மோசடியாக தேர்ந்தெடுக்கும் இந்திய தேர்தலைப் பார்த்தால் என்ன தேர்தலோ,என்ன ஜனநாயகமோ, என்று கத்தலாம் போல் இருக்கிறது.!