Monday, 7 July 2014

காமராசரும்,கல்விக் கொள்ளையர்களும்..

         இந்திய அரசியல் சட்டம் குடிமக்களுக்கு கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளில் கல்வி உரிமை முதன்மையானது . இந்த அடிப்படை கல்வி உரிமையைப் பற்றி இப்போதுள்ள அரசுகள் கவலைபடுவதில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

        காமராசர் முதல்வராக இருந்தபோது,அரசின் மொத்த வருமானத்தில் கல்விக்காக 30% வருவாயை செலவிட்டார். அனால் 50 ஆண்டுகள் கழிந்து நடக்கும் இன்றைய அரசு வெறும் 14% மட்டுமே செலவிடுகிறது. 

      இலவச,அடுப்பு,கேஸ்,மிக்சி,கிரைண்டர்,இலவச மடிக்கணணி,இலவச சைக்கிள்,  ஆடு, மாடு ஆகியவைகளை கொடுப்பதால் மட்டுமே ஒரு சமூகம் அறிவார்ந்த சமூகமாக மாறிவிட முடியாது  என்பதை ஆட்சியாளர்களும், அரசும் புரிந்துகொள்ளவேண்டும்.  அனைவருக்கும் தரமான கல்வியை, தாய் மொழிக் கல்வியை கொடுப்பதே  ஒரு சமூகத்தை அறிவார்ந்த சமூகமாக மாற்றும் என்ற உண்மையைத்  தெரிந்துகொண்டு, அதனை செயல்படுத்த முன்வர வேண்டும் !

      இன்றைய கல்வியாளர்கள் யாரென்று பார்ப்போமானால, கள்ளச் சாராயம் விட்ரவர்கள் கல்லூரி அதிபரகளாக இருப்பதும்,முன்னாள் அரசியல்வாதிகள் கல்வித்  தந்தைகளாக காட்சி அளிப்பதும்,சட்டவிரோதமாக மணல் கடத்தியவர்கள் கல்வி வள்ளல்களாக போற்றபடுவதும் தெரியும். சாமானிய மக்களைக் கொள்ளையடித்து, வள்ளல்களாக மாறிய இவர்கள், பத்திரிக்கை, தொலைகாட்சிகள் நடத்துவதும்  சாத்தான் வேதம் ஓதுவதுபோல நீதியைப் பற்றியும் நேர்மையை பற்றியும் பேசி, அரசுக்கு புத்தி சொல்வதையும் காணலாம்.

       ஒரு குடும்பத்தின் முழு வருமானமும்  குழந்தைகளின் படிப்புக்கே செலவிடப்படும் கொடுமையான சூழல் சமூகத்தில் இருப்பது, வெட்கப்படவேண்டிய தேசிய அவமானமாகும்

        பல ஆங்கிலபள்ளிகள்  ஒரு குழந்தையை L K G-யில் சேர்பதற்கு ரூ. 2 லட்சம் வரை வசூளிக்கின்றன்.  பிளஸ் 2-வரை படிப்பதற்கு பல லட்சம் செலவு செய்யவேண்டியது இருக்கிறது.  தனியார் கல்லூரிகள்  ஆண்டுக்கு 5, 6 லட்சம் நன்கொடை வாங்கிக்கொண்டுதான் கல்லூரியில் இடம் கொடுக்கின்றன. மருத்துவ படிப்பின் நிலையோ இன்னும் மோசம்.   ஒரு M.B.B.S -சீட்டு ஒரு கோடி வரை விற்கப்படுகிறது.  மருதுவ மேல்படிப்புக்கு  ரூ.3 கோடி செலவாகிறது..  மூன்று கோடி கொடுத்து மருத்துவம் படித்த மருத்துவர் ஏழைகளுக்கு எப்படி மருத்துவம் பார்க்க முடியும்? அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம்  இது.

           இன்று கல்வி ரியல் எஸ்டேட் தரகர்கள்,கள்ள சாராய வியாபாரிகள், திரைப்படம் எடுத்து நொடிந்து போனவர்கள்,அரசியலில் காணாமல் போனவர்கள் என அனைவரையும் வளாவைக்கும் துறையாக கல்வித்துறை மாறிவிட்டது.  பங்கு சந்தையை விட அதிக லாபம் தரும் தொழிலாக மாறிவிட்டது. கஞ்சா,சாராயம் விர்ப்பதைவிட அத்க லாபம் தருவது கல்வி என்றாகிவிட்டது.

         இந்த நிலைமை மாறவேண்டும். கல்வியை வியாபாரமாக்கும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடமையாக்க வேண்டும். கல்வி நிறுவனங்களை   அரசுடமையாக்க கோரி அனைவரும் குரல்கொடுக்கவும், போராடவும் வேண்டும்.

 ( தமிழக மக்கள் ஜனநாயக கட்சி இதனை வலியுறுத்தி ஜூலை-15-ம் தேதி D P I - வளாகம்  சென்னையில் போராட்டம் நடத்துகிறது )

 Saturday, 5 July 2014

எரியும் கொள்ளிக்கு பயந்து எண்ணைசட்டியில் விழுந்தது போல..

          காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நடந்த முறைகேடுகள், மக்களுக்கு எதிரான் செயல்கள்,விலைவாசி பிரசனை ஆகியவைகளால் அதிருப்பதிஅடைந்த பொதுமக்கள்  பி.ஜே.பி-க்கு ஆதரவளித்து, அறுதிப் பெரும் பான்மையுடன்  அக்கட்சியை ஆட்சியில் அமர்த்தி இருகிறார்கள்.

         பி.ஜெபி-அரசு தட்டிகேட்க ஆளில்லை என்ற மிதப்பில் மக்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாமல்,  தான் தோன்றிதனமாகவும், தன்னிச்சையாகவும் ,செயல்பட ஆரம்பித்து உள்ளதை  அதன் சமீபத்திய செயல்பாடுகள் காட்டுகின்றன.

        எரிவாயு சிலிண்டர் விலையை  ரூ 250 வரை உயர்த்த போவதாகவும், மண்ணெண்ணெய்,பெட்ரோல்,டீசல் விலையை  எண்ணெய் நிறுவனங்களே தங்கள் விருப்பபடி உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கவும் ஆலோசித்து வருகிறது

        போதா குறைக்கு மக்களுக்கு அளித்துவரும் மானியங்களை குறைத்தும், வழங்காமல் மறுக்கவும் முயற்சி செய்வதாக செய்திகள் வருகின்றன.

      இந்தியாவில் அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கும், தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கும், இந்திய அரசு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. உற்பத்தி பொருள்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு வரி சலுகை, மின்சாரம், குறைந்த வட்டியில் கடன், குறைந்த மதிப்பீட்டில் நிலம் வழங்கி, அந்நிய சக்திகளின் கொள்ளை லாபத்துக்கும்,சுரண்டலுக்கும் அனுமதி அளித்து வருகிறது.

        ஆனால், தனது சொந்த நாட்டு மக்களுக்கு இந்திய அரசு, சூடு வைக்கிறது.  அவர்களது வாழ்க்கையை வளபடுத்தத்   தேவையான நடவடிக்கைகளை  எடுக்க முன்வராமல், மேலும் மேலும் அவர்களுக்கு பதிப்புகளை ஏற்படுத்தவே  முனைந்து செயல்படுகிறது.

         பி.ஜே.பி-அரசு ரயில்வேதுறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது  இதனால் இலட்சக் கணக்கான  இந்திய தொழிலாளர்களின் வேலை  வாய்ப்பைபு, வருமானம் எதிர்காலம் கேள்வி குறியாகும்,  இரயில் போக்குவரத்தை நம்பியுள்ள,கோடிக் கணக்கான மக்களின் வாழ்வும் பாதிக்கப்படும் அபயம் ஏற்பட்டு உள்ளது.

         பொதுவாக முதலீடு செய்யும் எந்த முதலாளியும்,எந்தஒரு நிறுவனமும் தனது  முதலீட்டுக்கு ஏற்ப அதிக லாபத்தை எதிர்பார்ப்பது வியாபார நியதியாகும்.   லாபத்தை எதிர்நோக்கி  முதலீடு செய்யும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தங்களது முதலீட்டுக்கு  ஏற்ப அதிக லாபத்தை அடைய வேண்டி முதலீடு செய்யும் துறையின் நிர்வாகத்தில் சீர்திருத்தம் என்ற பெயரில்   குறுக்கீடு செய்வது தவிர்க்க இயலாததாகும்.

           இரயில்வேயில் முதலீடு செய்யும் அந்நிய நிறுவனங்கள்  முதலில் அதிகமாக தொழிலாளர்களை வேளையில் இருந்து நீக்குவார்கள், பயணிகளின் வசதியை அதிகரிப்பதாக கூறி,     இரயில் கட்டணத்தை தங்கள் இஷ்டத்துக்கு உயர்த்துவார்கள்,  சரக்கு     இரயில் போக்குவரத்தும் பாதிக்கப்படும்.  உணவுப் பொருட்களும் பிற அத்தியாவசியப் பொருட்களும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது கூட சிரமமாகும்

 இதனால , செயற்கையான தட்டுப்பாடும், அதன் தொடர்ச்சியாக பொருட்களின் விலையேற்றமும்  வரலாறு காணாத வகையில் உயரும் நிலை ஏற்படும்.

     எல்லாவற்றிலும் கொள்ளை லாபமும்,சுரண்டலும் நடக்கும். பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்கு  அப்பாவி பொதுமக்களின் உழைப்பும் வாழ்க்கையும்  பலியாகும்.       எந்த காரணத்திற்க்காக பொதுமக்கள் காங்கிரசை வெறுத்து, பி.ஜே.பி-அரசை  கொண்டுவந்தார்களோ,  அதனை  பி.ஜே.பி அரசு காங்கிரசை விட வேகமாக செய்ய முனைந்து வருகிறது.

      இதனைபார்க்கும்போது, எரியிற கொள்ளியில் தலையை சொறிவதற்கு பயந்து எண்ணைச் சட்டியிலே விழுந்துவிட்ட கதைபோல தெரிகிறது,இந்திய மக்களின் நிலை !


   

  

Wednesday, 2 July 2014

பிரதமர் மோடியின் கவர்ச்சி எத்தனை நாட்கள்?

              இந்தியாவை காப்பற்ற வந்தவர்,அவதாரம்,வளர்ச்சியின் நாயகன் என்று தேர்தலுக்கு முன்பு தூக்கி கொண்டாடிய இந்தியமக்கள் இரயில் கட்டண உயர்வு,சர்க்கரை விலை உயர்வு,பெட்ரோல்,டீசல் விலை உயர்வு,சரக்கு கட்டணங்கள் உயவு,தொடர்ச்சியாக காய்கறிகள்,அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றம் ஆகிய பிரச்னைகளில் இப்போது  சிக்கித் தவிக்கிறார்கள்.!

           தேர்தலில் மோடிக்கு வாக்களிக்காதவர்களுக்கு மட்டும் இந்த பிரசனை இல்லை. வாக்களித்தவர்களுக்கும்,மோடியை வானளாவப் புகழ்ந்தவர்களுக்கும் சேர்த்துதான் இப்போது பிரசனை ஏற்பட்டு இருக்கிறது.

          தேர்தலுக்கு முன்பு  எதையெல்லாம் காங்கிரஸ் அரசின் மோசமான செயல்பாடாக,நிர்வாக சீர்கேடாக சொல்லி,பி.ஜே.பி  கட்சி பிரசாரம் செய்ததோ அத்தனை பிரச்னைகளும் மோடியின் நிர்வாக மேம்பாட்டால் அதிகரித்து உள்ளது.

         வெகுஜன மக்களிடம் அரசும்,காங்கிரசின் இமேஜும் சரிந்துவிடும் என்று நினைத்தும்,இடதுசாரிகள் போன்ற கட்சிகளின் எதிர்ப்பை சந்திக்க வேண்டி  இருக்குமே என்ற தயக்கதாலும் காங்கிரஸ் அரசு புதிய பொருளாதாரக் கொள்கையை, சீர்திருத்தங்களை மெதுவாக செய்துவந்தது.

         ஆனால்,  மோடியின் அரசு மக்களுக்கு எதிரான,மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களை மிக வேகமாக செய்ய ஆரம்பித்து இருக்கிறது.கசப்பு மருந்தை சாப்பிட்டுதான் ஆகவேண்டும் என்று விளக்கம் சொல்லுகிறது. உண்மையில் அது கசப்பு மருந்துதானா? நோயை குணமாக்குமா?அல்லது உயிரைப் பறிக்கும் விஷமா?  என்று பலருக்கும்  குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

        இதனை மோடியின் அரசின்மீது எனக்குள்ள அதிருப்தியை காட்டவோ, அல்லது வெறுத்தோ எழுதுவதாக யாரும் கருதவேண்டியதில்லை..

         மோடியை பிரதமராக்கிய கார்பரேட்டுகள், பன்னாட்டு முதலீட்டாளர்கள்,  இந்தியாவை சுரண்ட இந்தியாவில் அந்நிய முதலீடுகளை அதிக அளவில் செய்ய உத்தேசித்து இருப்பவர்கள்  மோடியை சுயமாக செயலாற்ற விடுவார்களா? அதுவும் எதையும் உடனே தங்களுக்கு சாதகமாக செய்துகொள்ள நினைக்கும் பேராசை பெருமுதலாளிகள் நிர்பந்தத்தின்  பேரிலேயே மோடியின் அரசு நடந்து கொள்வதாக  தோன்றுகிறது.       ஜூன் 2-ம் தேதியில் இருந்து 27-ம் தேதிவரையில் இந்தியாவில் அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு ரூ.31764 கோடி செய்யப்பட்டு உள்ளது. இந்திய பங்குகளில்,கடன்பத்திரங்களில்,ஊகபேர வர்த்தகம் என்னும் ஆன்லைன் வர்த்தகத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடு இந்திய பொருளாதாரத்தை, உழைப்பே இன்றி அந்நிய முதலீட்டாளர்கள் சுரண்டவும்,கைப்பற்றவும் மேற்கொண்டிருக்கும்  முயற்சியாகும்.

        கார்பரேட்டு கம்பனிகள்,பன்னாட்டு நிறுவனங்கள்,பெருமுதலாளிகள் நலனை விரும்பும் மோடி அரசால், ஏழைகள் நடுத்தரமக்கள் தங்களது அன்றாட வாழ்கையை நடத்துவதற்கே சிரமப்படும் நிலைக்கே ஆளாகி வருவார்கள். அத்தகைய மக்களிடம் மோடிமீது அவர்களுக்கு இருக்கும் கவர்ச்சி இன்னும் எவ்வளவுகாலம் நீடிக்கும்?  என்பதே நமது சிந்தனையாகும்!